ஈழம்

ஈழம்

சனி, 27 ஜூலை, 2013

தமிழீழ தேசிய தலைவரின் இலட்சியத்தோடு விடுதலைக்காக தொடர்ந்து பயணிப்போம்.

நாம் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறோம். எத்தனை அடக்குமுறைகளை நாம் உடைத்தெறிந்திருக்கிறோம். எவ்வளவு துரோகங்களை நமது பயணப்பாதையில் நாம் சந்தித்திருக்கிறோம். நமக்கு ஏற்பட்ட இழப்பு இயல்பாக ஒரு தேசிய விடுதலை போராட்டத்திற்கு கூடுதலான விலை தான். அடக்குமுறைக்கெதிராக நம்மை நாம் அர்ப்பணித்தோம். விடுதலை வேண்டும் என்பதற்காக எமது வாழ்வு, வளம் அனைத்தையும் அர்ப்பணித்தோம்.
எந்த அடக்குமுறையும் நம்மை ஆட்கொள்ள முடியவில்லை. அடக்குமுறையிலிருந்து தான் விடுதலை உணர்வு தோன்றுகிறது.

நமது அடக்குமுறை நிலைகளில் நாம் அடைந்த இழப்புகள் எம்மை விடுதலையை நோக்கி பயணிக்க உந்தித்தள்ளியது. யாராலும் இந்த நிலையிலிருந்து மீண்டு வரவே நினைப்பது இயற்கை. காரணம், எப்போதெல்லாம் வாழ்வில் ஒடுக்குதல் ஏற்படுகிறதோ, அந்த ஒடுக்குதலுக்கு எதிராக சமர் புரிவதென்பது மானம் உள்ள மாந்த கடமையாக உள்ளது. ஆயிரம் காலம் அடங்கிக் கிடப்பதை விட, சில மணிநேரம் உரிமைக்காக போராடி மடிந்து போவதுதான் மாந்த வாழ்வின் உன்னதம் என்பதை நாம் கற்றுத் தந்தோம். நமது தேசிய தலைவர் உயிரை நேசித்த ஒரு உத்தமர். மாந்த உயிரை அவர் மிக மாண்புடன் தரிசித்தார். மாந்த உயிருக்கு அவருக்கு நிகராய் மதிப்பளித்தவர்கள் இந்த நூற்றாண்டில் போராளிக் குழு தலைவர்களில் யாரும் முன்னிலை வகிக்க முடியாது. ஆனால் அவர் சொல்கிறார், எமக்கு எந்த அளவிற்கு உயிர் உன்னதமானது என்று உணர்கிறோமோ, அதைவிட மேலாக எமது உரிமையும், விடுதலையும் தேவை என்பதை வலியுறுத்துகிறது. தந்தை பெரியார் அவர்கள் மிக சிறப்பாக இரண்டே வார்த்தைகளில் மாந்த வாழ்வை அடையாளப்படுத்துகிறார்.

மாந்த வாழ்வின் அழகு என்ன என்று கேட்கும்போது, மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொல்கிறார். மானமுள்ள மனிதர்கள் தமது அறிவாயுதத்தை ஏந்தி நிற்கிறார்கள். மாந்தத்தின் அடிப்படையே மானத்தில்தான் அடங்கி இருக்கிறது. ஆக, நாம் அடக்கப்பட்ட காலத்தில் தமிழர்களின் மானம் காக்கப்பட வேண்டும் என்பதை தமது தலையாய கடமையாக நமது தேசிய தலைவர் உணர்ந்தார். ஆகவே தான் அவர் தமது அறிவை பயன்படுத்தி நமது மானத்தை காப்பதற்கான களம் அமைத்தார். தேசிய தலைவரின் அறிவு, அவரின் தொலைநோக்குத் திறன், பிரச்சனையை கையாளும் நேர்த்தி, போராளிகளின் மேல் அவர் கொண்ட அளவில்லா அன்பு, மண்ணையும் தமது மக்களையும் உயிரை விட மேலாய் நேசித்த பக்குவம், இவைகளே அவரை வாழும் தமிழ் உலகிற்கு மட்டுமல்ல, தொடர்ந்து வாழப்போகும் தமிழ் உலகிற்கும் ஒரு அங்கீகாரம் பெற்ற படைத்தளபதியாக தமிழர்களின் வாழ்வின் அரணாக, தமிழ் இனத்தின் அடையாளமாக அவரை முன்னிலைப்படுத்தியது.

