ஈழம்

ஈழம்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

தமிழீழத் தேசியத் தலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்-பிரிகேடியர் விதுசா.

அவர் தமிழினம் நிம்மதியான வாழ்வின்றி, நிரந்தரமாகவாழ இடமின்றி சிங்கள அரசினால் கொல்லப்பட்டும் துரத்தப்பட்டுக் கொண்டுமிருந்த  காலத்தில்  தமிழினத்தின் துன்பங்களைப் புரிந்து கொண்டு, தமிழருக்கென நிரந்தர விடுதலை ஏற்படுத்துவேன் என்ற உறுதி கொண்டு, சிறிய வயதிலேயே மாறாத உறுதியோடும், உயர்ந்த இலட்சியத்தோடும் தனித்து விடுதலைக்கான பாதையில் காலடி எடுத்து வைத்த ஒப்புயர்வற்ற மனிதன்.

ஆக்கிரமிப்பாளர்கள் துப்பாக்கி கொண்டு தமிழினத்தை அடக்கிய, அழித்த காலத்தை மாற்றி அதே துப்பாக்கிகளை தமிழரின் கையில் கொடுத்து நிமிர்ந்து நிற்கும் வரலாறு படைத்த அற்புதமானவீரன். இவருக்குள்ளே நிறைந்திருக்கின்ற பன்முக ஆற்றல் அளவிடற்கரியது. சாதாரணமான வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதது. தலைவர் அவர்கள் போராளிகளில் வைத்திருக்கின்ற பற்று ஆழமானது. எப்போதும் மாறாதது.


என்னைப் பொறுத்தவரை தலைவரின் அருகிலான போராட்ட வாழ்வு இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்த போது மணலாற்றுக் காட்டிலிருந்து ஆரம்பமானது. அன்றுதொட்டு இன்றுவரை அவர் போராளிகளில் காட்டுகின்ற பரிவு, அவர்கள் மீதான அக்கறை என்பது ஒரு தேசத்தின் தலைவர் என்பதையும் மீறி, ஒரு தந்தையை, தாயைப் போன்றதாக அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

நாம் மணலாற்றுக் காட்டில் இருந்தபோது யாருடைய கொட்டிலிலாவது இரவு இருமல் சத்தம் கேட்டுவிட்டால், மறுநாட் காலையிலேயே பொறுப்பாளரை அழைத்து யாருக்கு என்ன வருத்தம் என்பதைக் கேட்டறிந்து அதற்குரிய மருந்துகளையும் ஒழுங்குபடுத்துவார். அதேபோல எமக்குரிய எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதனை எமது நிலையில் நின்று விளங்கி, தீர்ப்பது அவரது இயல்பு.

இவ்வாறு எமது பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொண்டு தலைவர் என்ற நிலையில் மட்டுமல்லாது, ஒரு குடும்பத்தின் தலைவர் போன்று எம்மை வழிநடத்தும் விதம், எமக்கு இப்போதும்கூட எந்த விடயத்தையும் மனம் திறந்து கதைக்கின்ற நெருக்கமான நட்பார்ந்த உறவை அவர்மீது ஏற்படுத்தியிருந்தது.

எமக்குத் தரப்படுகின்ற உணவு, உடை தொடர்பான அனைத்துமே சிறப்பானதாக அமையவேண்டும் என்பதில் முழுமையான அக்கறை எடுப்பார். அதேபோல சண்டைக்களங்களில் எமது பகுதிகளில் வீண் இழப்புக்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே பல விடயங்களை ஊகித்தறிந்து, எம்மிடம்  சொல்லுகின்ற பண்பு அவருக்கே உரித்தானது.

நாம் காட்டில் நின்ற போது உணவு, தண்ணீர் முதலிய அடிப்படைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள நீண்ட தூரத்திற்கே செல்லவேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் நாம் புறப்பட முன் தலைவர் எமது பணிபற்றியும், எந்தப் பகுதியால் எவ்வாறு போகவேண்டும், யார் முதலில் போகவேண்டும், இராணுவம் எதிர்ப்பட்டால் எவ்வாறு தாக்குதலை ஆரம்பிக்கவேண்டும் என்பது போன்ற சகல விடயங்களையும் சொல்லியே அனுப்புவார்.

