ஈழம்

ஈழம்

சனி, 12 நவம்பர், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-13

அத்தியாயம்-13


‘தி ஹிந்து’ பத்திரிகை மீண்டும் ஒருமுறை காட்சிக்குள் வந்தது.  ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்குமுன், அவரை ரகசியமாகச் சந்தித்த ஒருவரைப் பற்றி செய்தி வெளியிட்டு, மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, மீடியா சர்க்கிளில் மகத்தான ஸ்கூப் அடித்தது தி ஹிந்து.
மே 25 ஆம் திகதி, ‘இந்த மார்ச் மாதம் ராஜிவ் காந்தியை ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் சந்தித்தார்’ என்ற தலைப்பில் ஹிந்து ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் ஒரு செய்தி வெளியானது.

அந்தச் செய்தி என்ன சொன்னது? இதோ, இதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்-

10, ஜன்பத், புதுடில்லியில் உள்ள ராஜிவ் காந்தி இல்லத்தில், மார்ச் 25ம் தேதி,  விடுதலைப்புலி உறுப்பினருக்கும், ராஜிவ் காந்திக்கும் இடையிலான ஒரு ரகசியச் சந்திப்பு நடைபெற்றது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே  இச்சந்திப்பு நடந்துள்ளது.

ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட 1987ல் இந்திய அமைதிப்படை அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அங்கே,  விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக இந்திய அமைதிப்படையை யுத்தம் புரிந்ததில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளுக்குப் பின்னால், முதல்முறையாக ராஜிவ் காந்திக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு இதுதான். இரு தரப்புக்கும் இடையே இந்தச் சந்திப்பின்பின்  சுமூக உறவு உருவானது.

மேலேயுள்ள செய்தியை வெளியிட்ட ஹிந்து பத்திரிகை,  மார்ச் மாதச் சந்திப்பு சுமூகமாக நடைபெற்றுள்ள நிலையில், ராஜிவ் காந்தியை கொல்வதற்கான நோக்கம் விடுதலைப் புலிகளுக்கு இருந்ததாகக் கூறுவது சரிதானா? என்று கேள்வியும் எழுப்பியிருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், ராஜிவ் காந்தியை கொல்வதற்கு விடுதலைப்புலிகள் இயக்கம் கொன்றிருக்க முடியாது என்ற டோனில் இருந்தது அப்பத்திரிகை அன்று வெளியிட்டிருந்த செய்தி.

ஆனால், வெளியே ஈழத் தமிழர் மத்தியில் வேறு ஒரு விதமான நியூஸ் லைன் இதற்கு பரவலாக அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.

இந்த இடத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீடியா ஹான்டிலிங் பற்றி சில வரிகள் குறிப்பிட வேண்டும். அப்போதுதான், ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக இரு நியூஸ் லைன்கள் ஓடுவது எவ்வாறு சாத்தியம் என்பது புரியும்.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஒருவித ‘மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை’ அனுமதிக்கும் அமைப்பு.  அதற்காக அவர்களே அப்படியான செய்திகளை வெளியிடுவார்கள் என்று அர்த்தம் அல்ல.  வன்னியில் அவர்கள் லேசாகத் தும்மினால், “இந்து சமுத்திரத்துக்கு அப்பால் இடியோசை கேட்டது. புலிகளின் கோபக் கர்ஜனையால் சிங்கள தேசமே குலை நடுங்கியது” என்று எழுத ‘பிரைவேட் ஆய்வாளர்கள்’ உள்ளார்கள்.

ஈழத்தமிழர் மீடியாக்களில் ஈயடிச்சான் காப்பி அதிகம் என்பதால், இந்த ‘இடியோசை’  வெவ்வேறு வர்ஷன்களில் சுற்றிச் சுற்றி வரும்.  

இப்படியான இடியோசைகள் எழுவதை விடுதலைப்புலிகள் மறுப்பதில்லை. வெளிநாடுகளில் அதனால் அவர்களுக்கு வேறு விதமான பலன் உண்டு என்பது வேறு விஷயம்.

