ஈழம்

ஈழம்

வெள்ளி, 19 ஜூலை, 2013

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 15]

காணான் என்ற தேசத்தை வெற்றி கொண்ட இஸ்ரேலின் சந்ததியினர் அந்த தேசத்திற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டினார்கள். தொடந்து அந்த தேசத்தில் ஒரு அரசாட்சி ஏற்படும்வரை நியாயாதிபதிகள்தான் (Judgs) அந்த தேசத்தை ஆட்சி செய்து வந்தார்கள்.

இஸ்ரேலைச் சூழ அவர்களது எதிரிகளான பெலிஸ்தியர், அம்மோனியர், மோவாபியர், மீதியானியர் போன்றவர்களிடம் இருந்து யுத்த அச்சுறுத்தல்கள் இருந்த போதும், இந்த நியாயாதிபதிகள் மிகவும் கவனமாக திட்டமிட்டு இஸ்ரேலியர்களை வழி நடாத்தி வந்தார்கள்.
நூற்றுக்கணக்காண வருடங்கள் இஸ்ரேல் தேசம் இந்த நியாயாதிகளின் ஆட்சியின் கீழ்தான் இருந்து வந்தது.

கி.மு.1050ம் ஆண்டளவில்தான் இஸ்ரேல் முதன் முதலாக ஒரு அரசாட்சியின் கீழ் வந்தது. சவுல் என்பவரே இஸ்ரேல் தேசத்தின் முதலாவது இராஜாவாக முடிசூட்டிக்கொண்டார்.

சுமார் 40 வருடங்கள் இஸ்ரேல் தேசத்தை ஆண்ட சவுலினுடைய ஆட்சி ஆரம்பத்தில் ஓரளவு நல்லதாக இருந்தாலும், கடைசியில் பெலஸ்தியர்களுடனான யுத்தத்தில் சவுல் தோல்வியடைந்து மரணத்தைத் தழுவிக்கொண்டான்.

சவுலினுடைய மரணத்தைத் தொடர்ந்துதான் இஸ்ரேலியர்களுக்கும், இஸ்ரேல் தேசத்திற்கு நல்ல காலம் பிறந்தது.

கி.மு. 1010ம் ஆண்டளவில் தாவீது (David) இஸ்ரேலின் ஆட்சிபீடமேறியதைத் தொடர்ந்து தான் இஸ்ரேல் தேசம் செழுமையின் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. இராஜ்யம் விஸ்தரிக்கப்பட்டது. பலவாறான நன்மைகளை இஸ்ரேலியர்கள் அடையத் தொடங்கினார்கள்.

அப்பொழுது ஜெருசலேம் எபூசியர் (Jebusites) என்ற இன மக்களின் ஆழுகையிலேயே இருந்தது. தாவீது தலைமையிலான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமை ஆக்கிரமித்து, இஸ்ரேல் தேசத்தின் தலைநகராக மாற்றினார்கள்:

தாவீதின் காலத்தில் பாவிக்கப்பட்ட நட்சத்திரக் கொடியைதத்தான் தற்பொழுதும் இஸ்ரேல் தேசம் தனது தேசியக் கொடியாகப் பாவிக்கின்றது.

தாவீதின் காலத்தில் இஸ்ரேலியர்களால் ஆழப்பட்ட தேசத்தைத்தான் தற்பொழுது இஸ்ரேலியர்கள் தங்கள் தேசமாக, தாயக பூமியாக, கடவுள் தமக்கு வாக்குத்தத்தம் தந்த பூமியாக அடையாளப்படுத்தி வருகின்றார்கள்.

தாவீதின் மகன் பெயர் சாலமோன்.

தாவீதைத் தொடர்ந்து ஆட்சிப்பீடமேறிய இவனும் சிறந்த ஆட்சியைக் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது.

சிறந்த நீர்ப்பாசன முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவனாக இந்த சாலமோனே குறிப்பிடப்படுகின்றான். சாலமோனால் கட்டப்பட்ட குளங்கள் இன்றைக்கும் ஜெருசலேமை அண்டிய பகுதிகளில் இருக்கின்றது.

உலகில் இன்று இஸ்ரேலியர்களின் நீர்பாசன முறை என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் இந்த சாலமோன் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்த சொட்டு நீர்ப்பாசனத் திட்டத்தை இஸ்ரேலியர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தினார்கள் என்பது உண்மையிலேயே ஒரு பெரிய ஆச்சரியம்தான்.

சாலமோனுடைய காலத்தில்தான் ஜெருசலேம் தேவாலயம் கட்டப்பட்டது.

இன்று உலகின் மிகப் பெரும் நெருக்கடியாக அடையாளப்படுத்தப்படுகின்ற ஜெருசலேம் தேவாலயம் இஸ்ரேலியர்களின் மிக முக்கிய அடையாளமாக இருக்கின்றது.

