ஈழம்

ஈழம்

சனி, 14 டிசம்பர், 2013

மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்.

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.

உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்கு விதி விலக்கல்ல.


எனினும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்யப் முனைவோர், போராட்டத்தின் – மிகக் குறிப்பாகச் சொல்வதானால் போராட்ட வழிமுறையின் – செல்நெறியைத் தீர்மானிப்பதில் தேசியத் தலைவருக்கு அடுத்ததாக அதிகம் செல்வாக்குச் செலுத்திய ஒரு தனிநபரைக் கண்டறிவராகில் அது ~தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கத்தைத் தவிர வேறு யாருமாக இருக்க முடியாது.

ஆயுதப் போராட்டங்கள் பெரும்பாலும் உருவாக்கப்படுவதில்லை. உண்மையான நேர்மையான விடுதலைப் போராட்டங்கள் சூழ்நிலையின் குழந்தையாகவே பிரசவிக்கின்றன. இத்தகைய வேளையில் பெரும்பாலும் உணர்ச்சியால் – மிக அரிதாக – உணர்வால் உந்தப்பட்ட தனிநபர்கள் போராட்டத்தின் முன்னணிப் பாத்திரத்தை ஏற்றுக் கொள்கின்றனர். இது தவிர்க்க முடியாத ஒரு நியதியாக உள்ளது.

இத்தகைய போராட்டங்களை புத்திஜீவிகள் மிகவும் கவனத்துடன், தள்ளியிருந்து அவதானிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை இத்தகைய விடயங்கள் வாலிபப் பருவத்துச் சாகச விளையாட்டுக்களாவே தெரியும். எனவே ஆரம்பத்தில் இத்தகைய நடவடிக்கைகளை விமர்சிக்க முனைவர். முடிந்தால் முளையிலேயே கிள்ளிவிடத் துணிவர்.

ஆனால், இது முடியாமற் போகும் போதும், சமூகத்திலே ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவர்கள் உணரத் தொடங்கும் போதும், அவர்களுடைய முன்னைய அபிப்பிராயம் மாறும். இந்நிலையில் அவர்கள் தாமாகவே போராட்டங்களில் இணைந்து கொள்வர். அதற்கு வலுச் சேர்ப்பர். அத்தகையோரின் தேவையை உணர்ந்து அவர்களை நாடிச் சென்ற நிலைமை மாறி, அவர்களாகவே போராளிக் குழுக்களை நாடிச் செல்வர்.

அன்ரன் பாலசிங்கம் விடயத்திலேயும் இதுவே நடந்தது. லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த அவர் சென்னைக்கு வந்து தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். நட்பை ஏற்படுத்திக் கொண்டார் இந்த நட்பு எத்தகைய ஆழமானது என்பதைத் தொடர்ந்து வந்த காலங்களில் பல தடவைகளில் நாம் காணக் கூடியதாக இருந்தது.

அன்ரன் பாலசிங்கம் போராட்ட அரசியலில் பிரவேசித்த கால கட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட அரங்கில் பல போராட்ட இயக்கங்கள் இருந்தன. ஓடிக் கொண்டிருக்கிற குதிரைகளில் தொடர்ந்து ஓடக்கூடிய குதிரை அல்லது தொடர்ந்தும் ஓடப் போகின்ற குதிரை எது என்பதைத் தீர்மானிப்பதற்கு அவருடைய மதிநுட்பம் உதவியது. ‘இறந்த காலத் தெளிவும், நிகழ்கால நிதானமும் இருந்தால் எதிர்காலத் தீர்க்க தரிசனம் இயல்பாகவே உதயமாகும்” என்ற கூற்றுக்கு ஒப்ப அன்ரன் பாலசிங்கத்தின் தீர்க்க தரிசனம், அவரின் முடிவு சரியானது என்பதை நிரூபித்து நிற்கிறது.

அதேவேளை, தலைவர் பிரபாகரன் கூட ‘தான் தேடிக் கொண்டிருந்த நபர்” கிடைத்து விட்டார் என மகிழ்ந்தார். சரியாகச் சொல்வதானால் விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றை அன்ரன் பாலசிங்கத்துக்கு முந்திய காலம், அன்ரன் பாலசிங்கத்துக்குப் பிந்திய காலம் என இரண்டாக வகைப்படுத்தலாம்.