இதனால் மணலாற்றுக் காட்டில் தலைவருடன் இருந்த போராளிகள் தேவையற்ற இழப்புக்களைச் சந்தித்த சம்பவமே இல்லை எனலாம். இதே போலத்தான் தற்போது கூட தலைவரைச் சந்திக்கின்ற போதெல்லாம் எல்லோருக்கும் தரமான, சுவையான உணவுகள் கிடைக்கின்றதா, என்பதைக் கேட்டறிவதுடன், சத்துள்ள உணவுகள் கிடைக்கவேண்டும் என்பதிலும் கவனம் எடுக்கும் தன்மை அவரது பரிவிற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

அத்துடன் அக்காலத்தில் சீருடை பெரும் பிரச்சினையாக இருந்தது. பிரச்சினையை விளங்கி அந்த இராணுவ நெருக்கடியிலும் துணியை ஒழுங்கு செய்து உடுப்பைத் தைத்து அவ்வுடுப்பை போடச்சொல்லி தானே நேரில் பார்த்து சீருடையை ஒழுங்குபடுத்தினார். அதே போல தற்போதும் அமைப்பின் சீருடையில் மாற்றம் ஏற்படுத்தவேண்டும் எனச் சொல்லி சீருடைகளைத் தைத்த பின்பு போராளிகளைப் போடவைத்து நேரில் பார்த்து ஒழுங்கு படுத்தினார்.

இந்தத் தன்மைகள் தலைவர் எந்த உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எப்போதும் மாறாத மனப்பான்மை உடையவர் என்பதை வெளிப்படுத்துகின்றது. அதேநேரம் மக்கள்மீதும் அவரது பரிவு அதிகமாக இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

இந்திய இராணுவம் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த காலத்தில் தமிழ்த்தேசத் துரோகிகள் எமது போராளிகளின் பெற்றோரைச் சுட்டுக் கொலைசெய்து கொண்டிருந்த போது, எமது அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர் ஒருவர் இதற்குப் பதிலாக நாமும் அவ்வாறு செய்தால் என்ன என கடுமையாக ஆத்திரப்பட்ட போது. இதைக் கேட்ட தலைவர் கோபத்துடன், “அந்த அப்பாவிப் பெற்றோரைக் கொன்று குவிப்பதால் எதுவித பயனும் இல்லை. முடிந்தால் சுட்டவரைத் திருப்பிச் சுடும்படி சொன்னார்”. இது எல்லோருக்குமே ஒரு பாடமாக அமைந்தது.

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக் காலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். புளியங்குளத்தில் எமது அணிகள் நின்ற போது நான் மாங்குளம் வீதியால் சென்றசமயம்  வீதியின் அருகிருந்த தேநீர்க்கடை  ஐயா ஒருவர் என்னை மறித்து “பிள்ளை இந்தக் கடையில் சரியான வருமானமும் இல்லை. ஆனால் தீர்வையும் கொடுக்கவேண்டியிருக்கு.


வருமானம் குறைந்த எங்களுக்கு தீர்வை கொடுக்க இயலாது. என்ன பிள்ளை செய்கிறது. நான் தலைவருக்கு ஒரு கடிதம் தாறன். குடுத்து விடுவீங்களோ?” எனக் கேட்டார். நான் அவரது கடிதத்தை தலைவரிடம் அனுப்பினேன். உடனேயே தலைவர் அதற்குரிய நடவடிக்கையை எடுத்திருந்தார். ஜெயசிக்குறு சண்டை நெருக்கடியிலும் ஐயாவின் பிரச்சினைக்கு தீர்வு செய்தமையானது என் மனதில் தலைவர்பற்றிய மதிப்பீட்டை இன்னும் ஒருபடி உயர்த்தியிருந்தது.

நாம் குடாநாடு நோக்கி சமர்முனையை விரித்த போது தலைவர் முதலில் குறிப்பிட்ட விடயம் மக்களின் உயிர், உடமை தொடர்பான விடயமே. யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிவாக வாழுகிறார்கள். ஆகவே தாக்குதல்களைச் செய்யும்போது கூடுதலான இராணுவம் ஒரு சில மக்களை கேடயமாகப் பயன்படுத்தி எம்மீது தாக்குதலைத் தொடுக்க முனைந்தாலும், இராணுவத்தின்மீது எறிகணைத் தாக்குதலைச் செய்யாது, அருகே நெருங்கிச் சென்று சிறுரக ஆயுதங்கள் மூலமே தாக்குதலைச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை  முற்கூட்டியே எமக்குத் தெரிவித்திருந்தார்.

