ஈழம்

ஈழம்

திங்கள், 29 ஜூலை, 2013

லெப்டினன்ட் சைமனின் வரலாற்று நினைவுகள்.

எமது மாவீரரின் வீரம்செறிந்த விடுதலைப் போர்பற்றியும் இலட்சியப்பற்றுடன் இணைந்த இனப்பற்று, நாட்டுப்பற்று என்பவைபற்றியும் எமது இளைய தலைமுறையினர் அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் செயல்பட வேண்டும்.

தம்மை இழந்து தமது இனத்தின் பெருமையையும் தாய்நாட்டின் விடுதலையையும் நேசித்த ஒவ்வொருவருக்கும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அழியாத வரலாறு உண்டு என்பதையும் ஆணித்தரமாக இங்கு பதிவாக வைக்கின்றோம்.


பொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய், விடியலுக்காய் எழுந்தவன் லெப். சைமன் (ரஞ்சன்).

தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரின் தொடரூந்து நிலையத்தில் சுமார் நூறுவரையிலான விடுதலைப்புலிப் போராளிகள் இராணுவப் பயிற்சிபெறும் நோக்கோடு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தனர். அப்போது ரஞ்சன் தனது போராளி நண்பர்களை நோக்கி இந்த பெங்களூர் நகருக்கு நான் அப்போதே வரவிருந்தேன்.

வானூர்தி ஓட்டியாக பயிற்சி பெறுவதற்கு இங்குள்ள நிறுவனத்தில் அனுமதியும் பெற்றிருந்தேன். ஆனால் வரவில்லை. இன்று, இங்கு நிற்கின்றபோது அதையும் எண்ணிப்பார்க்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனெனில் எமது மக்களின் விடுதலைக்கான ஓர் பயணத்தில் நாம் இருப்பதுதான் அந்த மகிழ்ச்சிக்குரிய காரணமாகும்.

தென் தமிழீழத்தின் எல்லையில் அமைந்துள்ள ஓர் ஊர்தான் பொத்துவில். இங்கு தமிழ்மொழியைக் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும், இந்துக்களும், கணிசமாக கிறிஸ்தவர்களும் இணைந்து வாழ்ந்து, எமது வரலாற்றைக் கூறக் கூடிய எமது பாரம்பரிய தாயகமாகவும் இது விளங்குகின்றது.

சிங்களம் பரவுகின்ற தென் தமிழீழத்தில் 1963 ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் இவ்வூர் அமைந்துள்ளதால் என்றும் சிங்கள ஆக்கிரமிப்பின் அபாயம் இருந்து கொண்டே வந்துள்ளது.

தமிழர்களின் இன விகிதாசாரத்தை தென் தமிழீழத்தில் மாற்றுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதும் இம்மாவட்டத்தில்தான் என்பதையும் வரலாற்று ரீதியாக நாம் அறிந்திருக்கின்றோம்.

அது மட்டுமல்லாமல் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கையும் பின்பு அம்பாறை மாவட்டமாக மாற்றப்பட்ட பகுதிகளிலே மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைக்கு எதிராக துறைநீலாவணை என்ற ஊரில் சிங்கள இராணுவத்தினரையும் அவர்களோடு இணைந்திருந்த சிங்களக்காடையர்களையும் எதிர்த்து ஆயுதம் தூக்கி தாக்கிய வரலாற்று நிகழ்வையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

தமிழ்மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் தூக்கவேண்டியநிலை அன்றே ஏற்பட்டுவிட்டது. வீரத்துடன் வாழ்கின்ற தமிழர்களுடைய நிலமான இம் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான போராளிகள் விடுதலைக்காக புறப்பட்டது ஒரு வரலாற்றுக்கடமையாகும்.

தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ள தமிழினம் தனது இலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ள ஐவ்வகை நிலங்களில் நெய்தல், மருதம், குறிஞ்சி ஆகிய மூன்றுவகை நிலங்களைக் கொண்டுள்ள பொத்துவில், உகந்தை முருகன் கோயிலினால் மேலும் சிறப்பான வரலாற்றை எமக்கு உணர்த்துகின்றது.

இக்கோயிலுக்கு அப்பால் தென் திசையில் அமைந்திருக்கின்ற பாணமை என்னும் ஊர் தமிழர்களுடையதாக இருந்து பின்பு சிங்கள ஊராக மாறியதையும் நாம் அறிந்திருக்கின்றோம். இன்று தமிழர்கள் எவரும் வாழவில்லை என்றநிலையில் இவ்வூர் இருக்கின்றது.

இவ்வாறான வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த பொத்துவில் மண்ணிலிருந்து புறப்பட்டவர்கள்தான் லெப். சைமன் (ரஞ்சன்), அம்பாறை மாவட்டத்தின் தளபதியாகவிருந்த கப்டன். டேவிட், லெப். ஜோசப் (நாகராஜா) என்பவர்களாகும்.

