ஈழம்

ஈழம்

ஞாயிறு, 29 மார்ச், 2015

பிள்ளை முகம் மறந்த தாய்..!! ஒரு போராளியின் ஆழ் மனதிலிருந்து...

"அம்மா குடிக்கக் கொஞ்சம் தண்ணி தாறியளோ.......?"

பிள்ளையின் குரல் தான் கேட்டதோ என்னவோ அந்தத் தாய் மெய் மறந்து அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் நகர்கிறாள்......

அது இந்திய இராணுவம் ஈழ மண்ணை ஆக்கிரமித்து அவன் தாயையும் விதவையாக்கி அவனையும் சிறு வயதிலேயே போராட்டத்திலும் இணைய வைத்து விட்ட காலம். 

ஏதும் விபரமறியாத தன் பிள்ளை தன் மடிவிட்டுப் போன பிஞ்சு முகத்தையே கண்ணில் வைத்திருந்திருப்பாள் போல அந்த அன்னை.!!

எனினும் போராட்டம் அவனை சிறுவர் போராளியாக்கவில்லை படைத்துறைப் பள்ளியும்... காந்தரூபன் அறிவுச்சோலையும் அவனை புடம் போட்டு வளர்த்தது.

பதினொரு வயதில் சென்றவன் எட்டு வருடங்களின் பின்னர் திருட்டுத் தனமாக தன் தாயைப் பார்த்து விடுவது என்ற முடிவில் அன்று காலையிலயே புறப்பட்டு விட்டான்.

அன்று, ஆசிரியர் தினம்...

தன் தாய் இருந்த கிராமத்தில் இருந்த ஆசிரியர் ஒருவருக்கான ஆசிரியர் தின அழைப்பிதழைத் தன்னிடம் தருமாறு வாங்கிக் கொண்டு தன் தோழனுடன் (கப்டன் ஈகையமுதன் - வீரச்சாவடைந்து விட்டார்) புறப்பட்டவன் மதிய நேரத்தை அண்மித்து தன் வீட்டையடைந்தான். 

அறிவுச்சோலையில் தெரிந்தால் சிக்கலாகி விடும் தெரியாமல் இருக்க வேண்டுமானால் தோழனிடம் மறைத்தே ஆக வேண்டும்.

தூரத்தில் இருந்தே பார்த்து விடலாம் என்பது முடிவாகிற்று.!!

"தண்ணி வாங்கிக் குடிச்சிட்டுப் போவம் மச்சான் வா" என்றவன் கிணற்றடியில் துணிகளைக் கழுவிக் கொண்டிருந்த தன் தாயிடமே...

"அம்மா குடிக்கத் தண்ணி கொஞ்சம் தாறியளோ ..?" என்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குரல் கேட்டதும் அவன் தாய் அவன் முகத்தையே கூர்ந்து கவனிக்கவும் மாட்டி விடுவோமோ ..? என்று மறு பக்கம் திரும்பித் தோழனுடன் பேசுவது போல சமாளித்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் தாய் தண்ணி கொண்டு வந்து கொடுக்கவும் வாங்கிக் குடித்தவனுக்கு அன்று புரியவில்லை... அது தான் தன் தாயின் இறுதி அன்பு என்பது .........!.!

சென்றவனை வாசல் வரை பின் தொடர்ந்தாள் தாய்! அவன் சைக்கிளில் ஏறியதும் கேட்டாள்...

"தம்பி நீங்க எந்த இடம்..?"

மிரண்டு போனவன் சைக்கிளில் இருந்து மறுபக்கம் முகத்தை திருப்பியபடியே கேட்டான்...

"ஏனம்மா..?"

"இல்லைத் தம்பி என் பிள்ளையின் குரல் மாதிரி இருந்திச்சு அது தான்" என்றாள் ஏமாற்றத்துடன்.!! 
மனதிற்கு சரியாகப்படவில்லைப் போல மீண்டும் இறங்கி வந்தவன் சிறுமியான தன் தங்கையை தூக்கி முத்தமிட்ட படியே பொய் சொன்னான்...

"இல்லை அம்மா நான் மட்டக்களப்பு ..!"

விடைபெற்று சென்றவன் மறையும் வரை பார்த்துக் கொண்டனர் இருவரும்.

பிறகு வந்தாவது உண்மையை சொல்லிடணும் அம்மா பாவம்
என்ற எண்ணத்துடன் சென்றவனை காலமும் காலனும் நடைப்பிணமாக்கி விட்டன.!!

இராணுவம் வன்னியைக் கைப்பற்றுவதற்காக பின்னாளில் மேற் கொண்ட இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது எதிரியின் யுத்த டாங்கிகள் இடம் பெயர்ந்து மக்கள் தங்கியிருந்த இடத்தின் மீது மேற் கொண்ட காட்டு மிராண்டித்தனத்தில் அவன் தாயும் சகோதரியும் கொல்லப்பட்டு விட்டனர்.!!

யாழ்ப்பாணத்தில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த பெட்டி வியூகக் களமுனையின் உள்ளே முக்கிய பணியில் இருந்தவனுக்கு ஐந்து தினங்கள் தாமதமாகவே தகவல் சொல்லப்பட்டது.

அறிந்தவனுக்கு தான் செய்த மடத்தனமே நினைவுக்கு வர...

"இனிப் போய் என்ன அண்ணா செய்வது பிறகு ஆறுதலாக போறன்" என்றவனை சில தினங்களின் பின் கடல் வழியாக கட்டாயத்தின் பெயரில் பின் தளம் அனுப்பி வைக்க வீட்டுக்கு சென்றவனிடம் அக்கம் பக்கத்து மக்களே கதறினர்

"அவ இருக்கும் போது தன் பிள்ளை வருவான் என வீதியையே பார்த்திட்டு இருப்பா... இறந்த பின்பும் மூன்று நாள் உனக்காக வைத்திருந்தோம்..!!!"

அன்று உறைந்து உறங்கிப் போன தாயன்பு அவனையும் உறைய வைத்து விட்டது.!!

அவன் மீண்டும் தலைவனுக்கு பிள்ளையாகி தொடர்ந்தான் ..!

இருப்பினும் கடமைக்காய் நடைப்பிணமானவன் தான்.!!

- க. கண்ணன். 



பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us