அவர் தமது போராட்டத்தை முன்னெடுக்கும் காலத்தில் உலகே ஒன்றிணைந்து அவரை உயர்த்தி, வாழ்த்தி பேசும் என்று நினைத்திருக்க மாட்டாது. அவர் தமது கடமையைச் செய்தார். இந்த தமிழ் சமுதாயத்தில் யாருக்குமே வராத மானம், எதற்கும் அடங்கிப்போகாத மனம் அவரிடம் உயர்ந்தோங்கி இருந்தது. தமிழனுக்கான அடையாளத்தை காக்க வேண்டுமென்றால், தமிழனை மானமுள்ளவனாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர் ஒவ்வொரு வினாடியும் சிந்தித்தார். சிந்தனையை செயல்படுத்தும்போது அதிலே ஒரு சிறு கீறல்கூட விழாமல் திட்டம் வகுத்தார். ஆகவேதான் கடந்த 30 ஆண்டுகால கருவி ஏந்தும் போராட்டத்தில் அசைக்க முடியாத, தோற்கடிக்க முடியாத தன்னிகரில்லா தனிபெரும் படையாக தமிழீழ தேசிய புலிகள் களம் கண்டார்கள். நமது தேசிய தலைவரின் அளப்பரியா வீரம், அவரின் மனத்திடம், தூயஆன்மா இதுவே ஆயிரக்கணக்கான இளைஞர்களை, இவரின் கட்டளையால் தம்மை எரித்துக் கொள்ளும் அளவிற்கு துணிவை தந்தது.

தாம் தன்னலமற்று களத்தில் இருந்ததை உற்றுநோக்கிய வீரர்கள், அவரைப்போல் வாழ்வதற்காகவே தம்மை அர்ப்பணித்தார்கள். பேரினவாத சிங்கள அரசுகள், பயரங்கரவாதிகள் சிறார்களை சமரில் ஈடுபடுத்தும் வன்முறையாளர்கள் என்றெல்லாம் வரிசையாக அவர்மீது குற்றம் சாட்டியபோது, நமது தேசிய தலைவருக்கு எதிராக விரல் நீட்டியபோது, அவர் எந்த நிலையிலும் தமது மனதை இடம் மாற்றிக் கொள்ளவில்லை. காரணம், அவரின் களம் என்பது அவருக்கான களம் அல்ல. ஒருவேளை எமது தேசிய தலைவர் நினைத்திருந்தால், தெற்காசிய நாடுகளிலே வளம் கொழிக்கும் வாழ்வை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் தம் சொந்த நலனை தவிர்த்து, தமது இன நலனுக்காக வாழ்ந்த ஈடு இணையில்லா தலைவராக இருந்தார். எந்த தமிழ் தலைவருக்கும் இல்லாத மானம், நமது தேசிய தலைவருக்குள் எரிமலையாக வெடித்து சிதறியது.

ஆகவேதான் நமக்கான மொழி இருக்கிறது, நமக்கான பண்பாடு இருக்கிறது, நமக்கான கலை இலக்கியங்கள் இருக்கிறது, நமது இனம் என்று சொல்லிக் கொள்வதற்கு ஆயிரக்கணக்கான இலக்கிய தளங்கள் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் போற்றி பாதுகாக்க, நமக்கென்று ஒரு மண் இல்லையே என்று சிந்தித்தார். தமது மண்ணை இறுத்திக் கொள்வதற்காக, தமது மண்ணின் அடையாளத்தை அதன் தொன்மையை பாரெங்கும் பறைசாற்றுவதற்காக, இந்த நொடிவரை அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தமிழினம், தமிழ் மொழி இவைகளைக் கொண்டு தமது வாழ்வை வளப்படுத்திக் கொண்ட தலைவரிகளின் வரிசை நீண்டதாக இருக்கிறது. தமிழ் என்று கூறியே தமிழரின் வாழ்வை புதைக்குள் தள்ளிய கேவலம் நிறைந்த வாழ்வை தமது மேல் சட்டையாக அணிந்துக் கொண்டிருக்கும் மேதாவிகளின் படையணி நீண்டிருக்கிறது.

ஆனால், தமது மக்களின் வாழ்வுக்காக, தமது மக்களின் துயர் நீக்குவதற்காக, தமது மக்களின் வாழ்வு நீடித்த அமைதியும், சமாதானமும், நம்பிக்கையும், வளமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக தம்மையே அர்ப்பணித்த ஒரு வீரத் திருமகனை நாம் தலைவனாக பெற்றிருப்பது நமக்கு நாம் வாழும் காலத்திலேயே அவரோடு இணைந்து நாம் வாழ்வது மிக மிக பெருமைக்குரியதும், மிக போற்றுதலுக்குரியதும், நம்மையே நாம் உயர்த்திக் கொள்ள தக்கதுமான ஒரு உயரிய நிலை. இதுவே எமக்கு முழு நிறைவை தந்திருக்கிறது. நமது தேசிய தலைவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம். இது ஒன்றே போதும், இந்த தேசிய அடையாளத்தில் நமது பங்கு இருக்கிறது என்பதை அறிவிக்க. நாம் தேசிய தலைவரின் நலனுக்காக வாழவில்லை, ஆனால் தேசிய தலைவரின் ஆணைக்காக வாழ்கிறோம். காரணம், அவர் பிறப்பிக்கும் ஆணை எந்த நிலையிலும் இந்த மண்ணின் மாண்புக்காகத்தான் இருக்கும். தமது மக்களின் மகிழ்வுக்காகத்தான் இருக்கும்.