(இவ்வாறு கட்டப்பட்டு பல ஆண்டுகளின் பின்னர் தரைமட்டமாக்கப்பட்ட ஜெருசலேம் தேவாலயம் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்று தற்பொழுது இஸ்ரேலியர்கள் முயற்சித்து வருகின்றார்கள். அந்த இடத்தில் இஸ்லாமியர்களின் மிக முக்கிய புனிதஸ்தலமான அல் அக்சா மசூதி இருப்பதால், பெரிய பூகம்பம் ஒன்று வெடிப்பதற்கு தயாராக இருக்கின்றது. மூன்றாவது உலகப் போர் இந்த ஜெருசலேம் தேவாலய மீள் கட்டுமானத்தைத் தொடர்ந்து ஏற்படலாம் என்று கூட பல ஆய்வாளர்கள் எதிர்வு கூறி வருகின்ற நிலையில், தேவாலயத்தைக் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரேலியர்கள் பூர்த்தி செய்துவிட்டுள்ளார்கள்- இந்த விடயம் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்)

இதேபோன்று சாலமோன் காலத்தில் இஸ்ரேல் தேசத்தின் எல்லைகள் மீள்வரையறை செய்யப்பட்டு ஆக்சோர் (Hatzor) மெகித்தோ (Megiddo) கேசேர் (Gezer) போன்ற மிகவும் பிரபல்யமான பட்டணங்களும் அமைக்கப்பட்டன.

இஸ்ரேலியர்கள் செழிப்பாக, சுதந்திரமாக வாழ்ந்த காலப்பகுதி இந்த தாவீது மற்றும் சாலமோனுடைய காலப்பகுதி மாத்திரம்தான்.

இவர்கள் இருவருடைய மறைவைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராஜ்யம் படிப்படியாக பல துண்டுகளாகப் பிழவுபட்டு, சிதறுண்டு, அன்னியர்களின் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி, இஸ்ரேலியர்களுக்கு உரித்தற்ற ஒரு தேசமாக மாறத் தொடங்கியது.

தாவீது, சாலமோன் போன்றவர்களது ஆட்சியின் கீழ் ஐக்கிய இராட்சியமாக இருந்த இஸ்ரேல் தேசம், சாலமோனின் மரணத்தின் பின் கி.மு. 931ம் ஆண்டு வட இராஜயம், தென் இராட்சியம் என்று இரண்டாகப் பிழவுபட்டது.

வட இராட்சியம் சமாரியாவைத் தலைநகராகக் கொண்டு ஆளப்பட்டது. இந்த வட இராஜ்யம் இஸ்ரேல் என்று அழைக்கப்பட்டது.

தென் இராஜ்யம் ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு யூத இராஜ்யம் என்று அழைக்கப்பட்டது.

இந்த இரண்டு இராஜ்யங்களுமே காலப்போக்கில் முறையே அசீரீரியர்கள், மற்றும் பபிலோனியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

இஸ்ரேலியர்களின் அகதி வாழ்க்கை ஆரம்பமானது.

தமது சொந்த தேசத்திலேயே இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் இஸ்ரேல் தேசத்தில் இஸ்ரேலியர்கள் எவரும் வாழமுடியாத நிலை கூடக் காணப்பட்டது.

இஸ்ரேலை ஆக்கிரமித்தவர்களால் இஸ்ரேலியர்கள் வந்தேறு குடிகள் என்று கூறப்பட்டார்கள்.

மற்றைய இனங்கள் என்ற மரங்களின் மீது படரும் கொடிகள் என்று இகழப்பட்டார்கள்:

அகதிகளாக, அடிமைகளாக பல தேசங்களிலும் அலைந்து திரிந்தார்கள்.

ஈழத் தமிழர்களைப் போலவே ஓடத் தொடங்கினார்கள் இஸ்ரேலியர்கள்.

சுமார் 2000 வருடங்கள் ஓடினார்கள்.

உலகம் முழுவதும் ஓடினார்கள்.

விரட்ட விரட்ட ஓடினார்கள்.

இஸ்ரேலியர்களை விரட்டாத வேறு இனங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு உலகம் முழுவதிலும் பலத்த பாதிப்புக்கு உள்ளார்கள்.

நூற்றுக்கணக்காண முள்ளிவாய்க்கால்களை இஸ்ரேலியர்கள் தமது வரலாற்றில் சந்தித்தார்கள்.

அவை அனைத்திலும் இருந்து தம்மைக் காத்துக்கொண்டு எப்படி தமது தேசத்தை விடுவித்தார்கள்?

இது பற்றித்தான் இந்தத் தொடரில் நாம் தொடர்ந்து ஆராய இருக்கின்றோம்.

இணைக்கப்பட்டுள்ள படங்கள்:

1. இற்றைக்கு சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் தேசத்தை ஆண்ட யூம இராஜா தாவீதினுடைய கல்லறை
2. இற்றைக்கு சுமார் 3000 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய அரவன் சாலமோனால் கட்டப்பட்ட குளங்கள்.அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்