Ad Code

Recent Posts

பல் வைத்தியர் சுதர்சனின் வரலாற்று நினைவுகள்

சிறப்பு மருத்துவப் போராளியாகவும் நோயாளிகளின் அன்பிற்குரியவனாக‌வும் மட்டுமன்றி பின்நாளில் இளம் பல் வைத்தியனாக தமிழீழத்தின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டவனாகி எம் மக்கள் எல்லோருக்கும் வேண்டியவனுமானான்.


எங்கள் சுதர்சன் (பல் வைத்தியர்) எங்கே?


உடுப்பிட்டி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் தவப்புதல்வனாய். 1975 ஆண்டு “றூபன்” என்ற இயற்பெயருடன் அந்த குடும்பத்தின் வரவாகியவன். குடும்ப பாசத்தை நெஞ்சினில் சுமந்து ஈழமண் காக்க, விடுதலைப் போரிற்கு தன் தோள் கொடுக்கப் புறப்பட்டான்.


காலம் அவனை மருத்துவத்துறைக்கு அனுப்பியது. .மருத்துவப் போராளியாக இருந்த போதே பல் மருத்துவத்தைக் கற்று அதில் சிறப்பு பெற்று வளர்ந்தான். போராளிகளின் பயிற்சி முகாம் தொடங்கி விசேட பாசறைகள்‌ வரை சுதர்சனின் நடமாடும் பல் வைத்திய சேவை விரிந்தது. அது மட்டுமின்றி நடமாடும் மருத்துவ சேவையுடாக ஊர் ஊராய் சென்று மக்களின் பல் நலன்காத்த உத்தம புத்திரன். .


2002 ஆம் ஆண்டின் பின்னர் முற்று முழுதாக மக்களிற்காக மருத்துவ தேவையைப் பார்த்து கொண்டிருந்த தமிழீழ நிழலரசின் அங்கமான தமிழீழ சுகாதார சேவையில் சுதர்சனின் கால்கள் பதித்த நாட்கள் முதன்மையானவை. போராட்ட வாழ்வில் அவன் மக்களிற்கு மருத்துவ சேவை செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தினான். வடக்கு மட்டுமன்றி, கிழக்கு மாகாணம் வரை அவன் கால்கள் பதிந்தன. தமிழீழ சுகாதார சேவையின் ஓயாத புயலானான். தியாகதீபம் தீலிபன் மருத்துவமனைகளிலும் சிறப்புப் பல் வைத்தியனாக வலம் வந்தான்.


பாடசாலை மணவர்களும் சுதர்சனை‌ மறந்து விடமாட்டார்கள் .பற்சுகாதர அணியுடன் ஒவ்வொரு பாடசாலைகளாய் ஏறியிறங்கி வர, முன் காப்பதற்காய் பற்சுகாதாரம் பற்றி தெளிவூட்டல் கருத்தரங்குகளை மாணவர்கள் மட்டுமின்றி சாதாரண‌ மக்களும் புரியும்படி செயற்படுத்துவதில் அவனுக்கு நிகர் அவனே. எப்பொழுதும் சோர்ந்து போகாத மனவுறுதி கொண்டவன். தன்னுடன் சேர்ந்து பணிபுரிவோர்களையும் உற்சாகமாகவே வைத்திருக்கும் நகைச்சுவை திறன் கொண்டவன். எப்போதும் மற்றவர்களின் திறமைகளை பார்த்து வாழ்த்துவதில் பின் நிற்கமாட்டான்.





ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்றால் வாகனவசதி கிடைக்காவிட்டாலும் ஏதோவொரு வழியில் சென்று கடமை முடிப்பான். தூக்கம், பசி எல்லாமே அவன் கடமை கண்டு அஞ்சிப்போகும்.

ஒரு பொழுது அக்கராயன் மருத்துவ மனையில் வேலை முடித்து இரவு இரண்டு மணியளவில் கிளிநொச்சியில் உள்ள எமது கிளி மருத்துவ மனைக்கு வரும் வழியில் நித்திரை’, பசி களைப்பால் வந்த அசதியால் கோணாவில் அக்கரையான் வீதியில் நிறுத்தி‌ வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரப்பெட்டியுடன் மோதி மூக்கில் காயத்துடன் இரத்தம் சிந்த வந்து சேர்ந்தான்‌. நண்பர்கள் எல்லோரும் “நின்ற பெட்டியை உடைத்த பெருமைக்குரியவ ன்” அதை சொல்லி சொல்லி சிரித்தால் தானும் சேர்ந்து சிரித்து சமாளித்து விடுவான்

மூக்கில் தையல்கள் போடப்பட்டன அன்று, அடுத்த நாள் நாகர்கோவில் பகுதியில் மக்களிற்கான சிறப்பு மருத்துவ முகாம்‌ ஒழுங்கும் ஒன்று இருந்தது.


“சுதர்சன் நீங்கள் வர வேண்டாம் தையல் போட்டிருக்கு, பற் சிகிச்சையை நிறுத்திவிட்டு மற்றவைகளைப் பார்ப்போம். நீங்கள் ஓய்வு எடுங்கள்” என்று பொறுப்பு வைத்தியர் கூற இல்லை என்று அடம்பிடித்து முதல் ஆளாய் பற்சிகிற்சைப் பொருட்களுடன் வாகனத்தில் ஏறிக்கொண்டது, இன்றும் அவன் பணிபற்றியதை நினைத்துப் பெருமைப்பட வைக்கின்றது.


