Ad Code

Recent Posts

லெப். கேணல் தென்னரசனின் வரலாற்று நினைவுகள்

லெப்.கேணல் தென்னரசன் 
ஜெகணேசன் அழகேசன் 
தமிழீழம்:மன்னார் மாவட்டம் 
தாய் மடியில்:18:07:1977
தாயக மடியில்:13:08:2006

 பல்துறை நிபுணன் லெப். கேணல் தென்னரசன்.


மன்னார் மாவட்டம் பெரியமடுவை சொந்த ஊராகக் கொண்ட தென்னரசன் 1994ம் ஆணடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். படைய தொடக்கப் பள்ளியில் அடிப்படை பயிற்சியை முடித்த தென்னரசன் மன்னார் மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். 


வேவுப் புலியாக தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி தென்னரசன் மன்னார் பகுதியில நிலைகொண்டிருந்த எதிரியின் தளங்களுக்குள் தனது குழுவை இலகுவாக அழைத்துச் சென்று ஏராளமான தரவுகளை சேகரித்து வந்தான். இவனுடைய நுண்ணறிவு, பொறுமை, திசைகாட்டி மற்றும் வரைபடங்களை சரியாக பயன்படுத்தும் திறன், காடுகளில் விரைவாக நகரும் திறன் ஆகியவற்றால் தனது சக வேவுப் போராளிகளுக்கு சிறந்த முன்னுதாரணமான வேவு வீரனாக தென்னரசன் வளர்ந்தான். சுமார் இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக தள்ளாடி முகாம் உள்ளிட்ட எதிரியின் முன்னரங்க நிலைகள் முதலானவற்றில் வேவு நடவடிக்கைகளில இளம் போராளி தென்னரசன் முழுவீச்சுடன் ஈடுபட்டான். மேலும் எதிரியின் நிலக் கண்ணிவெடிகளை கண்டு பிடித்து அகற்றுவதிலும் எமது தளங்களை பாதுகாக்க நிலக் கண்ணிகளை விதைப்பதிலும் தென்னரசன் திறமையாக செயற்பட்டான்.


1996ம் ஆண்டு ஆரம்பத்தில் தென்னரசன் லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் ஒரு போராளியாக இணைக்கப்பட்டான். இங்கும் படையணியின் வேவு அணியில் இளம் லீடராக தனது செயற்பாட்டை தொடர்ந்தான். இயக்கத்தின் புகழ் பூத்த வேவுப் போராளியான வீரமணியுடன் இணைந்து தள்ளாடி பெருந்தளத்தின் பல பகுதிகளிலும் வேவு நடவடிக்கைகளில ஈடுபட்டார். பின்னர் “ஓயாத அலைகள் 01” நடவடிக்கைக்காக எதிரியின் முல்லைத்தீவு படைத்தளத்தின் வேவு நடவடிக்கைகளிலும் தென்னரசன் செயற்பட்டார். 


முல்லைத்தீவு சண்டை துவங்கிய போது தாக்குதல் அணிகளை பாதுகாப்பான பாதைகளூடாக அழைத்துச் செல்வதில் இவர் திறமையாக செயற்பட்டார். கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எதிரியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலக் கண்ணிவெடிகளை தேடிக் கண்டுபிடித்து “கிளியர்” செய்கின்ற ஆபத்தான கடமைகளில் தென்னரசன் சிறப்பாக செயற்பட்டார். இதனால் இவர் தளபதிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்ற இளம் அணித்தலைவனாக வளர்ந்தார்.


இவனுடைய வரைபட அறிவு மற்றும் புதிய போர்க் கருவிகளை, ஆயுதங்களை கையாளுவதில் இருந்த ஆர்வம் ஆகியவற்றால் பொறுப்பாளர்களால் பெரிதும் கவரப்பட்டு இவனை மோட்டார் அணியில் இணைத்து பயிற்றுவித்து ஊக்கபடுத்தினர். அங்கு விரைவிலே சிறந்த சூட்டாளனாகவும், வரைபடக்காரனாகவும் எறிகணைத் திருத்தங்களை கூறும் ஓ.பி போராளியாகவும் தென்னரசன் வளர்ந்தான். தன்னுடைய வேவு அனுபவங்களூடாகப் பெற்ற திசைகாட்டி மற்றும் வரைபட அறிவை இளம் லீடர்களுக்கு பயிற்றுவிக்கும் இளம் ஆசிரியராக வளர்ந்தான். 