இது, எமது போர் நடவடிக்கைகளின் போது மக்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்து எமது கடமைகளைச் செய்யவேண்டும் என்ற மன உணர்வை ஏற்படுத்தியது. அத்துடன் நாம் உபயோகிக்கின்ற ஒவ்வொரு பொருட்களும் மக்களினது பணத்தில் வாங்கப்பட்டவை என்பதைச் சொல்லி வெடிபொருட்கள், உணவு, உடை என எதிலுமே கவனக்குறைவாக இருப்பதை சிறிதளவும் அனுமதிக்கமாட்டார்.

ஒரு சண்டைக்குச் செல்லும்போது வெடிபொருள் தொடக்கம் அனைத்தையும் தேவைக்கு அளவாகவே அனுமதிப்பார். இவ்வாறு சிக்கனமாக இருக்கவேண்டிய பொருட்களை வீணாக்கும் நேரத்தில்தான் அவரிடம் கோபத்தைக் காணமுடியும். ஆற்றல்களின் பிறப்பிடமான தலைவர் அவர்களிடம் நாம் கண்ட பண்புகளில் இன்னொன்று, சிறந்த திட்டமிடுதல் ஆகும். எந்த விடயத்தையும் ஆழமாக சிந்தித்து, அதற்கேற்ற முறையில் ஒவ்வொன்றையும் கையாள்வார்.

எந்தவொரு சண்டையும் தலைவரின் மனவெளியில் அரங்கேறி நிகழ்ந்து முடிந்த பின்னரே, களத்தில் அரங்கேறும் என்பதற்கு ஒவ்வொரு தாக்குதலின் நுணுக்கமான திட்டமிடல்களே   சான்றுகளாகும். தாக்குதலின்போது ஏற்படுகின்ற சிக்கல்களைத் தவிர்க்க, பயிற்சி நடவடிக்கையில் அதற்கான தயார்படுத்தலைச் செய்கின்ற தன்மை, அவருக்கே உரிய உயர் தனிப்பண்பு ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாக பல விடயங்களைக் குறிப்பிடலாம்.


1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது அணி பலாலிப் பகுதியில் காவலரண்களை அமைத்து நின்றது. போதிய சண்டை அனுபவம் அற்ற அணிகளும் அணித் தலைவர்களும் இருந்த அக்காலகட்டத்தில், படையினரின் அச்சுறுத்தல் என்பது சற்று அதிகமாகவே இருந்தது, அத்துடன் எமக்கும் இராணுவத்திற்கும் இடையிலான இடைவெளி குறைவாக இருந்ததுடன் அடிக்கடி இராணுவத்தின் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இதனால் எமது போராளிகளில், பலர் வாயில் குப்பியை வைத்தபடியே காவற்கடமையில் ஈடுபட்டனர். இதையறிந்த தலைவர் என்னைக் கூப்பிட்டு, “இராணுவத்தின் கையில் இருக்கும் ஆயுதம்தான் உங்கட கையிலையும் இருக்கு, உங்களை அங்கு சாவதற்குநான் அனுப்பவில்லை. இவ்வாறுதான் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுவீர்களாக இருந்தால், அவ்வளவு பேரும் பின்னுக்கு வாங்கோ.

இதைப்பற்றி அங்கு எல்லோரிடமும் கதைத்து இதற்கு ஒரு முடிவை எடுங்கோ” என்று கூறியதுடன் அந்தப் பகுதியின் இயல்பினையும், அங்குள்ள எதிரிக்கு சாதகமான விடயங்களை குறிப்பிட்டு இதற்கு நாம் எடுக்க வேண்டிய எதிர் நடவடிக்கையையும் சொல்லி விளக்கியதுடன், நாங்கள் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகளையும் அறிவுரைகளாகக் கூறினார். தலைவரின் அன்றைய அறிவுரையின் பயனாக சில நாட்களின்பின், முன்னேறிய இராணுவத்தின்மீது  தாக்குதலை மேற்கொண்டு  ஆயுதங்களையும் கைப்பற்ற எமது அணியால் முடிந்தது.

இவ்வாறே சிறீலங்கா இராணுவத்தினரின் பெருமெடுப்பிலான ஜெயசிக்குறு நடவடிக்கைமீதான முறியடிப்புத் தாக்குதலிலும் தலைவர் அவர்களது தனித்துவமான திட்டமிடலைக் காணலாம். இடம், நேரம், எதிரிப்படைகளின் நகர்வுகள் என்பவற்றிற்கு ஏற்ப எமது படையணிகளை நகர்த்தி படைத்தரப்பின் திட்டத்திற்கெல்லாம் பதில் நடவடிக்கை எடுத்து எதிரியை நிலைகுலையச் செய்தார்.