இவ்வூரிலும், இவ்வூரையண்டிய ஊர்களிலிருந்தும் தீவிரமாக செயல்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அரசியல் ரீதியாக விடுதலையில் தமிழ் மக்கள் எழுச்சி கொண்ட காலப்பகுதியில் அதிதீவிரமாக இயங்கிய அம்பாறை மாவட்ட இளைஞர்களில் இவர்கள் குறிப்பிடத் தக்கவர்களாகவிருந்தனர்.

இம்மாவட்டத்தில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழர்களின் அரசியல் நிலையை தக்கவைத்துக்கொள்ள அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டனர். இன்னும் இம் மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்றுபட்டு செயல்படுவதால்தான் ஒரு பிரதி நிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடிகின்றது.

அக்கரைப்பற்றிலிருந்து பாணமை வரையிலான பகுதியில் அமைந்துள்ள அனைத்து ஊர்களும் தமிழ் சொல்லும் தமிழர்களுடைய நிலமாக இன்னும் இருக்கின்றது. விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறாமல் இருந்திருந்தால் அந்தநிலத்தை தமிழர்களுடைய நிலமாக எம்மால் இன்று பார்க்கமுடியாமல் இருந்திருக்கும்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களுடைய பாரம்பரிய சொந்தநிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களக்குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு தமிழர்களுடைய நிலங்கள் சிங்களவர்களுடைய நகரமாக மாற்றப்பட்டதை நாம் பார்த்திருக்கின்றோம்.

1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்திற்கான நீதியான நியாயமான காரணங்களை எம்மால் கூறிக்கொண்டே இருக்கமுடியும். இது எமது இனத்தின் அடிப்படை தனிமனித உரிமையுடன் அமைந்ததாகவும் இருக்கின்றது.

1970 களில் உணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் தீவிரமாக விடுதலையைப் பற்றி எண்ணத் தொடங்கினர்.தம்வாழ்வைவிட தமது இனத்தின் வாழ்வை மேலாக எண்ணி களமிறங்கினர். சிங்களக் காவல்துறையினரின் கண்காணிப்புக்குள் இவர்களின் நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அச்சமின்றி தமது பயணத்தை தொடந்தனர்.

பொத்துவில் என்னும் ஊரில் தமிழர்களுடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தையும், அதனோடு இணைந்த வியாபாரத்தையும் தொழிலாகக்கொண்ட வசதிபடைத்த குடும்பத்தில் 1956 .09 .20 அன்று பிறந்த ரஞ்சன். தன் வாழ்வைவிட தமிழர்களின் விடுதலையை நேசித்ததனால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தீவிரசெயல்பாட்டாளராக தன்னை மாற்றிக்கொண்டார். அடக்குமுறையிலிருந்து தமிழினம் விடுதலை பெறுவதற்கு ஆயுதப்போராட்டமே சிறந்த வழி என்பதில் அசையாத நம்பிக்கையும் கொண்டிருந்தார்.

1977 ம் ஆண்டு ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்துக்கு தொகுதி அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. தென் தமிழீழத்தில் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ளடக்கப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, அம்பாறை. பொத்துவில் ஆகிய தொகுதிகளுக்குள் பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்தது. இத்தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ரஞ்சனின் தந்தை கனகரத்தினம் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.அம்பாறை தவிர்ந்த ஏனைய தொகுதிகளில் முஸ்லிம் ஐக்கிய முன்னணி ஆதரவுடன் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கனகரத்தினம் பொத்துவில் தொகுதியிலிருந்து இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். இத்தேர்தலில் தமிழ் இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகயிருந்தது. தமிழீழம் என்ற இலட்சியத்தையடைவதற்கு அரசியல் வழியை விட ஆயுதப் போராட்ட வழியே சரியானபாதை என்பதில் மாற்றுக்கருத்தில்லாத நிலை தமிழ் இளைஞர்களிடமிருந்தது.

இதனால் ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக அரச நிறுவனங்களிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையொன்றை திட்டமிட்டனர்.

1978 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரமாகச் செயல் பட்ட இளைஞரான பரமதேவாவுடன் ஒன்றிணைந்து செங்கலடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை பரமதேவா, ரஞ்சன் இன்னும் இருவருடன் சேர்ந்து மேற்கொண்டனர்.

