ஈழம்

ஈழம்

வெள்ளி, 13 டிசம்பர், 2013

அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி தேசத்தின் குரல் பாலா அண்ணா.

“பாலா அண்ணா” என ஈழத் தமிழ் மக்களினால் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழ் மக்களிடம் இருந்தும், உலகத்தில் இருந்தும் பிரிந்து சென்று விட்டார். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு மேதை இன்று உலகில் இல்லை.


‘தேசத்தின் குரல்’ என மகுடம் சூட்டப்பட்டுள்ள அரசியல் ஆலோசகர் அன்ரன்பால சிங்கம் அவர்கள் பல்வேறு வடிவில் உலகிற்கு அறியப்பட்டவர். ஒரு ஊடகவியலாளராக, ஒரு படைப்பாளியாக, ஒரு தத்துவ ஆசிரியராக, ஒரு இராஜதந்திரியாக, ஒரு விடுதலை அமைப்பின் ஆலோசகராக, இவையாவற்றிற்கும் மேம்பட்டதாக ஒரு பண் பட்ட மனிதராக அவர் அடையாளம் காணப்பட்டவர். இதுவே அவரை ‘தேசத்தின் குரல்’ என்ற உயர் நிலைக்கு உயர்த்தியது.

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அறிவு, ஆற்றல், ஆளுமை என்பவை ஒரு புறம் எனின், அவரின் தோழமை என்னும் இயல்பு அவரின் பண்பட்ட மனிதத் துவத்தின் உயர்ந்த வெளிப்பாடு. அவரால் அறியப்பட்டவர்கள் அவருக்கு பழக்கப்பட்டவர்கள் அவரின் தோழமையை அறிந்திருக்க முடியும், அனுபவித்தும் இருக்க முடியும்.

அவரால் அறியப்பட்ட ஒரு போராளியில் இருந்து, ஏன் ஒரு பொதுமகனில் இருந்து இராஜதந்திரிகள் வரையில் அவர் தோழமை கொண்டவராகவே இருந்துள்ளார். அவரின் இக் குண இயல்பு அவர் மீதான பற்றுதலையும், பாசத்தையும் ஒருபுறம் வளர்த்ததெனில் இன்னொருபுறம் அவர் மீதான மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தியது எனில் மிகையில்லை.
அவரது அறிவு, ஆற்றல், ஆளுமை என்பன பல தடவை வெளிப்படுத்தப்பட்ட துண்டு. இதே சமயம் அவர் தன்னைச் சார்ந்தவர்களையும் சரி, பிறரையும் சரி தம்மைச் சந்தித்த அனைவரையும் அவர் தனது ஆளுமைக்குள் கொண்டு வரும் ஆற்றல் மிக்கவராகவே இருந்தார். இதனால் அவருடன் பழகியவர்கள், தொடர்பு கொண்டவர்கள் எப்பொழுதுமே அவருடன் நெருங்கியே இருந்தனர். அது மட்டுமல்ல, அவர் ஒரு பண்பட்ட மனிதர், பெருந்தகை, தன்னுடன் இருந்தவர்கள், பழகியவர்கள், அவற்றிற்கும் மேலாகத் தமிழ் மக்களின் துன்பதுயரங்களை விளங் கிக் கொண்டவர். அதற்கென தன்னால் உதவுவதற்கென இயன்றவரை செய்வதற்கு முற்பட்டவர். ஆயினும் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் அதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கவில்லை.

தன்னுடைய உழைப்பு தேசத்திற்கானது என்ற பரந்த சிந்தனை கொண்டவர். இதனால் தனது உழைப்பிற்கான பயனை எதிர்பார்க்காதவர், கோராதவர், இத்தகையவரின் முப்பது வருடகால அரசியல் வாழ்வு குறித்து, மதிப்பீடுகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆயினும் தற்பொழுது அதுகுறித்த முடிவிற்கு எவரும் வந்துவிடுதல் முடியாது.
‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இழப்பானது அவர் சார்ந்திருந்த அமைப்பிற்கானது அவரைச் சார்ந்திருந்தவர்களுக்கானது அவர்களினால் அது இட்டு நிரப்பமுடியாதது ஈடுசெய்ய முடியாதது என்ற வாதம் பலரால் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால், உண்மையில் ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இழப்பானது தமிழர் தேசத்திற்கானது. தமிழ் மக்களுக்கானது. தனி நபர்களுக்கானதோ, அன்றி ஒரு அமைப்பிற்கானதோ மட்டு மானதல்ல. ஆகையினால் இது தமிழர் அனைவருக்கும் ஆனது.
‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழர் தேசத்திற்காற்றிய பணி இரண்டு வகைப்பட்டது.