அப்போது இராணுவத்தின் பாதை திறப்புக் கனவு தலைவரின் மதியூகத்தினால் கனவாகவே போனது. அதேநேரம் சமரின் ஒவ்வொரு கட்டத்தையும் மிகுந்த நம்பிக்கையுடன் நகர்த்தினார். நாம் தீர்வு காண்பதற்குக் கடினப்படும் விடயங்களை அவரது கவனத்திற்கு கொண்டுசெல்லும் போது அவர் அதற்கு மிக இலகுவானதும், முழுமையானதுமான தீர்வினைத் தரும் போது, நான் வியப்புக்குள்ளாவதுண்டு.

ஓயாத அலைகள்-3 நடவடிக்கையின் தாக்குதல் திட்டத்தை தளபதிகளுக்கு விளக்கியபோது குறிப்பிட்ட இவ்வளவு பகுதியும் கைப்பற்றப்பட வேண்டும் என ஒரு வரைகோட்டைக் கீறியிருந்தார். யாருமே எதிர்பாராதவகையில் அவர் குறிப்பிட்ட பகுதி வரை மீட்டபோது, தலைவர் அவர்களது திட்டமிடலின் உச்சத்தை எம்மால் புரிந்து கொள்ளமுடிந்தது.

அதேபோல அரியாலைப் பகுதிமீதான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளமுன், பயிற்சியில் ஈடுபட்டிருந்த அனைத்துப் போராளிகளையும் அதிக நீரை உட்கொள்ளுமாறு சொல்லியிருந்தார். பின்னர் தாக்குதலில் ஈடுபட்டபோதுதான் அப் பகுதியின் வரட்சித்தன்மையையும், அதற்காக முற்கூட்டியே தலைவர் மேற்கொண்ட நடவடிக்கையையும் எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. இன்னுமொரு சம்பவத்தையும் இதில் குறிப்பிட்டாக வேண்டும்.

தாக்குதல் ஒன்றிற்கு செல்லுமுன், அதுபற்றி கதைத்துக் கொண்டிருந்தபோது களத்தின் உடனடி உணவுத் தேவையை நிறைவுசெய்ய, தலைவர்  ‘என்ன வகையான கன்டோஸ் தேவை’ எனக் கேட்டபோது நாம் குறிப்பிட்ட ஒருவகைக்  கன்டோசைக் கேட்டதும், அதனை தருவதாகச்சொல்லி, இதனை உட்கொள்வதாக இருந்தால் கட்டாயமாக தூரிகையால் பல் துலக்க வேண்டும். எனவே பற்தூரிகைகளையும் கொண்டு செல்வதில் கவனம் எடுக்கும்படி கூறியிருந்தார். இப்படித்தான் சிறிய விடயங்களிலும் நீண்டகால நோக்குடன் சிந்தித்து அதிக கவனம் எடுத்து, ஒவ்வொன்றையும் நுணுக்கமாக திட்டமிட்டு வழிநடத்தும் அவரது ஆற்றல் எப்போதும் வியப்பிற்குரியதொன்றே.

தலைவர் அவர்கள், யாருடைய ஆலோசனைக்கும், கருத்துக்கும் செவிசாய்க்கும் தன்மையை கொண்டவர். ஆக்கபூர்வமான, விடுதலையை விரைவுபடுத்தவல்ல, தேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்கள் போராளிகளிடமிருந்தோ, பொது மக்களிடமிருந்தோ வருமாக இருந்தால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவனிப்பதுவும், முக்கியமான விடயங்களை உடனடியாக நிறைவேற்றுவதுவும் எந்த விடயத்தையும் அவரவர்களுக்குரிய நிலையில் நின்று அணுகி தீர்வினைக் காணுவதும் தலைவரின் தனித்துவமான பண்புகளில் ஒன்று.