களமுனையில் ஓய்வில்லாத கடமைகளுக்கு இடையில் தென்னரசனிடம் குறுகிய கால பயிற்சிகளைப் பெற்று கொண்ட பல அணித்தலைவர்கள் பிற்காலத்தில் சிறந்த களச் செயற்பட்டாளர்களாக விளங்கினர்.

1997ல் “ஜெயசிக்குறு” முறியடிப்புச் சமரில் தென்னரசன் வேவுப் போராளியாகவும், ஓ.பி.காரனாகவும் செயற்பட்டான். சுமார் ஒரு வருடம் நடைபெற்ற இந்த நீண்ட சண்டையில் படையணியின் அதிரடி தாக்குதல் தளபதியாக விளங்கிய ராகவன் அவர்களுடன் தென்னரசன் நின்றிருந்தது சிறப்பாக கடமையாற்றினான். தென்னரசனின் திறமைகளை இனங்கண்ட ராகவன் அவனுக்கு பல விதமான கடமைகளை வழங்கி ஊக்கபடுத்தினார். இச்சமரில் இவன் படுகாயமுற்று சில கிழமைகள் சிகிச்சையில் இருந்தான். ஜெயசிக்குறு முறியடிப்புச் சமருக்குப் பிறகு தென்னரசன் கிளிநொச்சி உருத்திரபுரம் முன்னரங்கில் வேவு அணி லீடராக செயற்பட்டான். மேலும் இக்காலத்தில் இளம் அணித் தலைவர்களுக்கு போர்ப் பயிற்சி ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் 81 மி.மீ மோட்டார் அணி லீடராக பொறுப்பேற்று கடமையாற்றினார். பல இளம் போராளிகளை சிறந்த சூட்டாளர்களாக தென்னரசன் உருவாக்கினார்.


“ஓயாத அலைகள் – 02 ” நடவடிக்கை சமரில் மோட்டார் அணி லீடராக தென்னரசன் சிறப்பாக செயற்பட்டான். மேலும் கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டவுடன் எதிரி மறைத்து வைத்திருந்த நிலக் கண்ணிவெடிகளையும், கிளைமோர்களையும் கண்டறிந்து அகற்றுகின்ற முக்கிய கடமையில் தென்னரசன் செயற்பட்டான். சிறப்புத் தளபதி சேகர் அவர்களின் பணிப்பிற்கமைய பல இளம் போராளிகளை இச் செயற்பாட்டில் பயிற்றுவித்தான். 


கிளிநொச்சி மீட்புக்கு பிறகு ஆனையிறவு – பரந்தன் களமுனையில் ஊரியானிலிருந்து சுட்டதீவு வரையிலான எமது முன்னரங்கில் மோட்டார் அணி லீடராக தென்னரசன் தொடர்ந்து கடமையாற்றினார். படையணியின் சிறப்புத் தளபதியாக ராகவன் அவர்கள பொறுப்பேற்ற போது படையணியின் மூத்த தாக்குதல் தளபதி மதன் கனரக ஆயுத ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட போது தென்னரசன் கனரக ஆயுத போர்ப் பயிற்சி ஆசிரியராக பணியாற்றினார். இந்நாட்களில் இசைவாணன், வரதன், இசையமுதன் முதலான அணித் தலைவர்களை போர்ப் பயிற்சி ஆசிரியர்களாக ராகவன் அவர்கள் உருவாக்கி படையணியை சிறப்புப பயிற்சிகளில் ஈடுபடுத்தினார். தென்னரசனின் திறமைகளை மேலும் வளர்க்கும் வகையில் அவரை முதுநிலை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் இணைத்து பயிற்றுவித்தார் ராகவன்.

“ஓயாத அலைகள் – 03” நடவடிக்கை துவங்கிய போது அதிகாரிகள் பயிற்சி கல்லூரியிலிருந்து திரும்பிய தென்னரசன் மோட்டார் அணி லீடராக தொடர்ந்து செயற்பட்டார். கண்ணிவெடிகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார். மன்னாரில் படையணி நிலை கொண்டிருந்த போது அப்போதைய சிறப்புத் தளபதி ராஜசிங்கம் அவர்களுடன் தென்னரசன் செயற்பட்டார். ஆனையிறவை மீட்ட இத்தாவில் தரையிறங்க சமரில் தாக்குதல் தளபதியான வீரமணியுடன் தென்னரசன் இணைந்து இயக்கச்சி பகுதியில் செயற்பட்டார். வேவு நடவடிக்கைகளிலும் பின்னர் இயக்கச்சி சந்தியில் தடையை உடைத்து பளையை நோக்கி முன்னேறிய வீரமணியின் முதன்மையான கொமாண்டராக தென்னரசன் களமாடினார். 