1980களின் இறுதியில், தமிழகத்தின் பிரபல புலனாய்வு வார இதழ் ஒன்றில், “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், வேதாரண்யம் கடற்கரையில் படகு ஏறச் செல்லும்போது யாரோ துப்பாக்கியால் சுட்டார்கள். துப்பாக்கி தோட்டா வலது கையில் பாய்ந்த நிலையிலும், கடலில் குதித்து இடது கையை உபயோகித்து நீந்திச் சென்று, இலங்கை கரையை அடைந்தார்” என்றும் ஒரு தகவல் வெளியானது.

அதை எழுதிய ஆசாமியை வேதாரண்யம் அழைத்துச் சென்று, “இதுதான்யா சமுத்திரம். நல்லா பாத்துக்க” என்று யாரும் சொன்னதும் கிடையாது. புலிகளும் ஒருகை நீச்சல் விஷயத்தை மறுக்கவும் இல்லை.

இப்படியான ‘டூ-டயர்’ மீடியா ரிப்போர்ட்டிங் சிஸ்டம் இருந்த காரணத்தால், ராஜிவ் காந்தி கொலையான அடுத்த வாரமே, ஈழத் தமிழர் மீடியாக்கள் பலவற்றில், ராஜிவ் கொலையை புலிகள் செய்த வீர சாகசச் செயலாக வர்ணித்து நியூஸ் ஸ்டோரிகள் வரத் தொடங்கின.

“புலிகள் ஏன் அதைச் செய்தார்கள்?” என்று அரசியல் ஆய்வுகள் ஒரு பக்கம் வந்தன. “ராஜிவ் கொலையால் சர்வதேசமே புலிகளை பிரமிப்புடன் பார்க்கிறது” என்ற உசுப்பேற்றல் ஆய்வுகள் மறுபக்கம் வந்தன.

இந்த வகையில், ராஜிவ் காந்தி கொலை பற்றிய புலனாய்வு தொடங்கி, புலனாய்வாளர்கள் எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னமே, ஈழத் தமிழர் மத்தியில், “ராஜிவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள்” என்பது அப்பீல் இல்லாத கதையாக மாறிவிட்டது.

ராஜிவ் கொலையைப் புலனாய்வு செய்த குழுவின் தலைவர் கார்த்திகேயன், பின்னாட்களில் கொடுத்த பேட்டி ஒன்றில், “ராஜிவ் காந்தி கொலையில் புலிகளின் பங்கு உள்ளது என்ற முடிவுக்கு நாம் (சிறப்பு புலனாய்வுக் குழு) வருவதற்கு முன்னரே, தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் இருந்த ஈழத் தமிழ் அகதிகள், ராஜிவ் காந்தி கொலைக்கு புலிகள்தான்  பொறுப்பு என்று நாம் விசாரித்தபோது குறிப்பிட்டனர். தமிழகத்தில் பரவலாக வசித்துவந்த ஈழத் தமிழர்களும் அதையே சொன்னார்கள்” என்று கூறினார்.

அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. அந்த நாட்களில் ஈழத்தமிழர் மத்தியில், “புலிகள் இதைச் செய்யவில்லை” என்று கூறுபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இதனால், ராஜிவ் கொலை பற்றிய புலனாய்வே, “புலிகள்தான் கொன்றார்கள் என்று ஈழத் தமிழர்களே சொல்கிறார்கள்” என்ற இம்பிரெஷனுடன் ஆரம்பமாகியது.

இப்படியான சமயத்தில், ஹந்து பத்திரிகை வெளியிட்ட நியூஸ் ஸ்டோரி, தமிழகத்தில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது.

“விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ராஜிவ் காந்தியுடன் ரகசியமாகச் சந்தித்தபின், புலிகள் ஏன் ராஜிவ்வைக் கொல்ல வேண்டும்?” என்ற கேள்வி பரவலாக எழுந்தது. ஆனால், ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் ஹிந்து பத்திரிகை படிப்பதில்லை என்பதால், இது அந்த சர்க்கிளில் பெரிதாக கேள்வியை எழுப்பவில்லை.