இதைக்குறிப்பிடும் போதுதான் அண்மையில் நடந்த சம்பவமொன்று நினைவுக்கு வருகின்றது. எல்லைப்படை வீரர்களாய் களத்தில் நின்று வீரச்சாவை அடைந்தவர்களது குடும்பங்களுக்கான மாதாந்த நிதிக் கொடுப்பனவுகளை அதிகரிக்கவேண்டும் என்ற விடயத்தை போராளி ஒருவர் கடிதம் மூலம் அவரது கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, நாம் எதிர்பார்த்ததைவிட இன்னும் ஆழமாகவே அதுபற்றி விவாதித்து, உடனடியாகவே அப்பிரச்சினையை விளங்கி, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்டவர்களைப் பணித்தார்.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடவடிக்கை ஒன்றிற்காக மகளிர் சார்ந்த அனைத்துப் படையணிகளின், போராளிகள் ஒன்றுசேர்க்கப்பட்டு, பயிற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். அதற்கான ஒத்திகையை தலைவர் அவர்கள் வந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவ்வேளை அதில் பயிற்றப்பட்ட குறிப்பிட்ட போராளிகளை வேறு பணிக்காக மாற்ற வேண்டியிருந்தது.


மிகுந்த உற்சாகத்தோடு தம்மை வருத்தி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்களின் மன உணர்வுகளைப்  புரிந்துகொண்ட  தலைவர் அவர்கள், தனது நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு படையணிப் போராளிகளுடனும் படையணி ரீதியாக தனித்தனியே கதைத்து அவர்களின் பணியை மாற்றுவதற்கான நியாயப்பாட்டையும் அமைப்பின் நலனையும் விளக்கி அவர்களின் மனதைத் தேற்றியிருந்தார். அந்தப் போராளிகளுக்காக தனது நேரத்தையும் பொருட்படுத்தாது அதிக அக்கறை எடுத்தமை, எம்மையே வியக்க வைத்தது.

தலைவரைப் பொறுத்தமட்டில் எந்தப் பணிக்கும்  திறமையுடையவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதில் முழுமையான கவனம் செலுத்துவார். எந்தப் பணியிலும் போராளிகளை அமர்த்தும்போது, சொல்வதை அப்படியே செய்யாமல் எதனையும் தானாகவே சிந்தித்து, அதில் உள்ள சரி பிழைகளை இனங்கண்டு விவாதித்துச் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்களை தெரிவு செய்யவேண்டும் என்பதுடன், சொல்வதைக் காட்டிலும் செயலில் அதிக கவனம் இருக்க வேண்டும் என அடிக்கடி கூறுவார்.

நாம் செய்யும் எந்தவொரு பணியிலும் நாமே திருப்திப்படும் தன்மை வரக்கூடாது என்பதற்கமைய தலைவரின் அறிவுரைகள் இருக்கும். அவரின் இந்தப் பண்பே எம்மை மென்மேலும் வளர்த்ததெனலாம். 1990இல் கொக்காவில் சிறீலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலில் எமது அணிப் போராளிகள் நன்றாகச் சண்டை பிடித்திருந்ததை அறிந்த தலைவர், தனது பாராட்டுதலைத் தெரிவித்துவிட்டு, பின்னர் காயத்தைப் பார்த்து  கல்கியின்  ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வரும் பெரிய பழுவேட்டரையருக்கு அறுபத்து நான்கு வீரத்தழும்புகள் உடலில் உள்ளனவாம். அதேபோல வீரத்தில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்று சொல்லியனுப்பினார்.

ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையின் போது  புளியங்குளத்தில் நாம் முன்னரங்கக் காவலரண்கள் அமைக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இராணுவம் டாங்கிகளுடன் எமது பகுதியூடாக பெரும் முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. எமது அணி இதனை முறியடித்து படையினரை இழப்புக்களுடன் திருப்பி அனுப்பியது.

இதற்கு பாராட்டுகளைத் தெரிவித்த  தலைவர் அவர்கள், இதைவிட இன்னும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதற்காக உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்திருந்தமையானது, நாம் செய்யவேண்டிய பணிகளும் எதிர்கொள்ளவேண்டிய சவால்களும் இன்னும் அதிகம் உண்டு என்பதை அந்த நேரத்தில் உணர்த்தியது.

தொடர்ந்து எதிரி பல முனைகளில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த போது எமக்கும் எல்லா முனைகளையும் எதிர் கொள்வதற்கு ஆட்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்தது. உடனே தலைவர் இதற்குரிய மாற்றுத்திட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தி அந்த நெருக்கடியை இலகுவாகத் தீர்த்து வைத்தார். இத்திட்டத்தை சமரை வழிநடத்திய தளபதியிடம் சொல்லிவிட அவர் எமக்கு சொன்ன போது, நடைமுறைச் சாத்தியம் போல் தெரியவில்லை.