இச்சங்கத்திற்கு எதிரே அமைந்திருந்த சாந்தி சாராயவிடுதியில் சாராயம் அருந்திக்கொண்டிருந்த சிங்கள காவல் துறையினரின் புலனாய்வாளர்களுக்கு இச்சம்பவம் தெரிந்ததனால் ரஞ்சன் குழுவினரின் வாகனத்தை பின்தொடந்தனர். மட்டு – பதுளை நெடுஞ்சலையில் கரடியனாறு என்ற ஊரை அண்மித்தபோது புலனாய்வாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பரமதேவா விழுப்புண் அடைந்த நிலையில் ரஞ்சன் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இவர்களுடன் சாரதியாக சென்றவர் தப்பிவிட்டார்.

அதன்பின் நீதிமன்றத்தில் நடாத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் ப . நோ. கூ . சங்கப் பணியாளர்களால் இனங்காணப்படாத நிலையில் விடுதலை செய்யப்படவிருந்தனர். ஆனால் சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள காவல்துறையினரும் விரும்பாத நிலையில் தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது.

இவர்களைப் போன்றவர்களை விடுதலை செய்ய விரும்பாத சிங்கள அரசு வாக்குமூலத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவதற்கு ஏற்றவிதத்தில் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து இம் மூவருக்கும் 5 வருட சிறைவாசத் தண்டனையை விதித்தது.

போகம்பர என்ற சிங்கள ஊரில் அமைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தில்தான் ரஞ்சன் சிறை வைக்கப்பட்டிருந்தார். இச்சிறையில் சிங்களக்காடையரின் அட்டகாசத்தினால் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

தமிழ் அரசியல் கைதியான ரஞ்சன் மீது பலமான சிங்களக்காடையன் ஒருவன் தாக்குதல் நடத்த முற்பட்ட போது குளிப்பதற்கு வைத்திருந்த வாளி ஒன்றினால் அவனை மயக்கமுற்றுவிழமட்டும் தாக்கி தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைக்குள் ஒரு பாதுகாப்பைக் கொடுத்தான்.

தமிழ் உணர்வோடு, தமிழனின் வீரத்தோடு, தன்மானத்தோடு வாழ எண்ணுகின்ற ரஞ்சன் போன்றவர்கள். சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டாலும் அடங்காத் தமிழர்களாக வாழ்ந்ததை எம்மால் மறக்கமுடியாமல் இருக்கின்றது.

இவர்கள் வாழ்ந்த காலத்தில், இவர்களின் ஒவ்வொரு செயல்பாடும் தன்னலமற்றதாக தமது இனம் சார்ந்ததாக இருந்ததை வரலாற்றில் பதிவு செய்வது காலத்தின் பொருத்தமான ஒன்றாகும். ரஞ்சனின் தந்தை கனகரெத்தினம் கொள்கை, இலட்சியத்தைவிட்டு தடம் புரண்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக செயல்பட்டு சிங்களப் பேரினவாதியான ஜே . ஆர் .ஜெயவர்த்தன அரசுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மந்திரியாக நியமிக்கப்.பட்டார்.

இச்சந்தர்ப்பத்தில்தான் கனகரத்தினம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொழும்பில் வைத்து சுடப்பட்டார். ஆனால் அவர் சாகவில்லை அப்போதும் ரஞ்சன் மனநிலையில் எவ்வித சலனமும் ஏற்படவில்லை. ஆயுதப் போராட்டமொன்றில் ஈடுபடுவதையே விருப்பமாக கொண்டிருந்தார்.

தந்தையின் இச்செயல் ரஞ்சன் அவர்களுக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்திருந்தது. பாசத்திற்குப்பால் தமிழ் மக்கள் மீது கொண்டபாசம், அவர்களின் உரிமை அவர்களின் விடுதலை என்பவற்றில் ரஞ்சன் அவர்களின் ஈடுபாடு மிகவும் அதிகமாகவே காணப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் ஆயுதம் தூக்கிய போராளியாக மாறிய வரலாற்றுப் பதிவாகவும் இது அமைந்தது.

இச்சந்தர்ப்பத்தில் இன்னுமொன்றை குறிப்பிட விரும்புகின்றோம் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிப் போராளியாக செயல்பட்ட அக்கால பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்களின் மகன் மேஜர். கமல் அவர்களையும் எண்ணிப் பார்க்கின்றோம்.

விடுதலைப் போராட்டத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்திய கரும்புலி கப்டன். மில்லர் தாக்குதல் நடத்திய நெல்லியடி ம. மாகவித்தியலயத்தில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவத்தினர் மீதான தாக்குதலில் மேஜர். கமல் வீரச்சாவடைந்தார்.

தனித்துச் சிந்தித்து, தனித்துச் செயல்பட்டுக் கொண்டிருந்த ரஞ்சன் குழுவினர் பலத்தைப் பெருக்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படஎண்ணிய வேளையில் தமது பார்வையில் பட்டவர்தான் எமது தேசியத் தலைவர் வே. பிரபாகரன்.

