ஈழம்

ஈழம்

திங்கள், 23 ஜூலை, 2012

ஒப்பற்ற தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

ஈழமண்ணின் வரலாறு ஒரு கறைபடிந்த காவியமாகத்தான் இதுவரை வரையப்பட்டிருக்கிறது. தமக்கே உரித்தான தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமக்கென ஒர் அரசை அமைத்து, தமக்கே உரிய மொழி, மத, கலை, கலாச்சார பாரம்பரிய விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்து, பூரண இறைமையுடன் ஈழத்து தமிழ் மக்கள் 15ம் நூற்றாண்டின் இறுதிவரை அந்த மண்ணிலே மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்வாழ்ந்து வந்தார்கள் என்பதை முழு உலகமும் அறியும்.


16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை மண்ணில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களும், தொடர்ந்து டெச்சுக்காரர்களும் இறுதியாகஆங்கிலேயர்களும் தொடர்ச்சியாக 400 வருடங்களுக்கு மேலாக தமிழர்களை தம் அடிமை வலைக்குள் சிக்கவைத்து தமிழ் மக்களின் வாழ்வையும், அவர்கள் இறைமையையும் சீர்குலைத்தார்கள் என்பதையும் முழு உலகமும் அறியாமல் இருக்கமுடியாது. அந்நியர்களான போர்த்துக்கீசரும், டச்சுக்காரர்களும் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த போதிலும், தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கையும், கிழக்கையும் தனி நிர்வாக அலகாகக்கொண்டே ஆட்சி செய்தனர்.

ஆனால் 1796ல் டெச்சுக்காரர்களிடம் இருந்து இலங்கை முழுவதையும் தமதாக்கிக்கொண்ட ஆங்கிலேயர், தமது நிர்வாக வசதிக்காக இலங்கைமுழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து, தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கை இலங்கை வரைபடத்தில் இருந்து நீக்கிய பாதகமான, துரோகத்தனமான செயல். அந்த மண்ணின் கண்ணீர் சிந்தும் வரலாற்று நிகழ்வுகளில் மிகக் கொடூரமானது. மேலும், ஆங்கிலேயர்கள் 1948ம் ஆண்டு இலங்கையை விட்டு நீங்கும்போது ஜனநாயகம் என்ற போர்வையில் இலங்கை முழுவதையும், பெரும்பான்மைமக்களாகிய சிங்களவர் கையில் தாரைவார்த்துவிட்டுத் தப்பித்துக்கொண்ட,ஜனநாயக முறைகேடான நிகழ்வும் அங்குதான் நிகழ்ந்திருக்கிறது.

ஜனநாயக கோட்பாட்டை பேரினவாதக் கோட்பாடாகக் கருதிக்கொண்ட அல்லது மாற்றிக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் செய்த அனர்த்தங்கள் எண்ணற்றவை. இலங்கையிலும், ஈழமண்ணிலும் சிந்திய தமிழர்களின் இரத்தங்களும், சொத்துக்களின் அழிவுகளும், மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும் சோதனைகளும், வேதனைகளும், இழப்புக்களும் எண்ணில் அடங்கா. பொறுத்து,பொறுத்து ஈற்றில் பொங்கி எழுந்த தமிழ்க் குலம், குறிப்பாக இளைஞர்குழாம் தமது இழந்த உரிமைகளை மீளப்பெற்று சுதந்திரமாக வாழச் சித்தம் கொண்டனர்.

தமிழர்கள் இழந்த உரிமைகளை மீள வழங்குவதில் சிங்கள அரசும், மாறிமாறி ஆட்சிக்குவந்த சிங்களத் தலைமைகளும் புரிந்த அரசியல் சாகசங்கள், வித்தைகள், நடவடிக்கைகள் பலப்பல. சமரச முயற்சிகளினால் எழுதப்பட்ட பல உடன்படிக்கைகள் எத்தனைதடவைகள் கிழித்தெறியப்பட்டு காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான அவலங்களுக்கு முழுக்க, முழுக்க சிங்களத் தலைவர்கள் மட்டும்தான் பொறுப்பாளிகள் என்று கூறுவது ஒரு பக்கச்சார்பானது.