அவர் குறிப்பறிந்து செயல்படும் சிறப்பு வாய்ந்தவராக பல நேரங்களில் வெளிப்பட்டிருக்கிறார். இப்போது ராஜபக்சே சகோதரர்களின் விசுவாச நாயாக செயல்படும் கருணா, ஒருமுறை பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார். நாங்கள் உறங்கிக் கொண்டிருப்போம். திடீரென விடியற்காலை மூன்று மணிக்கு எமது தலைவர் வருவார். இந்த போர் திட்டத்தில் மாற்றங்கள் இருக்கிறது. நீங்கள் இந்த பகுதிக்கு செல்லுங்கள். அவர்கள் அந்தப் பகுதிலிருந்து வருவார்கள் என்று சொல்லிவிட்டு புறப்படுவார். நாங்களெல்லாம் வியந்து பார்த்துக் கொண்டிருப்போம். இந்த மனிதர் உறங்குவாரா, உறங்க மாட்டாரா, இரவெல்லாம் விழித்திருந்து இதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாரா, இப்படிப்பட்ட ஒப்பற்ற மனிதனை நாங்கள் தலைவனாக பெற்றிருக்கிறோமோ என்று எங்களையே நாங்கள் பாராட்டிக் கொள்வதுண்டு.

ஆக, எதிரிகூட எமது தேசிய தலைவரை விரல்நீட்டி, அவரின் நேர்மையை, அவரின் மாந்த நேய பற்றை, நமது இனத்தின் மீட்புக்காக அவர் களமாடிய வீரத்தை வியந்துதான் இருக்கிறார்களே தவிர, இதுவரை யாரும் சுட்டிக்காட்டி அவரின் தவறை சொன்னது கிடையாது. இந்த வரலாற்று நாயகன், தமது வாழ்வில் ஒவ்வொரு துளி நேரத்தையும் தமது மக்களின் விடுதலைக்காகவும், தமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமது மக்களின் வாழ்வுக்காகவும் அர்ப்பணித்தார். தமக்கான நேரம் என்று அவர் ஏதாவது ஒதுக்கிக் கொள்வாரா என்று பல்வேறு தருணங்களில் போராளிகள் பேசிக் கொள்வார்களாம். காரணம், எந்த நேரத்தில், எந்த இடத்தில் அவர் எப்படி தோன்றி, அவர்களுக்கு திட்டங்களை வகுத்துக் கொடுப்பார் என்பதை யாருமே அறியாதவாறு காலமெல்லாம் தமது மக்களின் விடுதலை ஒன்றிற்காகவே அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆகவேதான், நாம் இந்த நொடி வரை உறுதியாக நம்புகிறோம், உலகில் தமிழினத்திற்கான ஒரு அரசு அமையப்போவதை எந்த ஒரு ஆற்றலாலும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழர்களுக்கான அரசு இந்த புவிப்பந்தின் சிறப்பு வாய்ந்த அரசாக நீடித்து நிற்கும். நாளைய உலக சமூகம் தமிழர்களின் வாழ்வியல்களிலிருந்து தான் தங்கள் வாழ்க்கையை கற்றுக் கொள்ள முடியும். அறிவியல், புவியியல், வேதியியல், உயிரியியல், கடலியல், வானியல், தொலை தொடர்பியல், மாந்தவியல் என எதை எடுத்துக் கொண்டாலும் அது தமிழீழத்திலிருந்து, தமிழர்களின் மூளையிலிருந்து எடுக்கப்படும் செய்தியாகத்தான் அல்லது தமிழர்களின் சிந்தனையிலிருந்து புறப்படும் ஆற்றலாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிகழ்விலிருந்து எவ்வித மாற்றமும் நிகழப்போவது கிடையாது. காரணம், நமது அரசானது தேசிய தலைவரின் மூளையிலிருந்து உதித்த அரசு. நமது தேசிய தலைவர் தமது மூளையை மக்களின் வாழ்விலிருந்து சிந்திக்கிறார்.தமது மக்களின் வளர்ச்சியிலிருந்து வாசித்தறிகிறார். தமது மக்களின் வளத்திற்காக திட்டமிடுகிறார். தமது மக்களின் மகிழ்வுக்காக உழைக்கிறார். தமது மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக சிந்திக்கிறார். தமது மக்கள் நேர்மையோடும், உண்மையோடும் இருக்க வேண்டும் என்பதை தாமே வாழ்ந்து அவர்களுக்கு கற்பிக்கிறார். அவரின் ஒவ்வொரு அசைவும் நமது விடுதலையைக் குறித்தும், நமது வாழ்வை குறித்தும் தான் தெரிவிக்கிறது. உறங்கும் நேரம்கூட எமது விடுதலைதான் அவரின் கனவில் வந்து செல்கிறது. ஆகவே, இப்படிப்பட்ட ஒரு தலைவரை நமது விடுதலைக்காக நமக்கு இயற்கை அளித்திருப்பது உள்ளபடியே நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அந்த ஒப்பற்ற தலைவரை நாம் தொடர்வோம். அவரின் தலைமையில் அமையப்போகும் தமிழர்களுக்கான அரசு இந்த உலக வரலாற்றை திசை திருப்பும்.

-கண்மணி

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்