லெப். கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் செ.யோ.யோகி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…
இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் களநிர்வாகப் பொறுப்பாளராகவும் பின்னணி ஒழுங்கிணைப்பாளருமாக இருந்தார்.
2000 ஆம் ஆண்டு மீள இணைந்தோரின் (4.1) படையணிக்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற 21 காப்பரண்கள் மீதான தாக்குதலின் போது 4.1 படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார்.
இதேயாண்டு பளையைக் கைப்பற்றிய அணிக்குப் பொறுப்பாக இருந்தார். மீள இணைந்தோரின் படையணி, சோதியா படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து கைதடி, தச்சன்காட்டுப் பகுதிகளை கைப்பற்றும் தாக்குதல்களிலும் 4.1 படையணி, மாலதி படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்து சாவகச்சேரியைக் கைப்பற்றும் தாக்குதலிலும் பங்குகொண்டார்.
2001 இல் 82 மி.மீ மோட்டார் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அதேவேளை தீச்சுவாலை நடவடிக்கையின்போது முறியடிப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தார். 23.04.2008 முகமாலை முறியடிப்புச் சமரில் முறியடிப்பு அணிக்கும் 02 ஆம் கோட்டில் நின்ற அணிக்கும் பொறுப்பாக இருந்தார்.
08.05.1971 இல் வவுனியா மாவட்டத்தில் பிறந்த சதாசிவம் சதானந்தன் (விக்கீசு) ஜீவனா (போராளி) மண இணையருக்கு பவித்திரன், யாழன்பன், கோவரசன் என மூன்று பிள்ளைகள் உள்ளன.
கீழே தரப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
குடாரப்பில் கரையிறங்கிய அணியோடு பளையூடாகச் சென்று இணைவதில் தடையேற்பட்டபோது கேணல் தீபனின் பணிப்புக்கமைய மிகக் குறைந்தளவு போராளிகளுடன் வாழ்வா சாவா என்ற போராட்டத்திடையே உறுதியாக நின்று பளையில் எதிரியின் எதிர்ப்பை முறியடித்து அணிகளின் இணைவுக்கு வழிசமைத்தார்.
25.04.2001 தீச்சுவாலை நடவடிக்கைக்கு முன்பாக அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவற்றுள் ஒன்றான வலுவான காப்பரண்களைக் குறுகிய காலத்தில் பணியாளர்களைக்கொண்டு சிறப்பாக அமைத்து முடித்தார்.
மேலும் அவரோடு நின்ற பணியாளர்கள் அவரின் நடத்தையால் ஈர்க்கப்பட்டு அந்தச் சமரில் நேரடியாகக் கலந்து குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினர். இது அவரது பொறியாண்மை ஆற்றலையும், ஆளுமையையும் வெளிப்படுத்திய ஒரு நிகழ்ச்சியாகும்.
11.08.2006 முகமாலையில் இடம்பெற்ற சமரில் கிளாலிக் கரையூடு முன்னேறிய எமது அணியினரை எதிரி சுற்றிவளைத்து எமது உடைப்புப் பகுதியை மூடும் நிலை உருவாகியது. அப்போது பிரிகேடியர் தீபனின் பணிப்புக்கமைய அணியோடு சென்ற விக்கீசு அவர்களோடு இணைந்து கிளாலி உடைப்பு மூலையில் 150 மீற்றர் கரைப்பக்கமும் கிளாலி முகமாலைக் கோட்டிலும் நிலையமைத்து நின்றார்.
எதிரியின் தாக்குதலால் இந்த நிலையின் நீளம் குறுகியபோதும் அணியினர் எல்லோரும் வெளியேறும் வரை எதிரி அந்தப் பகுதியை மூடாது தடுத்து நின்றார்.
11.10.2006 முகமாலையில் இடம்பெற்ற எதிரியின் வலிந்த தாக்குதலின்போது களநிர்வாகத்தைப் பொறுப்பெடுத்து இரண்டாவது கோட்டிற்கான காப்பரண்களை விரைவாக அமைத்ததுடன் சமரின் ஒரு கட்டத்தில் இரண்டாவது கோட்டுச் சமரையும் வழிநடத்தி எதிரிக்குப் பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்.
23.04.2008 அன்று முகமாலையில் இடம்பெற்ற வலிந்ததாக்குதல் முறியடிப்புச் சமரின்போது, இறுதியாக மீட்டகப்பட்ட NP08 நிலைக்கு அவரோடு நின்ற வடிவரசனுடன் ஆறு போராளிகளை அனுப்பி பின்பு அங்கு வந்த நித்திலனின் அணியுடன் இணைந்து அந்தக் காப்பரணை மீட்கும் பணியை நிறைவாகச் செய்தார்.
லெப்.கேணல் விக்கீசு ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன். 10.08.2008 அன்று வீரச்சாவடைந்தார்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தகவல்: பிரிகேடியர் தீபன்
நினைவுரை: செ.யோ.யோகி (2008).