குறிப்பாக 1930 களில் இருந்து, ஈழத்தமிழர்களின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக தெரிந்தோ, தெரியாமலோவிட்ட தவறுகளும், கைக்கொண்டதவறான அரசியல் கோட்பாடுகளும், காலத்துக்கு ஒவ்வாத அரசியல் கொள்கைகளும், பல சந்தர்ப்பங்களில் மாற்றான் கைக்கு விலைபோன நிகழ்வுகளும் பலவகைகளில் ஈழத்தமிழர்களின் இன்றைய இந்த அவலநிலைக்கு ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை நியாயவாதிகள் ஒப்புக்கொள்ளாமல் விடமாட்டார்கள். ஆனால் 1983 யூலையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய இனப்படுகொலையின் பின்னர் ஈழத்தின் அரசியல் நிலைமையிலும், தலைமையிலும் ஏற்பட்டமாற்றம்,தமிழர்களின் இந்தப் புரையோடிப்போன துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் ஒரு நிலையான பரிகாரம் கிடைக்கும் என்று தமிழ்த்தேசமும், நன்நோக்குள்ள பிறதேசங்களும் உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கின்றன.

தமிழர்களுக்குக் கிடைத்த தலைமையாக ‘தமிழீழ விடுதலைப்புலிகள்'என்ற அரசியல் அமைப்பும், அதன் ஒப்பற்ற தேசியத் தலைவரே பிரபாகரன் என்பதும் தமிழ் மக்களும் உலகமும் ஒப்புக்கொண்ட ஓர் உண்மையாகும். பேரினவாத சக்திகளுக்கு, பதிலடி கொடுக்கக்கூடிய அரசியல் இராணுவ மாற்றுவழிகளையும், கொள்கைகளையும் மிகவும் திறமையாகவும், சாதுரியமாகவும் தீட்டி, அரசியல் சாணக்கியர்களையும், தன் தளபதிகளையும், போராளிகளையும், உரிய முறையில் வழிநடாத்தி, தமிழ்மக்கள் எல்லோரையும் ஒன்றுதிரட்டி உறுதியுடனும், தூரநோக்குடனும், நாட்டுப்பற்றுடனும், நேர்மையாகவும், உண்மையாகவும் அரசியல் விடிவை நோக்கி விரைந்துசெல்லும் ஓர் ஒப்பற்ற தலைவனாக தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தமிழ் மக்களுக்கு கிடைத்தமை காலம் ஈந்த ஒரு பெரும் பேறாகும்.

கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக, தளராமலும்,உறுதியுடனும், யாருக்கும் விலைபோகாமலும், நேர்மையாகவும், இதயசுத்தியுடன் கொண்ட கொள்கைக்காக, தமிழ்மக்களின் நிரந்தர விடிவுக்காய் தன் உயிரையும் துச்சமாக மதித்து, களத்தில் நின்று போரை வழிநடத்துகின்ற, போராடுகின்ற ஒரு வீரத் தமிழ் மகனை, ஓர் ஒப்பற்ற தேசியத் தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது அவர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். தளபதிகளோடு தளபதிகளாய், கரும்புலிகளோடு கரும்புலிகளாய், போராளிகளோடு போராளிகளாய்,அரசியல் அறிஞர்களோடு சமமாய், தாமும் தலைவனாக மட்டும் இல்லாமல், அநாதரவற்றவர்களுக்கெல்லாம் தாயாய், தந்தையாய், ஊனமுற்றவர்களுக்கெல்லாம் ஊன்றுகோலாய் திகழும் ஓர் ஒப்புயர்வற்ற தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது ஈழமண்ணின் வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும் என்று துணிந்து மகிழ்ச்சியோடு கூறக் கூடியதாய் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

நீதி, நியாயம், தர்மம், என்பன உண்மையானால் இவ்வாசகங்கள் ஈழவரலாற்றின் இறுதி அத்தியாயத்தில் நிரந்தரமாக பதிவு செய்யப்படவேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை. அவ்வாறான ஒர் ஒப்பற்ற தலைவனின் 50வது பிறந்த தினம் 26.110. 2004 அன்று தமிழர்கள் பட்டி, தொட்டிகளிலெல்லாம் கொண்டாடப்படும் இவ்வேளையில், ஈழத்தமிழர் பூரண சுதந்திரம் கொண்ட மக்களாக அந்த மண்ணில் வாழ தலைவனே! நீ வழிசமைக்க வேண்டும் என்று நல்லாசி கூறுவதோடு நீங்கள் நீண்டகாலம் நலமாக வாழவேண்டும் என்று எம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை மனநிறைவோடு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.


வரலாற்றாய்வாளர்,
விரிவுரையாளர், சார்ள்ஸ் ஸ்ரூபேட் பல்கலைக்கழகம்.
அவுஸ்திரேலியா.
கலாநிதி முருகர் குணசிங்கம்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us