1. தமிழ் தேசத்தின், தமிழ் மக்களின் உரிமைக்கான கோரிக்கையை, நியாயப் பாட்டை தத்துவார்த்த அடிப்படையிலும், கொள்கை அடிப்படையிலும் தெளிவுபட சர்வதேச மட்டத்தில் நிலை நிறுத்தினார்.

2. தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை வழி நடத்திய அதன் தலைமைத்துவத்தை, அவ் அமைப்பைப் பலப்படுத்தினார், வளப்படுத்தினார்.

இவை இரண்டும், ஒன்றில் ஒன்று தங்கியிருந்தன. அதாவது தமிழர் தேசம் என்பதும் இதன் இருப்பும் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தினதும், அமைப்பினதும் இருப்பிலும், வளர்ச்சியிலுமே தங்கியிருந்தது என்பது ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பால சிங்கம் அவர்களினால் தெளிவாகவே உறுதி செய்யப்பட்டிருந்தது, நம்பப்பட்டது.

இதே சமயம் பௌத்த-சிங்களப் பேரின வாதம் இதிகாசங்களின் கற்பனை வாதத்திற்குள் மூழ்கிப்போய்க் கிடக்கின்றது என்பதையும் அது அதில் இருந்து விடுபட்டு இன்றைய அரசியல் யதார்த்தத்திற்குள் வரப் போவதில்லை என்பதையும் அவர் நன்கு விளங்கிக் கொண்டும் இருந்தார். அதாவது சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் இறங்கி வந்து தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கப் போவதோ அன்றிப் பகிர்ந்தளிக்கப் போவதோ இல்லை என்பதை அவர் தெளி வாகவே உணர்த்தியிருந்தார்.

இந்நிலையில், அவர் ஆரம்பம் முதலே இலங்கையில் தமிழ் மக்களின் அடையாளத் தைத் தெளிவாகவே தத்துவார்த்த ரீதியில் வரையறை செய்யவும் அடையாளம் செய்யவும் முற்பட்டார். தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் திம்புப் பேச்சுவார்த்தையை நெறிப்படுத்தும் சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கியபோது அதனை அவர் இலங்கையில் தமிழரின் அடையாளத்தை, இருப்பை உறுதிப்படுத்துவதற்கான தளமாக ஆக்கிக் கொண்டார்.

தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பன தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்விற்கான அடித்தளமாக அன்று முதல் கொள்ளப்பட்டது. இன்று அது கேள்விக்கிட மற்றதொன்றாக, நியாயப்பாடுமிக்கதாக சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதொன்றாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தேசத்தின் குரல்’ அன்ரன்பாலசிங்கம் அவர்கள் அடையாளப்படுத்திய இவ்விடயத்தை எவரும் புறம் தள்ளிவிட முடியாத தொன்றாக இருந்தது என்பதை நோர்வேயின் சிறப்புத்தூதுவரான ஹான்சன்பௌயர் அவர்கள் கூடச் சுட்டிக்காட்டியிருந்தார். “எமக்கு நல்ல நண்பனையும், தமிழ் மக்களின் உரிமைக்காக வாதாடிய யாராலும் தோற்கடிக்க முடியாத மிகப் பெரும் சக்தியையும் இழந்துவிட்டோம்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் நியாயப்பாட்டை, அதற்கான அடிப்படையினைச் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் தெளிவான நியாயப்பாட்டை வெளிப்படுத்தியவர். இலங்கையில் இரு அரசுகள் உருவாவது குறித்த சர்வதேச அரசுகளின் அபிப்பிராயம் என்பது பூகோள அரசியல்- இராணுவ நலன்கள் சார்ந்தவை.

ஆனால் இலங்கையில் தமிழ் மக்களின் உரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமை சார்ந்தவை. இவ்விடயத்தில் சர்வதேசத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தமைக்கு தேசத்தின் குரல்| பாலசிங்கம் அவர்களின் பங்கு, பணி மகத்தானது.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டமும்- அதன் தலைமைத்துவமும் கடந்த காலத்தில் அரசியல், இராஜதந்திர, இராணுவ ரீதியில் பெரும் சவால்களையும் நெருக்கடியும் சந்தித்ததுண்டு. ஒரு புறத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மைய சக்தியான விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையையும் ஓரம் கட்டிவிடவும் அதனை அழித்துவிடவும் பெரும் சக்திகள் கூட பெரும் முயற்சிகள் மேற்கொண்டதுண்டு.

இவற்றைத் தேசியத் தலைமை அரசியல்- இராணுவ- இராஜதந்திர வழி முறைகளில் எதிர் கொண்ட போது அரசியல் மற்றும் இராஜதந்திர வழிவகைகளை வகுத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றிருந்த ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அவ்வேளை களில் ஆற்றிய பெரும் பணியானது தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திய தோடு, விடுதலை அமைப்பின் வெற்றிகரமான நகர்வுகளுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

இதேவேளை இன்று தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமானது, இனப் பிரச்சினை என்ற வடிவத்தில் சர்வதேசத்தின் கவனத்தைக் கவர்ந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தைத் தெளிவான தடத்தில் சர்வதேசத்தின் முன் கொண்டு செல்வதற்கான இராஜதந்திர வழி முறையை அவர் ஏற்படுத்திக் கொடுத்துச் சென்றுள்ளார் எனக் கூறின் அது மிகையாக மாட்டாது.

