Ad Code

Recent Posts

கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறனின் நினைவுகள்


லெப்.கேணல் அன்புமாறன் 
கனகலிங்கம் சுபாஸ்கரன் 
தமிழீழம்:முல்லைத்தீவு மாவட்டம் 
தாயக மடியில்:22.03.2008

முல்லைத்தீவு இன்று கரும்புலிகள் நாள்.என்னுடைய பாடசாலைக்கால நண்பன் சுபாஸ் (கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்) பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு.


புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் ஜோன் கல்வி இயங்கிக்கொண்டிருந்தது. 2000 ஆண்டு எனது பாடசாலையில் உயர்தரத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை. பற்றாக்குறை என்று சொல்வதை விட ஆசிரியர்கள் இல்லை. இதனால் நானும் என் சக மாணவர்களும் தனியார் கல்வி நிலையத்தையே நம்பியிருந்த காலம். சுபாஸ் ஜோன் கல்வி நிலையத்தில் எனது வகுப்பில் படித்தான். நான் உயரதரத்தில் எடுத்த பாடங்களையே அவனும் தெரிவு செய்திருந்தான். அதனால் தனியார் கல்வி நிலைய வகுப்புக்களில் எப்போதும் சந்திக்கும் சந்தரப்பம் கிடைக்கும்.


வகுப்புக்களில் இருக்கும் மாணவர்களில் சிலர் எப்போது வருவார்கள் எப்போது செல்வார்கள் என்று தெரியாது. ஒரு சிலர் வகுப்புக்களுக்கு கிழமைக்கணக்கில் வராமல் விட்டிருந்தால் கூட ஏனைய மாணவர்களால் அவர் வகுப்புக்கு வந்தாரா இல்லையா என்று தெரிவதில்லை. ஆனால் ஒரு நாள் ஒரு வகுப்பிற்கு சுபாஸ் வராமல் விட்டாலும் அவனை எல்லோரும் தேடுவார்கள். ஏனென்றால் வகுப்புக்களில் அவன் செய்யும் குறும்புகள் அவ்வளவு அதிகம்.

அவனை சக மாணவர்கள் சுபாஸ் என்று கூப்பிடுவதை விட கட்டை வாத்தி என்று தான் அழைப்போம். காரணம் அவனது உருவம். 


எங்களது வகுப்பில் மிகவும் குள்ளமாகவும் மெல்லிய உடலமைப்பையும் கொண்ட உருவம் அவன். அவனோடு தனியார் கல்வி நிலையத்தில் பழகிய பழக்கம் அவன் என்னை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்செல்வான். அவன் வீட்டில் செல்லப்பிள்ளை. அவனுக்கு மூத்த சகோதரர்கள் அனைவருமே பெண்கள். இவன் தான் கடைக்குட்டி. அக்காமார்களின் செல்லத்திற்கு அளவில்லை. வீட்டில் எவ்வாறு குறும்புத்தனமாக இருப்பானோ அதே போலத்தான் வகுப்பிலும் குறும்புக்காறன்.


எல்லோரும் தேசத்திற்கான தனது கடமையை ஆற்றவேண்டிய காலம் சபாசும் விடுதலைப்போராளியானான். சுபாஸ் அன்புமாறன் என்ற இயக்கப்பெயரோடு தேசத்திற்கான தனது பணியை ஆற்றத்தொடங்கினான். அவன் இயக்கத்தில் இணைந்து நீண்ட நாட்கள் நான் அவனை சந்திக்கவில்லை. சமாதானச்செயலகத்தில் ஒரு சந்திப்பை முடித்துக்கொண்டு கிளிநொச்சி காக்கா கடைச்சந்தியை உந்துருளியில் கடந்து கொண்டிருக்கிறேன். காக்கா கடைச்சந்தியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாதாரண உடையில் நிற்கும் அந்த உருவம் கட்டை வாத்தி மாதிரிக்கிடக்குதே என்று உந்துருளியை திருப்பினேன். உந்துருளியை திருப்பி அவனருகில் சென்றும் என்னைக்கண்டு விட்டான். ஓடிவந்து கட்டி அணைத்து எப்பிடி மச்சான் இருக்கிறாய் என்று நலம் வசாரித்தான். கூடவே நானும் நலம் விசாரிக்க மச்சான் எங்கட ரீவில நீ செய்தி வாசிக்கேக்க நான் எங்கட பெடியலுக்கு உன்னைப்பற்றி சொல்லுறநான். 


பெருமையா இருக்கு மச்சான் என்றவாறு பள்ளித்தோழர்கள் பற்றிப்பேசி நீண்ட நேரம் உரையாடி விட்டு அவனிடமிருந்து விடை பெற்றேன். அதன் பின்னர் அடிக்கடி அவனை கிளிநொச்சியில் சந்தித்து பேசுவதுண்டு. இருவருக்கும் நேரமிருந்தால் கதை நீழும். சிரிது காலத்தில் அவனை சந்திக்க முடியவில்லை. வேறு எங்கோ சென்றுவிட்டான். பல தடவை நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் இடங்களை தேடியிருக்கிறேன் அவனை சந்திக்கமுடியவில்லை.



பின்னர் 2008 ஒரு படப்பிடிப்பின் போது…. 


