அத்தியாயம்-10
• இந்த ஒரு பதில்தான், ராஜிவ் கொலை வழக்கில் புலிகளை உள்ளே கொண்டுவந்தது. இந்தப் பதில் வந்திராவிட்டால், கேஸ் வேறு விதமாகப் போயிருக்கும்! ஒருவேளை புலிகளில் சம்மந்தம் கூட தெரிய வந்திராது!
ஹரிபாபு எடுத்த பத்து போட்டோக்களில் முதலாவது போட்டோவை, ஹிந்து பத்திரிகை வெளியிட்டிருந்தது என்று கடந்த அத்தியாயம் ஒன்றில் (கடந்த அத்தியாயங்களை பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்) கூறினோமல்லவா? அந்த போட்டோவை ஹிந்து பத்திரிகையில் பார்த்த சென்னை பத்திரிகையாளர் ஒருவர், அதிர்ந்து போனார்.
காரணம், அவருக்கு அந்த போட்டோவில் இருந்த ஒருவர் தொடர்பாக முக்கிய விஷயம் தெரிந்திருந்தது.
ஹிந்து பத்திரிகை, முதலில் தனக்கு கிடைத்த போட்டோவை எடிட் செய்து, மூன்று பெண்கள் மாத்திரமே போட்டோவில் இருக்கும்படி வெட்டி, லே-அவுட் செய்திருந்தது. ஆனால் மறுநாள், ஹிந்து ஆசிரியர் குழு என்ன நினைத்தார்களோ, எப்படி ஊகித்தார்களோ தெரியாது, அதே போட்டோவை வெட்டாமல், முழுமையாக பிரசுரித்திருந்தது.
இரண்டாவது நாள் பிரசுரித்த முழுப் படத்துக்கான விளக்கத்தில், “முன்று பெண்களில் இருந்து சற்றே தள்ளி நிற்கும் குர்தா- பைஜாமா நபர் யார்?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.
இரண்டாவதாக பிரசுரமான போட்டோவில், மூன்று பெண்களில் இருந்து சற்றே தள்ளி நின்ற குர்தா- பைஜாமா நபர் பற்றியே இந்த சென்னைப் பத்திரிகையாளருக்கு தெரிந்திருந்தது. (குர்தா- பைஜாமா நபர்தான், பின்னாட்களில் சிவராசன் என்று அறியப்பட்டவர்)
தகவல் தெரிந்தவர் ஒரு பத்திரிகையாளர் என்பதால், யாரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விஷயம் அவருக்குத் தெரிந்திருந்தது. இதனால் அவர், லோக்கல் போலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளாமல், நேரே ‘மல்லிகை’யில் இருந்த சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவின் அலுவலகத்தை, போனில் தொடர்பு கொண்டார்.
“ஹிந்து பத்திரிகையில் வெளியாகியுள்ள புகைப்படத்திலுள்ள நபரை நான் சந்தித்திருக்கிறேன். அதுவும், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அதே தினத்தில், குண்டுவெடிப்பு நடந்த அதே மைதானத்தில் வைத்து அவரைச் சந்தித்திருக்கிறேன்” என்று போனில் தெரிவித்தார், இந்த பத்திரிகையாளர்.
இந்தத் தகவலால் பரபரப்படைந்தது புலனாய்வுக்குழு.
காரணம், அந்த நிமிடம்வரை, போட்டோவில் உள்ள குர்தா- பைஜாமா நபர் பற்றிய தகவல்கள் ஏதும் அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை. அவர் யார் என்பதை விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
உடனடியாக இந்த பத்திரிகையாளரை அழைத்து விசாரித்தது கார்த்திகேயன் தலைமையிலான புலனாய்வுக் குழு. அந்த பத்திரிகையாளர் கூறிய தகவல்கள்தான், கேஸின் அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தியது!
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவம், மிக ரகசியமாகத் திட்டமிடப் பட்டிருக்க வேண்டும். அதை திட்டமிட்டவர், குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் நிறைவேற்றியவர்கள், யாரையுமே, யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்திருந்தால்தான், அது துல்லியமான திட்டமாக இருக்கும்.
ஆனால் இங்கு நடந்ததைப் பாருங்கள்.
புலனாய்வுக் குழுவினரிடம், முதலாவது நபரின் அடையாளம் தனக்கு தெரியும் என்று, வலிய வருகிறார் ஒரு பத்திரிகையாளர். கொலையைத் திட்டமிட்டவர்களின் திட்டமிடலில், இந்தச் சறுக்கல் எப்படி ஏற்பட்டது?
இதற்கு ஒரேயொரு பதில்தான் உள்ளது. கொலையைத் திட்டமிட்டவர் (சிவராசன்) தனக்கு உதவி செய்ய பிடித்த நபர்களில் ஒருவர், பலராலும் அறியப்பட்டவர். அதுவும், பத்திரிகையாளர் வட்டத்தில் அந்த நாட்களில் ஓரளவுக்கு பிரபலமானவர்.