எனினும் தலைவர் சொன்னது என செய்ய முடிவெடுத்தோம். பின்பு தலைவரை நேரில் சந்திக்கும் போது அவர் தனது திட்டத்தை எனக்கு நேரில் விளங்கப்படுத்திய போது அத்திட்டத்தின் மீது நல்ல நம்பிக்கை ஏற்பட்டது. இதே போல் சமர் எல்லா முனைகளிலும் நடைபெற்ற போது காடுகளில் நின்ற எமது அணிகள், பெரும் நீர் பிரச்சினையை எதிர்கொண்டனர். இப்பிரச்சினை தலைவரிடம் சொல்ல, உடனே காவலரண்களுக்கு அருகில் கிணறுகள் ஒழுங்குபடுத்தப்பட்டது. இவ்வாறு சில பிரச்சினைகளை சிறிய பிரச்சினைகள் எனகருதி இந்த நெருக்கடிக்குள் எவ்வாறு கேட்பது என தயங்கி நின்றால் தானாகவே தேவைகளைக் கேட்டறிந்து ஒழுங்குபடுத்தும் தன்மை அவருடையது.

இதேபோல தலைவர் அவர்கள் அடிக்கடி சொல்கின்ற இன்னுமொரு விடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ‘இந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளைத்தான் செய்கின்றனர். நானும் அப்படியே. இதுவரை இனத்துக்கான எனது பணி முடிவடையவில்லை. எனது மக்களுக்காகத் தாயகத்தைப் பெற்றுக்கொடுத்த பின்னர்தான்  எனது பணியை முழுமையாகச் செய்தேன் என நிறைவடைய முடியும்’ என்றார்.  இவ்வாறு தனது பணியிலேயே நிறைவடையாத இயல்பு அவருடையது.

இதுவரை காலமும் போராட்டத்தை முழுவீச்சுடன் வழிநடத்துகின்ற தலைவரது நெஞ்சுரம் அளவிட முடியாதது. அந்த உறுதிதான் எமது போராட்டத்தை இன்று உலகம் வியக்கும் வண்ணம் மாற்றியுள்ளது. அக்காலப் பகுதியில் மணலாற்றுக் காட்டில் தலைவரோடு இருந்த போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கு நாம் குறிப்பிடுவது பொருத்தமானது.

உணவு, நீர் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலேயே பெரும் நெருக்கடிகளை சந்தித்த நேரம் அது. காட்டினுள் இருந்த எமக்கும் மக்களுக்குமான நேரடித் தொடர்புகள் இந்திய இராணுவத்தால் தடைப்பட்டிருந்த காலம். காடு முழுவதும் எங்கு பார்த்தாலும் இராணுவத்தின் ரோந்து அணிகள். தலைவருக்குக்கூட திட்டங்களை மேற்கொள்வதற்குப் பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லாத நேரம்.

இந்த நிலையைப் புரிந்துகொண்டு காட்டுக்கு வெளியில் இருந்து கேணல் கிட்டு அவர்களால் அனுப்பப்பட்ட தலைவரின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் தொடர்பான செய்தியை எமக்கு தெரிவித்து ‘எனது உயிருக்காக மறுபடி ஒரு ஆயுத ஒப்படைப்பு நடக்க அனுமதிக்கமாட்டேன். நான் வீரச்சாவு அடைந்தால், இன்னொரு பிரபாகரன் அல்லது ஒரு பிரபாகரியாவது தோன்றி இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.

நீங்கள் எல்லோரும் இதில் உறுதியான முடிவை எடுக்கவேண்டும். இந்தக் கடினங்களுக்கு ஈடுகொடுத்து போராடும் மனநிலை யாருக்காவது இல்லையெனில் அவர்களைப் பாதுகாப்பாக அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கின்றேன். நான் விலங்குகளைச் சுட்டுச் சாப்பிட்டாவது இந்தப் போராட்டத்தைத் தொடர்வேன்’ என்றார். தலைவர் இவ்வாறு சொல்லும்போது அங்கிருந்த பெண் போராளிகளில் ஒருவரும் இளநிலை அதிகாரியாகக்கூட வளர்ந்திருக்கவில்லை.