இவ் வீரம்மிக்க நடவடிக்கையில் இவருடன் றமணன், வரதன், அருமை முதலான அணித் தலைவர்களும் சிறப்புடன் களமாடினர். ஆனையிறவு மீட்கப்பட்ட பிறகு படையணி கிழக்கு அரியாலை, கனகம்புளியடியில் கடமையில் இருந்தபோது அங்கே தென்னரசன் கொம்பனி லீடராக செயற்பட்டார். அங்கு சிங்கள இராணுவம் மேற்கொண்ட பாரிய முன்னேற்ற முயற்சிகளை வீரமணி முறியடித்த வரலாற்று சிறப்புமிக்க சமரில் தென்னரசனின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.


படையணியின் சிறப்புத் தளபதியாக சேகர் அவர்கள் மீணடும் பொறுப்பேற்ற பிறகு போர்ப் பயிற்சி கல்லூரிக்கு வந்த தென்னரசன் தாக்குதலணிகளை சிறப்புப பயிற்சிகளில் ஈடுபடுத்துவதில் கடமையாற்றினார். “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கை துவங்கிய போது தாக்குதல் தளபதி கோபித்துடன் நின்றிருந்து இவர் செயற்பட்டார். பின்னர் வீரமணி அவர்கள் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற போது முகமாலை களமுனையில் வீரமணியின் கட்டளை மைய கொமாண்டராக கடமையாற்றினார். 


வீரமணியின் மெய்க்காப்பாளராகவும் தென்னரசன் செயற்பட்டார். தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் தென்னரசன் வீரமணி அவர்களின் கட்டளை மைய கொமாண்டராக தென்னரசன் நின்றிருந்தது தள பாதுகாப்பில் தீவிரமாக களமாடினார். மேலும்  முன்னரங்கில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தாக்குதலணிகளுக்கு மோட்டார் சூட்டாதரவுகளை ஒருங்கிணைத்து தந்தார். தாக்குதல் போராளிகளுக்கு வெடிபொருட்கள், உணவு முதலானவை தடையின்றி கிடைப்பதில் சிறப்பாக செயற்பட்டார்.


இச் சமருக்குப் பிறகு படையணியின் பத்தாம் ஆண்டு நிகழ்வு கிளிநொச்சி நகரில் நிகழ்ந்த போது விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி நடத்தியதில் தென்னரசன் முக்கிய பங்காற்றினார். பின்னர் படையணி நாகர்கோவில் களமுனையில் கடமையில் இருந்த போது தென்னரசன் வீரமணி அவர்களின் கட்டளை மைய கொமாண்டராக தொடர்ந்து கடமையாற்றினார்.

2002ல் படையணி போர்ப் பயிற்சிக் கல்லூரியில் நிலை கொண்டிருந்த போது நிர்வாகத்தில் செயற்பட்ட தென்னரசன், அங்கு மேனிலை மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பு பயிற்சிகளில் பங்கேற்றார். 2003ல் படையணி மீணடும் முகமாலை களமுனையில் கண்டல் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்த போது அங்கே சிறப்புத் தளபதி நகுலன் அவர்களுடன் நின்ற தென்னரசன் “மேஜர் றோய் அதிகாரிகள் பயிற்சி கல்லூரி”யின் பொறுப்பாளனாக இருந்து அணித் தலைவர்களுக்கு மேனிலை மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பு பயிற்சியை வழங்கினார். 


இவரிடம் பயின்ற மூத்த அணித் தலைவர் பாவலன் பிற்காலத்தில் சிறந்த போர்ப் பயிற்சி ஆசிரியராகவும், மோட்டார் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டார். மேலும் இப்பயிற்சியில் ஈடுபட்ட அன்பு உள்ளிட்ட பல அணித்தலைவர்கள் தொடர்ந்து வந்த சண்டைகளில் மிக சிறப்பாக செயற்பட்டனர். மேலும் அணித் தலைவர்களுக்கு றேடார் கருவி, தூரம் அறியும் கருவி முதலானவற்றிலும் தென்னரசன் பயிற்சி அளித்தார். புதிய கருவிகளை கையாளுவதில் நிபுணத்துவம் பெற்றிருந்த தென்னரசன் ஆயுதங்களை பழுது பார்த்து சரி செய்வதிலும் திறமையானவராக இருந்தார். 


தென்னரசனின் வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்று சிறந்த சாரதியாகவும் விளங்கினார்.