முல்லை கடற்பரப்பில் கடற்கரும்புலிகளை அவர்களது நவீன கடற்கலங்களோடு ஔிப்பதிவு செய்துகொண்டிருக்கிறேன். என்னை அன்புமாறன் ஏற்கனவே அவதானித்து விட்டான் ஆனால் நான் அவனை அவதானிக்கவில்லை ஔிப்பதிவு நிறைவடைந்தது. பெண் போராளிகள் சிலர் என்னிடம் வந்து அண்ணா நீங்கள் எடுத்த வீடியோக்களை ஒருக்கால் காட்டுங்கோ எங்களை எப்படி எடுத்திருக்கிறீங்கள் என்று பார்ப்போம் என்று என்னிடம் இருந்த ஔிப்பதிவு கருவியை கேட்கவே இப்போது நான் என்ன செய்ய என்று தயங்க அருகில் இருந்த இன்னொரு பெண்போராளி சொன்னாள் அண்ணா நீங்கள் இந்த வீடியோவ போடேக்க நாங்கள் உங்களோட இருக்க மாட்டம். நீண்ட தூரம் போயிருப்பம் அது தான் கேக்கிறோம் என்றால். இதற்குப்பின்னரும் அந்த ஔிப்பதிவுக்கருவி என்னிடம் இருக்க வேண்டுமா என்று எண்ணி ஔிப்பதிவுக்கருவியை அவர்களிடமே கொடுத்துவிட்டேன். அப்போது யாரோ ஒருவர் எனது பின்பக்கமாக வந்து இறுக கட்டிப்பிடித்து விட்டார்கள் யார் என்று தெரியவில்லை. ஒருவாறு இறுக கட்டிப்பிடித்த கைகளை இலேசாக்கி அந்த முகத்தைப்பார்த்தேன். என்னால் நம்ப முடியவில்லை. 


எதிரே அன்புமாறன். கருத்த வரிச்சீருடையுடன் உப்பு நீர் தோய்ந்தபடி சிரித்துக்கொண்டு நிற்கிறான். அவன் பேசுகிறான் என்னால் பேச முடியவில்லை. வார்த்தை வரவில்லை. வாயடைத்துப்போனேன்.


மச்சான் என்ன யோசிக்கிறாய் வா… அங்கால போவம் என்று என் கையை பற்றியபடி கடற்கரையில் நடக்கிறோம். நீண்ட தூரம் நடந்த பின்னர் என்னடா கதைக்கிறாய் இல்ல… என்ன என்றான். இல்ல மச்சான் உன்னை நான் இங்க எதிர்பார்க்கல்ல அது தான். அது ஒன்டும் இல்லடா சும்மா பயிற்சிக்கு கூப்பிட்டாங்கள் என்று என்னை சமாளித்தான். ஆனால் அந்த இடத்திற்கு செல்வதானால் எப்படி செல்ல முடியும் என்று எனக்குத் தெரியும். அது அவனுக்கும் தெரியும்.நீண்ட நேர அமைதியின் பின்னர் உரையாடல் தொடங்குகிறது.


ஏன் நீ இங்கு வந்தாய் என்று என்னால் கேட்க முடியவில்லை. அதனால் அந்த கேள்வியை அவனிடம் அந்த கேள்வியை தவிர்த்து விட்டாலும் என் மனதுக்குள் குடைந்து கொண்டிருக்க கதை தொடர்கிறது. நீண்ட நேர உரையாடலின் பின்னர் சொன்னான் மச்சான் கனநேரம் கதைசிட்டம் உன்னை உன்ற ஆட்கள் தேடுவாங்கள் வா போவம். என்று விட்டு என்னுடைய கையைப்பிடித்து அவனது தலையில் வைத்து மச்சான் நீ எனக்கு ஒரு சத்தியம் செய்யனும் என்றான். என்ன சொல் என்றேன்.என்னை இங்கு கண்டதை யாருக்கும் சொல்லக்கூடாது.. எங்கட வீட்ட சொல்லாதை என்றான். 


அவன் கேட்டதைப்போலவே சத்தியம் செய்து விட்டு இருவரும் விடை பெற்றோம்.

ஒரு வாரம் கடந்திருக்கும். ஒரு நாள் காலை. நான் குளிக்கும் போதும் வானொலிப்பெட்டியை கிணற்றடியில் வைத்து விட்டு குளிப்பது வழக்கம். புலிகளின் குரல் செய்தியை எப்போதும் தவற விடுவதில்லை. அன்றும் காலைச்செய்தி ஒலிக்கிறது. முதலாவது தலைப்புச்செயதி முல்லை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோரா கடற்கலம் கடற்கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிப்பு என்ற வெற்றிச்செய்தி ஒலிக்கிறது. அமைதியாக வானொலிப்பெட்டிக்கு அருகில் செல்கிறேன்.
இந்த வெற்றிகர தாக்குதளில் லெப்ரின் கேணல் அன்பு மாறன் வீரகாவியமானான் என்ற செய்தி ஒலிக்கிறது. ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். போராளிகள் எல்லோரும் வீரச்சாவடைவது வழமை தான் ஆனாலும் உற்ற நண்பன் வீரச்சாவு என்றால் யாரால் தான் தாங்க முடியும். அன்பு மாறனுக்கு அன்று வாக்கு கொடுத்த விடயத்தை இன்று தான் மீறியிருக்கிறேன். மன்னித்துவிடு சுபாஸ்…

Siva Karan


22.03.2008 அன்று நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட


லெப். கேணல் அன்புமாறன்
சுபாஸ்கரன் கனகலிங்கம்
முல்லைத்தீவு



மேஜர் நிரஞ்சனி
அன்பரசி நன்னித்தம்பி
கிளிநொச்சி




மேஜர் கனிநிலா
குணரூபா குணராசா
கிளிநொச்சி



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code