இந்தச் சம்பவத்தின் மூலம் தலைவர் அவர்களது இலட்சியப் பற்றையும், எம்மீது கொண்ட நம்பிக்கையையும் நேரடியாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கொண்ட கொள்கையில் உறுதியும் விடாமுயற்சியுடன் கூடிய இலட்சியப்பற்றும் தனது நலனையோ உயிரையோ பெரிதாக எண்ணாது நாட்டுக்காக எதையும் செய்வேன் என்ற தலைவரின் உறுதியான நெஞ்சுரமும்தான் இந்திய இராணுவத்தை எமது மண்ணிலிருந்து திருப்பியனுப்பி, சரித்திரத்தில் மகத்தான மாற்றத்தைக் கொண்டுவந்தது.

இத்தகைய அற்புதமான தலைவரின் அடிமன விருப்பு எதுவாக உள்ளது என்பதை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும். அண்மையில் நடந்த துரோகத்தனமான சம்பவத்தின் பின் ஒருநாள்  தலைவர் கதைத்து கொண்டிருந்த போது பின்வருமாறு தனது மனஉணர்வை வெளிப்படுத்தினார். ‘இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவதற்கு சிறந்ததொரு தலைமை கிடைக்குமாயின், தான் இந்த நிலையைவிட்டு சாதாரண ஒரு போராளியாக சண்டையிடும் அணிகளுடன் நிற்கவும், மிதிவண்டியில் சென்று கிராமமக்கள் மத்தியில் சேவை செய்வதும் தான் விருப்பம்’ என தனது மனவிருப்பை வெளிப்படுத்தினார்.


1993இல் காயப்பட்ட போராளிகளின் நலன் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் ‘தமிழீழம் கிடைத்தபின்னர் எனது பணி, விழுப்புண்ணடைந்த போராளிகள் சார்ந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் சார்ந்ததாகவுமே முழுமையாக இருக்கும்’ என்று கூறியதை மேற்கண்ட கூற்று மீள எனக்கு நினைவுபடுத்தியது.

‘எமது போராட்டம் இன்று உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறது. இவ்வாறு வளர்ந்த பின்பு எமது மாவீரர்களுடைய, மக்களுடைய, ஈகங்களை மதிக்காமல் எவ்வாறு இத்தகைய பழிபாவங்களை செய்ய முடிகிறது. இவர்களை என்றோ ஒருநாள் தர்மம் தண்டிக்கும்’ எனத் தலைவர் சொன்னமை, சிறுவயதில் நாம் பிழைகள் விட்டபோது, ‘பாவம் செய்யக் கூடாது’ என்று சொல்லி எம்மை வழிப்படுத்துகின்ற பெற்றோர்களின் மன நிலையை ஒத்திருந்தது. எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும் மனதாலும், செயலாலும், அவர் மிகவும் எளிமையானவர்.

ஓயாத அலைகள்-01 சமரில் நடைபெற்ற சம்பவம் ஒன்றையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. போரில் இறந்த சிங்கள இராணுவ வீரர்களின் உடலுக்கு எமது போராளிகள் உரிய மரியாதை கொடுக்காமல்விட்டதுடன், சிறீலங்கா தேசியக் கொடியையும் எரித்திருந்தனர். இந்தச் செய்தி தலைவரின் காதுகளுக்கு எட்டியபோது இந்த விடயத்தை அவர் கண்டித்திருந்தார். ஒரு நாட்டின் தேசியக் கொடி என்பது மிகவும் புனிதமானது.

எமது தேசத்தின் கொடியை வேறு நாட்டினர் எரித்தால் எமக்கு எத்தகைய கோபம் வருமோ, அதேபோலத்தான் அந்நாட்டு மக்களுக்கும் இருக்கும். அதேபோல ஒரு இராணுவ வீரனின் உடலுக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்கவேண்டும் என்று கூறியதன் மூலம் அவரின் வித்தியாசமான பக்கம் ஒன்றை அறியக்கூடியதாக இருந்தது.  ஒரு நாள் தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, கேணல் ராஜு அவர்கள் வீரச்சாவடைந்த செய்தி அவரை வந்தடைந்துவிட்டது.

ஆனால் வெளியில் வேறுயாருக்கும் அச்செய்தி சென்றடையாத நேரம். கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. அந்தச் செய்தியை நேரடியாக சொல்ல ராஜு என்ற பெயரை உச்சரிக்க இயலாத மனநிலையில், நீண்ட காலமாக ராஜு அவர்களுடன் பழகி ஒன்றாகக் களங்களில் நின்ற லெப்.கேணல் விக்ரர், லெப்.கேணல் ராதா ஆகியோரைப்பற்றி நீண்ட நேரமாக கதைத்துக்கொண்டேயிருந்தார்.