அவர்தான், ராஜிவ் காந்தியைக் கொல்வதற்காக சென்றவர்களால் போட்டோ எடுக்க அழைத்துச் செல்லப்பட்ட போர்ட்டோகிராபர் ஹரிபாபு.
ஹரிபாபுவை சென்னையில் பத்திரிகையாளர்கள் அறிவார்கள். அவர் ஃபிரீலான்ஸ் போட்டோகிராபராக இருந்ததால், பல பத்திரிகையாளர்கள் தமது அலுவலக போட்டோகிராபர் இல்லாத தருணங்களில் போட்டோ எடுக்க ஹரிபாபுவைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த வகையில்தான் அவருக்கு அறிமுகம் உண்டு.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட தினத்தன்று குர்தா-பைஜாமா நபர், தற்கொலை குண்டுதாரியை ராஜிவ்காந்தி பொதுக்கூட்டத்தில் பேசவிருந்த மைதானத்துக்கு அழைத்துச் சென்றபோது, ஹரிபாபுவையும் அழைத்துச் சென்றிருந்தார்.
ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் இந்த இருவரும் பொதுக்கூட்ட மைதானத்தின் ஒன்றாகக் காணப்பட்டனர்.
ராஜிவ் காந்தி அன்றிரவு கொல்லப்படவுள்ள விஷயம் தெரிந்திராத ஹரிபாபு, பொதுக்கூட்ட மைதானத்தில் நின்றிருந்த, தனக்கு அறிமுகம் இருந்த மற்றைய பத்திரிகையாளர்களை கண்டவுடன் போய்ப் பேசுவது, இயல்புதானே?
அப்படித்தான் இந்த சென்னை பத்திரிகையாளரிடமும் போய் பேசியிருக்கிறார் ஹரிபாபு.
புலனாய்வுக் குழுவினரிடம் அந்த விபரங்களைத்தான் கூறினார் சென்னை பத்திரிகையாளர் “போட்டோவில் உள்ள குர்தா- பைஜாமா நபர், மைதானத்தில் ஹரிபாபுவுடன் நின்றிருந்தார். ஹரிபாபுதான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்” என்றார் பத்திரிகையாளர்.
இதைக் கேட்டதும், புலனாய்வுக் குழுவினருக்கு, தமக்கு முக்கிய தடயம் ஒன்று கிடைக்கப் போகின்றது என்பது புரிந்துவிட்டது. காரணம், ஹரிபாபுவும் அந்தக் குண்டுவெடிப்பில் இறந்திருந்த விஷயம் அவர்களுக்கு தெரியும். அவர் எடுத்த 10 போட்டோக்கள்தான் அப்போது இருந்த ஒரே தடயம்.
அந்த போட்டோக்களில் இருந்த குர்தா- பைஜாமா நபர், ஹரிபாபுவுக்கு முன்பே அறிமுகமானவர் என்பது தற்போது தெரிந்து விட்டது!
“ஹரிபாபு அந்த குர்தா- பைஜாமா நபரை ஏன் உங்களுக்கு அறிமுகப்படுத்தினார்?” என்ற கேள்வி புலனாய்வு அதிகாரி ஒருவரிடமிருந்து வந்தது.
“பொதுக்கூட்ட மைதானத்தில் என்னைக் கண்டவுடன் வலிய வந்து வணக்கம் சொன்னார் ஹரிபாபு. அதையடுத்து நானும் அவரும் ஓரிரு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போதுதான், அவருடன் கூடவே நின்றிருந்த குர்தா- பைஜாமா நபரை நான் கவனித்தேன். அவர் யார் என்று விசாரித்தேன்”
“அதற்கு ஹரிபாபு என்ன சொன்னார்?”
“குர்தா- பைஜாமா நபர், தனது நண்பர் என்று அறிமுகம் செய்து வைத்தார்.”
“அவரது பெயரைச் சொன்னாரா?”
“பெயரைச் சொல்லவில்லை. ஆனால், வேறு ஒரு விஷயம் சொன்னார். குர்தா- பைஜாமா நபர், பிரபல போட்டோ ஸ்டூடியோ ஒன்றின் பங்குதாரர் என்று சொன்னார். அந்த ஸ்டூடியோ உரிமையாளர் எனக்கும் தெரிந்தவர். எனக்கு மாத்திரமல்ல, தமிழ் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர்தான்”
“யார் அந்த ஸ்டூடியோ உரிமையாளர்? அவரது பெயர் என்ன?”
இந்தக் கேள்விக்கு சென்னைப் பத்திரிகையாளர் கொடுத்த பதில்தான், அவரை விசாரித்துக் கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரை தூக்கிவாரிப் போட்டது. “சுபா சுந்தரம்” என்பதுதான் அந்தப் பதில்.
