ஈழம்

ஈழம்

வெள்ளி, 7 மார்ச், 2014

மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் வீரவணக்க நினைவு நாள்.

மாமனிதர் 
கிட்டினன் சிவநேசன் 
தமிழீழம் யாழ் மாவட்டம் 
தாய் மண்ணில் : 21-01-1957
தாயக மண்ணில் : 06-03-2008

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள், மார்ச் 6, 2008ம் ஆண்டு பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.


இத்தாக்குதலில் சிவனேசனின் வாகன ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பவரும் கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் அன்று விடுத்த அறிக்கை:

தலைமைச் செயலகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம். 
07.03.2008.

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் ஒருவரை இன்று சிங்களம் அழித்துவிட்டது. தமிழினக்கொலைப் பரிமாணத்தின் உச்சமாக திட்டமிட்ட இந்தக் கோரக்கொலை நிகழ்ந்திருக்கிறது. சிங்கள அரச பயங்கரவாதத்தின் அசிங்கமான வடிவமாக வன்னி மண்ணிலே இந்தக் கொடுமை அரங்கேறியிருக்கிறது.

திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள் சுயநலம் கருதாது, நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் செயற்பட்ட தனித்துவமான மனிதர். உயர்ந்த உள்ளம் கொண்ட எளிமையான மனிதர். புனிதமான அரசியலாளர். தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர். அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்ளும் ஒரு உயரிய பண்பாளர்.

இவர் தமிழீழ மண்ணின் விடிவையும் தமிழீழ மக்களின் விடுதலையையும் தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துக் கொண்டவர். தமிழ் மக்கள் தமது சொந்தத் தாயக மண்ணில் இன்னல்கள் நீங்கி, இடர்கள் அகன்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழவேண்டும் என ஆவல் கொண்டவர்.

தமிழீழ மண்ணை ஆழமாக நேசித்தவர். அந்த மண் ஒரு சுதந்திர தேசமாக மலர்வதைக் காணத் துடித்தவர். இந்தத் துடிப்பில் உயிர்ப்புப்பெற்று, எமது விடுதலை இயக்கத்தையும் அதன் அரசியல் இலட்சியத்தையும் அதனை அடைவதற்கு நாம் நெறித்துள்ள போராட்டப் பாதையையும் முழுமையாக ஏற்றுப் பெரும் விடுதலைப் பணியாற்றியவர்.

யாழ். மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றப் பெரும் பொறுப்பைச் சுமந்தவாறு உலகெங்கும் அலைந்து, எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நியாயம் தேடினார். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எமது போராட்டத்திற்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டினார்.

சிங்கள அரசும் அதன் ஆக்கிரமிப்புப் படைகளும் எமது மண்ணில் நிகழ்த்தும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் உலகத்திற்கும் ஊடகங்களுக்கும் தெளிவாக எடுத்துக்கூறினார். சிங்களப் படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்துப் போராடினார். கடும் உழைப்பாலும் செயற்றிறனாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அன்னார் ஆற்றிய அரும்பணி அளப்பரியது.

திரு. கிட்டினன் சிவநேசன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.



"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர் சிவநேசன்.

தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர். சிவனேசன் அண்ணை, அன்பும் பண்பும் கடமையுணர்வும் நேர்மையும் ஆளுமையும் மிக்க ஓர் ஐனநாயகவாதி.

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் அவர்கள் இன்று வியாழக்கிழமை(06.03.2008) பிற்பகல் 1.10 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலும், புதன் கிழமை பாராளுமன்றத்தில் இடம் பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்திலும் கலந்து கொண்டு இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கெதிராக வாக்கழித்துவிட்டு இன்று அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பில் மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவின் மல்லாவியிலுள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் ஏ9 வீதி வழியாக பயணம் செய்து கொண்டிருந்தபோது கனகராயன் குளத்திற்கும் மாங்குளத்திற்கும் இடையிலான பகுதியில் வைத்து மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசன் அவர்கள் 21.01.1957ம் ஆண்டு யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பயின்ற இவர் தனது க.பொ.த உயர் தரக் கல்வியை யாழ் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்றார்.

பின்னர் கூட்டுறவுத்துறையில் தனது உயர் கல்வியை பூர்தி செய்ததுடன். யாழ் மாவட்ட பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் கணக்காளராக 1988-1990 வரை பதவி வகித்ததுடன் 1991- 1995ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அச் சங்கத்தினுடய பொது முகாமையாளராக பதவி வகித்தார்.

அதனைத் தொடர்ந்து வட பிராந்திய பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தின் பொது முகாமையாளராக 1996-2004 வரை பணி புரிந்தார். 2004 ம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பெருமளவு வாக்குகளுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் கரவெட்டியில் வசித்து வந்த இவரும் இவரது குடும்பமும் படையினரின் கெடுபிடி காரணமாக அங்கு வாழ முடியாத நிலையில் ஏ9 பாதை மூடப்படுவதற்கு சற்று முன்னதாக வன்னிக்கு இடம் பெயர்ந்து மல்லாவியில் வசித்து வந்தனர். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முழுமையாக ஏற்றுக் கொண்ட சிவனேசன் அவர்கள் தலைவரையும் போராளிகளையும் மக்களையும் தன் உயிருக்கு நிகராக நேசித்ததுடன் தமிழீம் என்னும் இலட்சியத்தினை தலைவர் பிரபாகரனது காலத்தில் பெற்றெடுத்து விட வேண்டும் என்ற அவாவுடனும் தளராத நம்பிக்கையுடனும் இறுதி மூச்சு வரை ஓடி ஓடி உழைத்த உத்தமராவார்.

தமிழ் மக்களை தேசிய விடுதலைப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் புனிதப்பணியில் தாயகத்திலும் புலம் பெயர்ந்த மண்ணிலும் ஈடுபட்டவர். ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் பல தடைவ பயணம் செய்த இவர் ஐரோப்பிய நாட்டின் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பல இராஐதந்திரிகளையும் அந்தந்த நாடுகளில் சந்தித்து தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்கொண்டு வரும் இன அழிப்பு தொடர்பாகவும் எடுத்துரைத்து சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டுவதில் பெரும் பங்காற்றியவர். நீண்டகாலமாக ஸ்ரீலங்க படைகளினதும் துணை இராணுவக் குழுக்களினதும் அச்சுறுத்தல்கள் தனக்கெதிராக தொடாந்து கொண்டிருந்த பொழுதும் கூட மிரட்டல்களுக்கு பணியாது தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர். சிவனேசண்ண அன்பும் பண்பும் கடமையுணர்வும் நேர்மையும் ஆளுமையும் மிக்க ஓர் ஐனநாயகவாதியாவார்.

தமிழ் மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த மாமனிதனை சிங்கள பௌத்த பேரினவாதம் பலி கொண்டுள்ளது. இப்படுகொலையை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சர்வதேச சமூகமும் இப்படுகொலையை கண்டிக்க வேண்டும்.

- செ.கஜேந்திரன். (06.03.2008)
 (பாராளுமன்ற உறுப்பினர்)

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us