இராஜதந்திர நகர்வுகளும் அரசியல் அணுகுமுறைகளும் கள யதார்த்தம், சர்வதேச சூழ்நிலை என்பனவற்றிற்குஏற்ப மாற்றம் காண்பவை, செய்யப்படவேண்டி யவை என்பது பொதுவானதொன்றே. ஆயினும், இராஜ தந்திர நகர்வுகள், சூழ்நிலைக் கேற்ப மாற்றம் காணப்பட வேண்டியவை ஆயினும் போராட்டத்தளத்தின் அடிப்படையில், மாற்றம் ஏற்படாதவாறு உறுதியாக அதனை தத்து வார்த்தை அடிப்படையில் இட்டுக்கொடுத்ததில் ‘தேசத்தின் குரல்’ பாலசிங்கம் அவர்களின் பாத்திரம் மிகவும் முக்கியமானதாகும்.

இதேவேளை ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அரசியல் , இராஜதந்திரம் சார்புலமை, சமாதானத்தின் பால் கொண்டிருந்த பற்றுறுதி பேச்சு வார்த்தை மேசைகளில் அவர் காட்டிய ஆர்வம் என்பன அவரை ஒரு அங்கீகாரம் பெறாததொரு நாட்டின் அங்கீகாரம் பெற்றதொரு இராஜதந்திரியாகவே ஆக்கியிருந்தது.

குறிப்பாக நோர்வே உள்ளிட்ட பல ஐரோப்பிய நாட்டுப் பிரதிநிதிகள் இக்கௌரவத்தை அவருக்கு வழங்கியிருந்தனர். அவருடைய இராஜதந்திர நகர்வுகள், வெற்றி கொள்ளப்பட முடியாத விவாதத்திறன், எவ் வேளையிலும் உண்மை பேசும் உயர் பண்பு, அவற்றிக்கும்மேலாக அவரின் தோழமைப் பாங்கு என்பன அதற்கான அங்கீகாரத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருந்ததெனலாம். அவரை இராஜீக ரீதியில் சந்தித்த பலர் பின்னர் நட்புறவுடன் பழக்கத்தை வளர்த்துக்கொண்டனர்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம் தேசத்திற்கு விட்டுச் சென்றவற்றில் மற்றுமொரு சொத்து தமிழரின் விடு தலைப்போராட்டத்தின் வரலாற்றுப்பதிவான “போரும் சமாதானமும்” என்னும் நூலாகும். விடுதலைப்புலிகள் அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் கூறும் இந்நூலுடன் அவரின் ‘விடுதலை’ மற்றும் அவரின் பாரி யார் அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது கணவரின் ஒத்துழைப்புடன் எழுதிய ‘சுதந்திர வேட்கை’ என்பன தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய வரலாற்றுப் பதிவுகள் ஆகும்.

இந்நூல்கள் தமிழ் மக்களின்- விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றை மட்டுமல்ல, தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் விடுதலை உணர்வை, அவரின் தீர்க்க தரிசனமான, உறுதியான முடிவுகள், போராட்ட வரலாற்றின் திருப்பங்களையும் கூறுவதோடு, விடுதலைப்போராட்டத்தில் தேசத்தின் குரலான அன்ரன் பாலசிங்கம் அவர்களினதும் பங்கு பற்றியும் வெளிப்படுத் துபவையாக உள்ளன. தமிழ் மக்களின் விடு தலைப் போராட்டம் குறித்த வரலாற்று நூல் களாகவே இவை மதிப்பிடத்தக்கவையாகயுள்ளன.

இந்தவகையில் ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தனது பன்முகப்பட்ட ஆளுமையை தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்காக அர்ப்பணிப்புச் செய்தார். அத்தகையவரின் இழப்பானது ஈடு செய்ய முடியாதது என்பது கேள்விக்கு இட மற்றது. ஆனால் ஒருவரின் வாழ்வுடன் ஒரு தேசத்தின் வரலாறு முடிந்து போய் விடுவ தில்லை என்பதன் அடிப்படையில் அவர் விட்டபணியைத் தொடர்வதே அவரின் உழைப்பிற்குத் தமிழ் மக்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.


2006 ஆம் ஆண்டு தேசத்தின் குரல் ஓய்ந்தபோது வன்னியிலிருந்து வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையில் அதன் பிரதம ஆசிரியர் ஜெயராஜ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us