ஈழம்

ஈழம்

திங்கள், 16 மார்ச், 2015

மக்களின் தோழன்,சிறந்த வேவு போராளி - மேஜர் எழிலரசன்

கிறிஸ்த்து பிறப்பின் நாளன்று கடற்கரையோரமாக அவனின் வரவுக்காய் காத்துநின்ற வேளை அந்த கொடிய துன்பியல் நிகழ்வு நிகழ்ந்தே போயிற்று..

ஆம் நாம் எதிர் பார்த்து காத்திருந்த எம்மினிய தோழர்கள் எம்மை சந்திப்பதற்கு முன்பாகவே எதிரியின் பதுங்கி தாக்குதலொன்றில் எம் மண்ணிலே வித்தாகி போனார்கள்.
இராணுவத்தின் பிரதேசமொன்றில் ஓர் அணியின் தலைவனாக செயற்ப்பட்டவன் தான் எம் இனிய தோழன் மேஜர் எழிலரசன்.


சிறுவயது முதல் தாயகபற்றுடன் வாழ்ந்த அவன், அவனது குடும்பம் பெரும் இழப்புகளை சந்தித்த போதும் தாயக வேள்வியில் தன்னை இணைத்து களமாடியவன்.
அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம் புலனாய்வு செயற்பாட்டில் ஈடுபடுவதும்,முகவர்களை கையாளுவதும், இவனுக்கு வழங்கபட்ட பணியானது.தனது பணியில் பல வெற்றிகளை சம்பாதித்து கொண்ட இவன் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமொன்றில் பகுதி தாக்குதல் பொறுப்பாளனாக நியமிக்கபட்ட காலமது.

ரோந்து செல்லும் இராணுவமொரு புறம், சுற்றிவளைப்பிற்காக குவிக்கபடும் இராணுவம் மறுபுறமாகவும், தேசத்துரோகிகளின் காட்டிக் கொடுப்புக்களின் மத்தியிலும், ஒரு சராசரி மனிதனாக, தாக்குதல் போராளியாக, வேவு போராளியாக, தடைகளையுடைக்கும் வீரனாக செயற்பட்டான் மேஜர் எழிலரசன். இவனது வாழ்விலும் காதலிருந்தது. தனது காதலி போராளியும்,களமொன்றிலே பணிபுரிய வேண்டுமென்ற கொள்கையை கொண்டிருந்தான்.

மிகவும் அன்பாகவும், ஆழமான நட்புணர்வுடன், பிறரை வசீகரிப்பதில் வல்லவன். மிகுந்த இரக்க சுபாவம் கொண்ட இவன் பல உயிரிழப்புகளை எமக்கு ஏற்படுத்திய பல தேசதுரோகிகளை மன்னித்து நல்வழி படுத்திய பெருமை இவனேயே சாரும். களமொன்றில் பணியொன்றினை மேற்கொண்டிருந்த வேளை எம் மண்ணில் சுனாமி தாக்கியதை அறிந்து எம் மக்களின் துன்ப,துயரங்களில் பங்கெடுத்த மெல்லிய மனதிற்க்கு சொந்தகாரன்.

கிறிஸ்த்தவ மதத்தை கொண்டிருந்த போதும் இந்து மத கடவுள்களை வழிபடுவதால் பிறதோழர்களால் கேலி செய்யபடுவதும், இவனின் நகைச்சுவை செயற்பாடுகளால் தோழர்களை எந்நேரமும் கலகலப்பாக வைத்திருக்கும் தோழமைக்கு சொந்தக்காரன்.

தனக்கு வழங்கபட்ட களமொன்றில் எதிரியால் பல துன்பங்களை அனுபவித்த மக்களை நேரில் சந்தித்து துயரங்களை பகிர்ந்த போது வரும் எதிரிக்கு பதிலடி வழங்க தீர்மானித்தான் அதற்கான வேவுகள்,வாகன நகர்வுகள் என்பவற்றை தனியே அவதானித்து தாக்குதலினையும் மிக சிறப்பாக செய்து முடித்திருத்தான். 

தலைமையின் அழைப்பை ஏற்று வன்னி மண் திரும்புவதற்கான ஆயத்தங்கள், இரவு முழுவதும் தொலைபேசியில் என்றுமில்லாதவாறு தோழர்களுடன் உரையாடி "காலை நேரில் சந்திப்போம் மிச்ச புதினம் கதைப்போம்" என கூறி சென்ற எம் தோழன் வரவில்லை எம்மிடம் அவன் எம்மனங்களிலேயே நிலையாக குடியிருந்து விட்டான்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த மேஜர் எழிலரசன் அண்ணாவிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும்  வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். 

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us