தொகுப்பு: சமராய்வு மையம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
விடுதலைக்கான போரில் இழப்புக்கள் ஏற்படத்தான்செய்யும்: அதனையும் தாண்டி இலட்சியத்தை அடைவோம்: பிரிகேடியர் தீபன்
இலட்சியத்தை நோக்கிய எமது விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கும். ஆனால், விடுதலைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறான பல துன்பங்களை தாண்டித்தான் விடுதலையை வென்றெடுக்கவேண்டும் என்று விடுதலைப்புலிகளின் வடபோர் முனை கட்டளை தளபதி பிரிகேடியர் தீபன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற லெப்டினன்ட் கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்க உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தனது உரையில் மேலும் கூறியதாவது:-
சிறிலங்கா படை தமிழ்மக்கள் மீது உளவியல்போர் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கின்றது. மக்கள் வாழ்விடங்களில் வான் தாக்குதல் நடத்தியும் எறிகணைத்தாக்குதல் நடத்தியும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகின்ற முயற்சியில் சிறிலங்கா ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழ்மக்கள் இடமளிக்ககூடாது. எதிரியின் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்துகொள்வதற்கு பதுங்குகுழிகளை அமைத்தும் அரண்களை அமைத்தும் பாதுகாப்பினை தேடவேண்டும்.
தமிழ்மக்கள் போரியல் சூழலுக்கு ஏற்றவாறு தமது வாழ்க்கையை மாற்றவேண்டும். இவ்வாறு எதிரியின் தாக்குதலில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துகொண்டு விடுதலைக்கான பணியினை விரைவுபடுத்தவேண்டும். இதன்மூலம்தான் விடுதலைக்கான போரில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் கனவினை நனவாக்க தமிழர்கள் ஒவ்வொருவரும் போராடவேண்டும்.
விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்படத்தான்செய்யும். ஆனால், நாம் தொடர்ந்து போராடிவருகிறோம். எதிரி தமிழ்மக்களுக்கு பாரியஅழிவுகளை – உயிரிழப்புக்களை – ஏற்படுத்தி தமிழ்மக்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கிவருகின்றான்
விடுதலைக்கான போரில் இவ்வாறான துன்பங்களை தாண்டித்தான் வெற்றிகளை பெறமுடியும். விடுதலைக்கான அர்ப்பணிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த அர்ப்பணிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சிறிலங்கா படைகள் நினைப்பதை செய்து முடிக்கமுடியாது. எதிரிக்கு அவலத்தை கொடுத்து எமது வாழ்வை மாற்றவேண்டும். இதுதான் நாம் மாவீரர்களுக்கு செய்கின்ற பணியாக இருக்கும். இப்பணியை நிறைவேற்றி முடிப்பது தமிழ்மக்கள் அனைவரதும் கடமையாக இருக்கும். இதன்மூலம் விடுதலையை வென்றெடுக்கமுடியும்.
புளியங்குளத்தை புரட்சிக்குளமாக்கிய லெப்.கேணல் விக்கீஸ்வரன்
லெப்டினன்ட் கேணல் விக்கீஸ்வரன் 16 ஆண்டுகளாக தேசவிடுதலைக்காக உழைத்தவர். சிறந்த நிர்வாகத் திறமை மிக்க – துணிவுமிக்க – தளபதி. 1991 இல் தனது உடன்பிறப்பு ‘ஆகாயக் கடவெளி சமரில்’ வீரச்சாவடைந்தவுடன், தனது உடன்பிறப்பின் கனவை நனவாக்க விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவர்.
விடுதலைப் போராட்டத்தில் இவரது தொடக்கப் பணியாக புதியபோராளிகளை உருவாக்குவதில் ஈடுபட்டார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் ஒரு ஆண்டு காலமாக சண்டைகளில் ஈடுபட்டவர்.
1997 இல் – ஜெயசிக்குறு காலப்பகுதியில் – சிங்களப்படைகளின் நடவடிக்கைக்கு எதிராக – என்னுடன் நின்று நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு – புளியங்குளத்தை புரட்சிக்குளமாக்கியதில் விக்கீசுக்கும் பெரும் பங்குண்டு. சிறிலங்கா படையினரின் பளை படைத்தளத்தை உடைத்தெறிந்து, இத்தாவிலில் நிலைகொண்டிருந்த எமது அணிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு ஒரு தடைநீக்கியாக விளங்கியவர்.
ஒவ்வொரு விடுதலைப் போராளியையும் இழக்கின்றபோது அது எமக்கு பேரிழப்பாக இருக்கின்ற போதும் இம்மாவீரர்களின் கனவினை நனவாக்க நாம் அனைவரும் அணிதிரள்வதுதான் இம்மாவீரர்களுக்குச் செய்யும் பெரும் வணக்கமாக இருக்கமுடியம்.
இவ்வாறு பிரிகேடியர் தீபன் தெரிவித்தார்.
வீரவணக்க நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச் சுடரினை மாவீரர்பணிமனை பணிமுதல்வர் பொன் தியாகம் ஏற்றினார். விக்கீஸ்வரனின் துணைவியார் வித்துடலுக்கான ஈகச்சுடரினை ஏற்றி மலர் மாலை சூட்டினார். தொடர்ந்து, மலர் மாலைகளை அவரது பிள்ளைகள், உடன்பிறப்புக்கள், பிரிகேடியர் தீபன், லெப்டினட் கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி சிறப்புத் தளபதி கோபால் ஆகியோர் சூட்டினர்.
கிளிநொச்சிக் கோட்ட அரசியற்றுறைப் பொறுப்பாளர் கலைவாணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீரவணக்கவுரைகளை சமராய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி, பிரிகேடியர் தீபன் ஆகியோர் ஆற்றினார். மலர் வணக்கத்தை வவுனியா மாவட்ட கட்டளைத் தளபதி லோறன்ஸ் ஆரம்பித்து வைக்க மக்கள் மலர் வணக்கத்தினைத் தொடர்ந்து வித்துடல் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூயவிதை குழியில் விதைக்கப்பட்டது.
தகவல்: பிரிகேடியர் தீபன்
தொகுப்பு: சமராய்வு மையம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
0 கருத்துகள்