தமிழீழத்தை மீட்டெடுக்கும் உறுதி தளராத கொள்கைப்பற்று, நிமிர்ந்து நின்று எதிரியைச் சந்திக்கும் திறன், தனது நலனைவிட தாய்மண்ணின் விடுதலை, தமிழ்மக்களின் நல்வாழ்வு என்பதையே உயிர்மூச்சாக கொண்ட தமிழ் தேசியத்தின் தலைவருடன் இவர் இணைந்துகொண்டது காலத்தின் கட்டாயம் என்பதையே உணரமுடிகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமையில் கிடைத்த பெருவெற்றியினால் பாராளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் கொள்கையை விட்டு, கட்சி மாறிய செயலானது அனைத்து தமிழ் மக்களையும், தமிழ் இளைஞர்களையும் ஆத்திரமடைய வைத்தன. ஆனால் அவருடைய மகன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயலாற்ற முன்வந்ததை வரவேற்று, தன்னுடன் இணைத்துக்கொண்ட எமது தேசியத் தலைவர் அவர்களின் பரந்த நோக்கையும் தீர்க்கதரிசனமான கொள்கைகளையும் நாம் இன்று நினைத்துப் பார்க்க முடிகின்றது.

சுயனலமற்றவர்களையும், கொள்கையில் உறுதியானவர்களையும் தம்முடன் இணைக்கின்ற எமது தலைவரின் செயல் பாட்டுக்கு இது ஓர் பெரிய உதாரணமாகும்.

இந்தியாவின் விடுதலைப் புலிகளின் முதலாவது பாசறையில் ரஞ்சன் உட்பட 100 வரையிலான போராளிகள் பயிற்சியை மேற்கொண்டனர். இங்கு பயிற்சி பெற்ற அனைத்து போராளிகளுக்கும் ரஞ்சன் பற்றிய பின்னணி தெரிந்திருந்தும் அவர்கள் எல்லோரும் ரஞ்சன் மீது அளப்பெரிய மதிப்பு வைத்திருந்தனர்.

ரஞ்சன், சைமன் என்னும் பெயருடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பயிற்சியை முடித்துக்கொண்டு தாய்நாட்டுக்குத் திரும்பிய பின் இயக்கத்தின் சில நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகப் பணியாற்றத் தொடங்கினார்.

தலைவரின் ஆணைப்படி பரமதேவா அவர்களின் வீரச்சாவைத் தொடர்ந்து மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக பணியாற்றச் செல்வதற்காக தனது பயணத்தை வட தமிழீழத்திலிருந்து தென் தமிழீழத்திற்கு ஆரம்பித்தார்.

அக்காலத்தில் போராளிகள் நடைப்பயணத்தின் மூலமாகத் தான் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்வது வழக்கமாகவிருந்தது. சைமன் (ரஞ்சன்) குழுவினர் தென் தமிழீழம் நோக்கிய பயணத்தில் வன்னியில் நின்றபோது கொக்கிளாய் ஸ்ரீ லங்கா இராணுவ முகாமை தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர்.

13 . 2 .1985 அன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சைமன் குழுவினரும் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் சைமன் (ரஞ்சன்) பொத்துவில் அம்பாறை, காந்தருபன் கல்லடி மட்டக்களப்பு, கெனடி கிரான் மட்டக்களப்பு, மகான் கம்பர்மலை, ரவி செம்மலை, ஜெகன் திருகோணமலை, சோனி சாவாகச்சேரி, தனபாலன் பரந்தன், காத்தான் சாவாகச்சேரி, வின்சன் (பழசு) பருத்தித்துறை, நிமால் பருத்தித்துறை, சங்கரி வல்வெட்டித்துறை, வேதா கண்டவளை, காந்தி தம்பலகாமம், ரஞ்சன் கண்டவளை, மயூரன் உட்பட 16 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதலாகவும் இது வரலாற்றில் பதிவாகியது. தென்தமிழீழத்தின் எல்லையிலிருந்து புறப்பட்ட லெப்.சைமன் அழியாத வரலாற்றுடன் எமது மக்களின் மனங்களில் என்றும் இடம் பெற்றுள்ளார்.

வரலாற்றைப்படிப்பவர்கள்தான் வரலாற்றில் இடம்பெறவும் முடியும் வரலாற்றைப் படைக்கவும் முடியும். வரலாறு எப்போதும் எமக்கு வழிகாட்டியாக அமையும். இவற்றை எமது இளந்தலை முறையினர் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்க்கின்றான்.


தன்னாட்சி என்பது தமிழரின் பிறப்புரிமை.
தமிழீழம் என்பது தமிழரின் வாழ்வுடமை.

தமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த லெப்டினன்ட் சைமன்  அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

- எழுகதிர்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us