இதைவைத்து ராஜு அண்ணைக்கு ஏதோ நடந்து விட்டது என்பதை ஊகித்துக்கொண்டேனே தவிர, அந்தச் செய்தியை அப்போது நேரடியாக என்னிடம் தலைவர் சொல்லவே இல்லை. இறுதியில் ‘போராட்ட வாழ்க்கையில் மட்டுமன்றி குடும்ப வாழ்விலும் ராஜு மிகவும் எளிமையானவர்’ என்று முடித்தார். கேணல் ராஜு அவர்கள் வீரச்சாவடைந்துவிட்டார் என்பதை பின்புதான் என்னால் முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால், கேணல் ராஜு அவர்கள் நோயுற்று, குறிப்பிட்ட காலம்வரை இயலாதநிலையில் இருந்து, மிகக் கடுமையாகிய பின்னர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

சிலநாட்களுக்கு மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்பது தெரிந்தும், அவர்மீது வைத்த அளவில்லாத பற்றினால் தன்மனதை ஆற்றிக்கொள்ள முடியாமல் தவித்ததை பார்த்த பொழுது தான் நேசிக்கும் ஒவ்வொரு தளபதிகளும் போராளிகளும் திடீர் என வீரச்சாவைத் தழுவிக்கொள்ளும் போது தலைவரின் இதயத்தில் ஏற்படும் வலி எத்தகையதாக இருக்கும்  என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

மேலும் சண்டைநடந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் மன்னாரில் எமது அணிகள் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் அங்கு நின்ற நான்கு பேர் அவர்களது கவலையீனத்தால் எதிரியின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு அடைந்து விட்டனர். அவ்வேளை நான் தலைவரை நேரில் சந்தித்த போது அவரால் இப்படியும் கோபப்பட முடியுமா?, என நான் நினைக்கும் அளவிற்கு கோபம் இருந்தது. அவ்வேளையில் எந்தக் காரணத்தையும் சொல்லவும் முடியாது. தலைவர் அவர்கள் ஆரம்பத்தில் நேரடியாக சண்டைக்களங்களில் நின்று வழிநடத்திய போது மேற் குறிப்பிட்டது போன்ற இழப்புகளுக்கு இடமளிக்காது செயற்பட்ட வரலாற்றை நினைத்து மனம் ஆறுதல் அடைந்தது.

மணலாற்றுக் காட்டுப் பகுதியில் இந்திய இராணுவத்துடன் சண்டை நடந்த சமயம் ‘ஜீவன்’ என்ற போராளி வீரச்சாவு அடைந்தபோது, அவரது வித்துடலை எடுக்க முடியாது என சண்டையை வழி நடத்திய பொறுப்பாளர் அறிவித்தபோது, தலைவருக்குக் கோபம் வந்து விட்டது. ஏன் எடுக்க முடியாது எனப்பேசி, எப்படியாவது வித்துடலை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் தான் வந்து எடுப்பதாக சொன்னபோது, தலைவரின் உறுதியான கட்டளையின் பின் அந்த வித்துடல் எடுக்கப்பட்டது.

அளவிட முடியாத ஆளுமைக்கும் அதே நேரம் எளிமைக்கும் எடுத்துக்காட்டான எமது தலைவர் அவர்களுக்கு தமிழீழதேசம் என்றென்றும் கடமைப்பட்டது. இவ்வாறு தேசியத் தலைவர் என்கின்ற பெரும் பொறுப்புக்கும் அப்பால், அவரது மனித நேயமும், போராளிகள், மக்கள் மீதான பரிவும், யாருடனும் ஒப்பிடமுடியாதவை. எந்த ஒப்புவமையுமற்று  விடாமுயற்சி யோடும் உயர்ந்த நெஞ்சுரத்தோடும் விடுதலைப் போரை வழிநடத்தும் தலைவர் அவர்களுக்குப் பின்னால் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, தொடர்ந்தும் பெரும் பலம் சேர்ப்போமாக இருந்தால், நிச்சயமாக எங்கள் எல்லோரினதும் ‘தாயகக் கனவு’ நனவாகும்.



நன்றி.
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’
கேணல் விதுஷா (யாழினி)
சிறப்புத் தளபதி, மாலதி படையணி,
தமிழீழம்
விடுதலைப்புலிகள். தமிழீழம்.


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us