விடுதலைப் புலிகள் பத்தோடு பதினொன்றாக இருந்த காலங்களில், சித்தாந்த அடிப்படையில் செயற்பட்ட இயக்கங்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்ட ஏனைய இயக்கங்கள் அவர்கள் மீது வைத்த விமர்சனம், ‘விடுதலைப் புலிகள் இராணுவ சாகசங்களில் நம்பிக்கை கொண்ட தத்துவ வறுமையுடன் கூடிய சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன் செயற்படும் இயக்கம்” என்பதே.

இந்த விமர்சனம் ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்த போதிலும், தாமும் ஏதொவொரு தத்துவத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்ற உந்துதல் புலிகளின் தலைமைப் பீடத்திடம் இருந்தமையை மறுக்க முடியாது. தேசியத் தலைவரே ஒத்துக்கொண்ட விடயம், தன்னைப் பெரிதும் கவர்ந்த நூல்கள் தமிழர்களின் பண்டைய பெருமையைக் கூறும் சரித்திர நவீனங்களே என்பதாகும். அதே வேளை, மார்க்சிய நூல்களை அவர் முற்றாகப் புறந்தள்ளி விடவில்லை.

இந்த வேளையில்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியைப் புதிய பாதைக்குத் திசை திருப்பியது. இராணுவ ரீதியாக, சரியான திசையில் புலிகள் காய்களை நகர்த்திச் சென்ற போது, இராஜதந்திர ரீதியிலும் காய் நகர்த்த வேண்டிய தேவையை உணர்த்தி அதற்குச் செயல்வடிவம் தந்தவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் என்றால் அது மிகையாகாது.

எதிரியின் கோட்டைக்குள்ளேயே பிரவேசித்து அதிரடித் தாக்குதல்களை நடாத்தி எதிரியைப் பிரமிப்பில் ஆழ்ந்த போராளிகளால் முடிந்ததென்றால், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது, வீரம் மட்டுமல்ல, விவேகமும் தேவை” என்பன போன்ற ஏளனப் பேச்சுக்களைப் புறந்தள்ளி நாங்களும் கை தேர்ந்த இராசதந்திரிகளே என்பதை நிரூபிக்க அன்ரன் பாலசிங்கத்தின் வழி நடத்தல் உதவியது.

இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் 1989 இல் கொழும்புக்குச் சென்று மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுடன் பேச்சு நடாத்தி தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் ஒரு சேரப் பிரமிப்பில் ஆழ்த்தியதில் அன்ரன் பாலசிங்கத்தின் பங்கு அளப்பரியது. எந்த எதிரியுடன் போர் புரிந்து கொண்டிருக்கிறார்களோ அந்த எதிரியின் தலை நகருக்கு சொந்த ஆயுதங்களுடன் சென்று பேச்சு நடாத்திய இயக்கம் என்ற பெருமையைப் பெற்றுத் தந்தவரும் அவரே.

அன்ரன் பாலசிங்கத்தின் வகிபாகம், தனியே விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர முகவரியைத் தேடித் தந்தவர் என்பதோடு மட்டும் முடிந்து விடவில்லை. மாறாக, போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்த புத்திஜீவிகள் சமூகம் கூட அன்ரன் பாலசிங்கத்தின் போராட்ட ஆதரவு காரணமாக ஈர்க்கப்பட்டு போராட்டத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கம் எனக் கூறப்பட்டுத் தடை செய்யப்பட்ட போதிலும்கூட அன்ரன் பாலசிங்கத்தால் லண்டன் இருந்து கொண்டே விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் என்றும், உத்தியோக பூர்வ பேச்சாளர் என்றும் செயற்பட முடிந்தது என்றால் இராஜதந்திர வட்டாரத்தில் அவர் தனக்கெனத் தேடி வைத்திருந்த தனியிடமே அதற்குக் காரணம். துரதிஷ்டவசமாக, மிகவும் தேவைப் படுகின்ற இன்றைய தருணத்தில் அவர் எம்மத்தியிலே இல்லாது போய் விட்டார்.

ஒரு மனிதரின் வாழ்வு என்பது அவன் வாழுகின்ற போதிலும், மறைந்த பின்பும் அதே கனதியுடன் நினைவு கூரப்படுகின்ற தென்றால் அது அர்த்தமான வாழ்வாகின்றது. அந்த வகையில் தனக்கும் தான் சார்ந்த சமூகத்துக்கும் அர்த்தம் தரும் வாழ்வை வாழ்ந்த எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஈழத் தமிழர் மனதைவிட்டு என்றும் அகலமாட்டார் என்பது சத்தியமான உண்மை.



“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us