ஈழம்

ஈழம்

சனி, 21 ஜூலை, 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 08]

கிறிஸ்தவ மதத்தில் இஸ்ரேல் தொடர்பாகக் காணப்படுகின்ற விடயங்கள் நம்பிக்கைகள் எவ்வாறு இஸ்ரேல் என்கின்ற ஒரு தேசம் உருவாவதற்கும், அந்த தேசம் பாதுகாப்பாக இருப்பதற்கும் காரணமாக இருந்தது, இருந்து வருகின்றது என்று கடந்த சில வாரங்களில் பார்த்திருந்தோம்.

கிறிஸ்வர்களின் புனித நூலான பைபிளில் அதிக நம்பிக்கை கொண்ட பிரித்தானியாவின் வெளியுறவுக் காரியதரிசியான ஆர்தர் ஜேம்ஸ் பால்பர் (Arthur James Balfour) என்பவர், யூதர்கள் தமது தேசத்தில் சென்று குடியமர்வதற்கு உரித்துடையவர்கள் என்ற வாதத்தை முன்வைத்து மேற்கொண்ட நகர்வுகள் பற்றி பார்த்திருந்தோம்.

அதேபோன்று, உலக வரலாற்றிலும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்ற யொம் கிப்பூர் யுத்தத்தில் (Yom Kippur war)  தோல்வியின் விளிம்பில் நின்ற இஸ்ரேலை அமெரிக்க அரச தலைவர் ரிச்சரட் நிக்சன் (Richard Nixon)  இனது கிறிஸ்தவ நம்பிக்கை எவ்வாறு காப்பாற்றியிருந்தது என்றும் நாம் விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

இஸ்ரேலியர்கள் தம்மைச் சுற்றி கிறிஸ்தவ சமூகம் என்கின்ற பாதுகாப்பு வேலியை போட்டதன் ஊடாக, தமது தேசத்தை எவ்வாறு காப்பாற்றி வருகின்றார்கள் என்றும், அதே வேளை ஈழத் தமிழர்கள் இவ்வாறான ஒரு பாதுகாப்பு வேலியைத் தம்மைச் சுற்றிப் போடாததன் காரணமாகவே பின்னடைவுகள் எங்களை இலகுவாக நெருங்க முடிகின்றது என்றும் நாம் பார்த்திருந்தோம்.(பல காரணங்களுள் இதுவும் ஒன்று)

இப்போழுது கேள்விக்கு வருவோம்.

இஸ்ரேலியர்களுக்குத்தான் கிறிஸ்தவ உலகின் பாதுகாப்பு வலயம் இருக்கின்றதே - ஈழத் தமிழருக்கு யார் இருக்கின்றார்கள்?

ஈழத் தமிழர்களுக்கு எந்த மதக் குழுமம் நட்பு சக்தியாக அமையமுடியும்? 


ஈழத் தமிழர்களின் நேச சக்திகள் என்று யார் எமக்கு இருக்கின்றார்கள்? 


எப்படி எங்களுக்கான ஒரு பாதுகாப்பு வலயத்தை எங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்?

இப்படியான கேள்விகள் சிலரது மனங்களில் எழலாம்.
இதுபோன்ற கேள்விக்கான பதில்- ஈழத் தமிழர்களாலும் முடியும் என்பதுதான்.

ஆம். ஈழத் தமிழருக்கான பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிக்கொள்ள நிச்சயம் எங்களால் முடியும். இஸ்ரேலியர்களை போலவே எங்களுக்கும் பல இனக் குழுமங்கள், மதக் குழுமங்கள் நேச சக்திகளாக இருக்கின்றன. அந்த நேச சக்திகளை நாம் சரியான முறையில் எங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே தவிர, நேச சக்திகளே எங்களுக்குக் கிடையாது என்று நாம் கூறிவிட முடியாது.

இன்றைய உலகில் ஒரு தரப்பிற்கு அல்லது ஒரு இனத்திற்கு அல்லது ஒரு நாட்டிற்கு மத ரீதியிலான – அதுவும் குறிப்பாக கிறிஸ்தவ பாதுகாப்பு வலயம் இருக்கின்றதென்றால் அதனைப் போன்ற சாதகம் வேறு எதுவுமே இருந்துவிட முடியாது.