மற்றொரு பக்கமாக, ‘பிரைவேட் ஆய்வாளர்கள்’ சிலர், “புலிகள் ரகசிய நடவடிக்கை ஒன்றைச் செய்வதற்குமுன், எதிராளிக்கு சந்தேகம் ஏற்படாதவாறு தமது ஆளை சமாதானம் பேச அனுப்புவது வழக்கம்தானே. அதற்கு பல உதாரணங்கள் உள்ளனவே. இதெல்லாம் புலிகளில் ராஜதந்திரம்… தாக்குதல் தந்திரோபாயம்..” என்றெல்லாம் மீடியாவில் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படியான காட்டு வீசல்கள், பின்னாட்களில் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க சான்ஸ் இல்லை.

‘ராஜிவ் காந்தியை ரகசியமாகச் சந்தித்த புலிகளின் உறுப்பினர்’ என்று ஹிந்து பத்திரிகையில் குறிப்பிடப்பட்டவர் காசி ஆனந்தன் என்று பின்னாட்களில், ‘புலிகளுடன் தொடர்புடைய ஊடகம்’ என்று வர்ணிக்கப்பட்ட ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியது. அதையும், புலிகள் உட்பட யாரும் மறுத்ததாக தெரியவில்லை.

இப்படியான நிலையில், சென்னையிலிருந்து வெளிவரும் ‘நியூஸ் டுடே’ என்ற மாலை நாளிதழ் மே 22ம் தேதி புதிய கதை ஒன்றுடன் வந்தது.  “ஒரு சாட்சியின் ‘திடுக்’ தகவல்” என்பதே அந்தக் கதையின் தலைப்பு.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நிமிடத்தில், அந்த இடத்தில் இருந்த ஒருவர் தமக்கு தெரிவித்த தகவல் என்றது அந்தப் பத்திரிகை. அவர்களது தகவல், “ராஜிவ் காந்தி மேடையை நோக்கிச் செல்லும்போது, ஒரு பெண் முன்னால் வந்து அவர் அருகே சென்றார். அவருடன் மற்றொரு பெண்ணும் கூடவே சென்றதை நான் பார்த்தேன். முதலில் சென்ற பெண், தனது சேலைக்குள் இருந்து வெடிகுண்டு போன்ற பொருளை எடுத்தார்.  மறு விநாடியே,  மறு கையில் வைத்திருந்த ரிமோட் மூலம் அதை இயக்கி வெடிக்க வைத்தார்” என்று பிரசுரம் ஆகியிருந்தது.

எனினும், தமிழகத்தில் வெளியான அநேக தமிழ் பத்திரிகைகள், தமது தலைப்புச் செய்தியில், ‘வெடிகுண்டு மாலை’ என்று அலறின.

“ராஜிவ் காந்திக்கு போடுவதற்காக வைத்திருந்த மாலை ஒன்றுக்குள் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை அவருக்கு போடும்போது மாலைக்கு உள்ளே இருந்த குண்டு வெடித்தது” என்பதே கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளும் வெளியிட்ட ஸ்டோரி லைன்.

இப்படியொரு குண்டு வெடிப்பை ஏற்படுத்தக் கூடிய வெடிகுண்டு என்ன சைஸில் இருக்கும் என்பதே தெரியாமல், இந்தக் கதை தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.

வேறு ஒரு பத்திரிகை, “வெடிகுண்டு பூக்கூடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்ததார்” என்று செய்தி வெளியிட்டது.  பூக்கூடைக்குள் எட்டிப் பார்த்த காங்கிரஸ் தலைவர் யார் என்பதை அந்தப் பத்திரிகை குறிப்பிடவில்லை.

இப்படியாக எல்லோருமாக முறை வைத்து ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்க, பத்திரிகையாளர் டீம் ஒன்று கர்நாடக மாநிலத்  தலைநகர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துக்குச் சென்று, ராஜிவ் கொலையில் உபயோகிக்கப்பட்ட வெடிப்பொருள் பற்றி பேட்டி கண்டது.

அந்தப் பேட்டியில் வேறு ஒரு கதை வெளியாகியதை அடுத்த வாரம் படியுங்களேன்.

(14ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)



நன்றி.
விறுவிறுப்பு.கொம் 

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us