2004ம் ஆண்டில்  மட்டக்களப்பில் துரோகி கருணாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி கோபித் அவர்களின் கீழ் ஒரு பிளாட்டூன் கொமாண்டராக தென்னரசன் களமாடினார். மட்டக்களப்பில் இருந்து வந்த பின், போர்ப் பயிற்சிக் கல்லூரியில் தாக்குதலணியில் கொம்பனி பொறுப்பாளராக செயற்பட்டார். 2005ம் ஆணடில் கல்லூரியிலும், கண்டல் பகுதி முன்னரங்கிலும் தனது கொம்பனியுடன் நின்ற தென்னரசன் தொடர்ந்து போராளிகளை பயிற்சிகளிலும் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபடுத்தினார்.

2006ம் ஆண்டில் முகமாலை முன்னரங்கின் பின்தளத்தில் தனது தாக்குதலணியுடன் நின்ற தென்னரசன் அணிகளை பயிற்றுவித்ததிலும் காவற் கடமையிலும் முழுவீச்சுடன் செயற்பட்டார். முன்னரங்கிற்கு படையணி மாற்றப்பட்ட பின்பு முன்னரங்க நிலைகளை பலப்படுத்துவதிலும், முறியடிப்புத் தாக்குதலுக்கு ஏற்ப அணிகளை பிரித்து நிலைப்படுத்தவதிலும் தென்னரசன் ஓய்வின்றி செயற்பட்டார்.

2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ம் நாள் யுத்தம் வெடித்த போது கிளாலி முன்னரங்கின் தாக்குதல் தளபதியாக தென்னரசன் செயற்பட்டு தீவிரமாக களமாடினார். எதிரியின் முன்னரங்க தடைகளைத் தகர்த்து கிளாலி கடற்கரைப் பகுதியில வெற்றிகரமாக முன்னேறினார். ஆனால்  மீணடும் தொடர் காவலரண் வரிசைக்கு வர பணிக்கப்பட்டதால், பின்னோக்கி வந்த தென்னரசன் தொடர் காவலரண்களை கைப்பற்றும் சண்டையில் எதிரியின் முற்றுகைக்குள்ளாகி படுகாயமுற்று அங்கே வீரச்சாவைத தழுவிக் கொண்டார். அவருடன் நின்ற மூத்த அணித் தலைவர் கோகிலேசும் மற்ற தோழர்களும் தீவிரமாக போராடி எதிரியின் முற்றுகையை உடைத்து தென்னரசனின் உடலை வெளியே கொண்டு வந்தனர்.

இளம் பருவத்திலே தமிழீழ விடுதலை வேட்கையுடன் இயக்கத்தில் இணைந்த தென்னரசன் மிகச் சிறந்த முன்னுதாரணமான போராளியாக வளர்ந்தார். நவீன போர் முனையின் அனைத்து துறைகளிலும் தனது காலடித் தடங்களை பதித்தார் தென்னரசன். தேசியத் தலைவரிடம் பாராட்டுக்களையும் சான்றிதழ்களையும் பலமுறை பெற்ற போராளியாக விளங்கினார். 


வேவுப் புலியாக தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய தென்னரசன் வேவு அணி லீடர், மோட்டார் அணி லீடர், கண்ணிவெடி அணி லீடர், ஓ.பி போராளி, போர்ப் பயிற்சி ஆசிரியர், ஆயுதங்கள் பழுது நீக்குபவர், மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பாளர், தாக்குதல் தளபதி என அனைத்து தளங்களிலும் சிறப்புடன் செயற்பட்டு படையணியின் நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்கினார்.


லெப். கேணல் தென்னரசன் அவர்களின் இழப்பு இயக்கத்திற்கு பேரிழப்பாக இருந்தாலும் அவரால் பயிற்றுவிக்கப்பட்ட பல போராளிகள் பல்வேறு சமர்க்களங்களில் திறமையாக போராடினர். அவருடைய மாந்தநேயம், எளிமை, நேர்மை, துணிவு, பொறுப்புணர்வு, தொலைநோக்கு யாவும் இளம் போராளிகளுக்கு சிறந்த வழிகாட்டலாக அமையும். தென்னரசன் அவர்களின் போராட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறப்பு மிக்க அத்தியாயமாக விளங்கும். 



வருங்கால இளம் தலைமுறைக்கு லெப். கேணல் தென்னரசன் அவர்கள் சிறந்த வழிகாட்டியாக திகழ்வார்.


நினைவுப்பகிர்வு: பெ.தமிழின்பன் 


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த
இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code