இஸ்ரேலியர்களால் பெற முடிந்த அந்தச் சாதகத்தை ஈழத் தமிழர்களால் பெறமுடியாமல் போயிருந்தது உண்மையிலேயே எமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட ஒரு இராஜதந்திரப் பின்னடைவு என்றுதான் கூறவேண்டும்.

உதாரணத்திற்கு கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் உலகின் பல நாடுகளிலும், குறிப்பாக மேற்குலகின் பல தெருக்களிலும் ஈழத் தமிழர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தமது கைகளில் புலிக்கொடிகளையும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படங்களையும், வன்னியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் இரத்தம் தோய்ந்த காட்சிகளையும் தாங்கிக்கொண்டு வீதிகளில் இறங்கியிருந்தார்கள். உலகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இந்த கவனயீர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதில் எங்களால் பெரிதாக வெற்றி காண முடிந்ததா என்று பார்த்தால் அதில் பாரிய அளவிற்கு எம்மால் வெற்றியீட்டியிருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதேவேளை, ஈழத் தமிழரில் ஒரு சிறிய குழு கைகளில் சிலுவைகளையும், பைபிளில் அநீதிக்கு எதிராக கூறப்பட்டிருக்கின்ற சில வாக்கியங்களையும், பாதிக்கப்படுகின்றவர்களுக்கு உதவேண்டும் என்ற கிறிஸ்துவின் போதனைகள் அடங்கிய பதாதைகளையும், வன்னியில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், தேவாலயங்கள் போன்றனவற்றின் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களையும் சுமந்தபடி வீதிகளில் இறங்கியிருந்தால், மேற்குலகின் அத்தனை கவனமும் நிச்சயம் எம்மை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எங்களில் ஒரு தரப்பு அவ்வாறு செய்திருந்தால், எமது பிரச்சனையையும், எமக்கு நடந்த அநீதிகளையும் உலகம் பார்த்திருக்கும். எமக்கெதிரான அவலத்தைத் தடுக்க மேற்குலகம் நிச்சயம் முயன்றிருக்கும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் சுமார் 500 ற்கும் அதிகமான கிறிஸ்தவ சபைகள் ஈழத் தமிழர்களால் நடாத்தப்படுகின்றன. இந்தச் சபைகளை நாம் எமது போராட்டத்தின் ஒரு அங்கமாக மாற்றவில்லை என்பது உண்மையிலேயே ஒரு பின்னடைவு என்றுதான் நான் கூறுவேன்.

போராட்டத்தின் அங்கமாக மாத்திரமல்ல போராட்டத்தின் எதிரிகளாகவும் கூட சில பொறுப்பாளர்களால் இந்தச் சபைகள் கையாளப்பட்ட சம்பவங்கள் ஏராளம் இருக்கின்றன.

புலம் பெயர் தமிழ் தேசிய ஊடகமாக ஒரு காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட டீ.டீ.என் ஒரு கிறிஸ்தவ சபையின் விளம்பரத்தை ஒளிபரப்புவதற்கு மறுத்ததை அந்தச் சபையின் போதகர் ஒரு தடவை என்னிடம் கூறி மனவருத்தப்பட்டார்.

விடுதலைப் புலிகளால் சுவிஸில் வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகையில் கிறிஸ்தவ சபையின் முக்கிய நிகழ்சி ஒன்று பற்றி வெளிவந்த விளம்பரம் தொடர்பான பிரச்சனை வன்னிவரை சென்றிருந்தது.

இப்படி கிறிஸ்தவ மத அமைப்புகளுக்கு எதிராக தேசியம் பேசிய எம்மில் சிலரால் மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதங்கள் பற்றி பல முறைப்பாடுகள் இருக்கின்றன.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பொறுப்புக்களில் இருந்த சிலரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நம்பிக்கை காரணமாக இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்கள், புலம்பெயர் நாடுகளில் இருந்த கிறிஸ்தவ மத அமைப்புக்களை போராட்டத்தில் இருந்து அன்னியப்பட வைத்திருந்தது என்பதான ஒரு சுயவிமர்சனத்தை இந்தச் சந்தர்பத்தில் செய்வது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.
அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us