கேள்வி கேட்டுக் கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகளில் ஒருவர், சென்னைக்காரர். சி.பி.ஐ.யின் சென்னை அலுவலகத்தில் நீண்டகாலம் பணிபுரிந்தவர். அந்த வகையில் அவருக்கு, சுபா சுந்தரம் யார் என்பது தெரிந்திருந்தது.
அவரது அதிர்ச்சிக்கு காரணம், சுபா சுந்தரம், விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்தவர் என்பது இந்த அதிகாரிக்குத் தெரியும்.
அவருக்கு எப்படி தெரியும்? அதற்கு சிறியதாக ஒரு பிளாஷ்-பேக் உண்டு.
தமிழகத்தில் ஈழ விடுதலை இயக்கங்கள் செல்வாக்காக இருந்த 1980களில், இந்திய உளவு அமைப்புகள் அனைத்துமே (றோ, ஐ.பி., சி.பி.ஐ., கியூ பிராஞ்ச்) விடுதலை இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தன. அந்த வகையில் இந்த சி.பி.ஐ. அதிகாரி பணியில் இருந்தபோது, விடுதலைப் புலிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
அப்போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் மற்றும் பத்திரிகைத் தொடர்புகளை சென்னையில் கவனித்து வந்தவர், பேபி சுப்ரமணியம் (பேபி அண்ணன் என்று அழைப்பார்கள்). அவரைத்தான், இந்த அதிகாரி சந்திக்க வேண்டியிருந்தது.
இவர் அவரைத் தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட இடம் ஒன்றுக்கு வருமாறு கூறியிருந்தார். இவரும் அந்த இடத்துக்குச் சென்றுதான் அவரைச் சந்தித்தார். அதன் பின்னரும் சில தடவைகள் அதே இடத்தில் வைத்துத்தான், பேபி சுப்ரமணியத்தைச் சந்தித்தார் இந்த சி.பி.ஐ. அதிகாரி.
இவர்கள் சந்தித்த அந்த இடம், சுபா சுந்தரத்தின் போட்டோ ஸ்டூடியோ!
இந்த இடத்தில் தொடருக்கு சம்மந்தமற்ற மற்றொரு விஷயம். இங்கு குறிப்பிடப்பட்ட பேபி சுப்ரமணியம், புலிகளுக்கும் ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின்போது (மே, 2009), வன்னியில் உயிருடன் இருந்தார். யுத்தம் முடிவுக்கு வந்தபின், மக்களோடு மக்களாக இவரும் ராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றார் என்று சிலர் கூறுகின்றனர். அதன்பின், அவருக்கு என்ன ஆனது என்று தகவல் இல்லை.
சென்னைப் பத்திரிகையாளரிடமிருந்து சுபா சுந்தரத்தின் பெயர் வெளியானபோதுதான், இந்தக் கொலைக்கும், புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம், சி.பி.ஐ.க்கு முதன்முதலில் ஏற்பட்டது. சென்னை பத்திரிகையாளர் கூறிய மற்றைய தகவல்கள் அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தின.
இதோ அவர் தெரிவித்த தகவல்கள்: “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், ஹிந்து பத்திரிகையில் வெளியான போட்டோவில் குர்தா- பைஜாமா நபர் இருப்பதை நான் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் சுபா சுந்தரத்தின் பார்ட்னர் என்று அறிமுகம் செய்து வைக்கப் பட்டதால், நான் சுபா சுந்தரத்துக்கு போன் பண்ணினேன்”
“சுபா சுந்தரம் என்ன சொன்னார்?”
“குர்தா- பைஜாமா நபர் தனது பார்ட்னர் அல்ல என்றார். அவர் யார் என்றே தமக்குத் தெரியாது என்றும் அவர் கூறிவிட்டார். ஆனால், ஹரிபாபு பற்றி ஒரு தகவலைக் கூறினார்.”
“என்ன தகவல்?”
ஹரிபாபு தன்னிடம் இருந்த கேமரா ஒன்றை இரவல் வாங்கியதாகவும், அதை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் சொன்னார். அந்த கேமராவை அவர் தேடிவருவதாகவும் சொன்னார்”
“கேமராவா? அது என்ன கேமரா என்று அவர் சொன்னாரா?”
“சொன்னார். ‘சினான்’ கேமரா என்று சொன்னார்” என்றார் பத்திரிகையாளர்.
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் கிடைத்த ஒரு கேமரா பற்றி எழுதியிருந்தோம் அல்லவா? அதில் இருந்த பிலிம்ரோலில் இருந்துதான், ராஜிவ் கொல்லப்பட்ட இறுதிக் கணங்களின் 10 போட்டோக்களும் கிடைத்தன என்றும் சொன்னோம் அல்லவா?
அதுவும் ஒரு ‘சினான்’ கேமராதான்!
(11ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)
நன்றி.
விறுவிறுப்பு.கொம்