சில நாட்கள் முன் கிளிநொச்சி மாவட்ட வேராவில் கிராமத்தை சேர்ந்த வயதான தாயொருவருடன் கதைத்தேன் எந்தத் தடுமாற்றமும் இன்றித் தெளிவாகப் பெயர் சொல்லி “சுதர்சன் டொக்டர்‌ இப்போ எங்கே” என‌க் கேட்டபோது பதில் சொல்ல‌ முடியாமல் தவித்து நின்ற எனக்கு அந்தப் பிள்ளை என்ர பல்லை எப்படி நோகாமல் கொள்ளாமல் வடிவா கதைச்சு கதைச்சுப் பிடுங்கிவிட்டவர். வெற்றிலை போடக்கூடாது ,புகையிலையும் போட வேண்டாம் என்று ஒவ்வொரு முறையும் கிளினிக்( clinic ) வரும் போது சொல்லிச் சொல்லி நிறுத்த வைத்திட்டார். தங்கமான பிள்ளை அது தான் என்ர வருத்தம் எல்லாம் குறைஞ்சு உயிருடன் இருக்கிறன். இந்த வயது வரை அதை நான் மறக்கவில்லை என்றார்‌”

இவரைப் போல் இன்னும் எத்தனை அம்மாக்கள் உன்னைத் தேடிக்கொண்டிருப்பார்கள் சுதர்சன்.


இவன் நாட்டிற்கும் எம் மக்களிற்கும் செய்த சேவைகளை மறந்து போகமாட்டார்கள். ஊர் உறங்கிப் போனாலும் உன் நினனவுகள் .ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கும் எம் மண்ணிலிருந்து………………..

இவனது சேவையின் சாட்சியாய் இவரைப் போல் இன்னும் பலரும் உயிருடன் உள்ளனர். நீ மட்டும் இன்றில்லை மருத்துவ பொருட்களிற்கு தடை போட்ட நாட்களில் கிடைத்த தொழில் நுட்பத்தில் Diagnostic Radiology (X _ray) பரிசோதனைகள் செய்வதில் அன்று நீ எங்கள் போராளி நோயாளிகளின் கதாநாயகன். “சுதர்சன் அண்ணா எப்ப எக்ஸ்ரே எடுக்கிறது” என்று மருத்துவமனையில் உள்ள என்பு முறிவு நோயாளர்கள் உன்னையே சுற்றுவார்கள். அதற்கான மருத்துவப் பொருட்கள் வரும்வரை அவர்களை சமாளிக்க‌ நீ படும்பாடு. ஏன் எம்மைக் கேட்டாலும் நாம் தப்பிவிட உன்னைத் தானே காட்டுவோம்.


உனக்கு உதவியாக எந்த போராளி வந்தாலும் உனக்கு தெரிந்தவற்றை அவர்களிற்கு சொல்லிக்கொடுத்து அவர்களை அத்துறையில் வளர்ப்பதில் உனக்கு நிகரில்லை. மருத்துவப் பிரிவில் மட்டுமின்றி படையணி போராளிகள், பொறுப்பாளர்கள் ,தளபதிகள் என்று‌‌ நட்பு பாராட்டிய தோழன்


“எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்த நீ, இன்று எல்லோரையும் தேடலில் தவிக்க விட்டுச் சென்றாயே. யாருக்கு என்ன உதவி தேவையென்றாலும் முதலாவது ஆளாக வந்து நிற்பாயே

”! அன்றொரு நாள் உடனே இரத்தம் ஏற்ற வேண்டியிருந்தபோது முதலாவது ஆளாக நீதானே தந்தாய். சுதர்சன்.உன் நினைவுகள் என்றென்றும் எம்முடன் வாழும்”.

இவ்வாறு அண்மையில் பெண் போராளி இவன்‌ நினைவைப் பகிர்ந்து கொண்டாள்.


இவன்‌ தன் தேசத்தை மட்டும் நேசிக்கவில்லை. நண்பர்களையும் அதிகமாக நேசித்தான். ‌அவர்கள்‌‌ எதைக்கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் செய்து முடிப்பது இவனுக்குத் தனிச்சிறப்பு . சில வேளைகளில் நண்பர்களிற்காக நீயே தண்டனையையும் பெற்றிருக்கின்றாய். அவ்வளவு பரந்த மனம். மற்றவர்களின் மகிழ்வில் இவன் முகம் மலரும்‌. , இவனுக்கு நண்பர்கள் பல செல்லப்பெயர்களை வைத்து அழைத்த போதும் நீ கடிந்து கொண்டதாய் நான் அறியவில்லை.

சுதர்சன்‌‌ உந்துருளியில் பயணிக்கும் போது வீதியால் எந்தத் தாய் நடந்து வந்தாலும் அவர்களை ஏற்றி உன் பயண முடிவுவரை அழைத்துப் போவாய், ‌

இன்று அமரத்துவம் அடைந்து விட்ட மாவீரனின் தாயும் நாட்டுப்பற்றாளரும், மருந்தாளருமாக இருந்த கந்தசாமி அம்மாவை நான் பார்த்த போது கட்டிப்பிடித்து கதறிவிட்டு சுதர்சன் எங்கே இருக்கிறான் என்று கேட்டா நான் நொருங்கிய இதமாய் தவித்து உன் செய்தியை ஆறுதலாகவே சொன்னேன் உன் இழப்பிலிருந்து மீளமுடியாது தவித்தா, “என்ர பிள்ளை எங்க கண்டாலும் என்ன ஏத்தி கொண்டுபோய் விடும்”


தன் மனத்திற்கு எது சரியோ அதை செய்துவிடுவான்.புகைப்படம் எடுப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு இப்படியான குறும்பு தனங்களிற்கு தண்டனை வாங்குவதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை அவன்.

நான் பிரான்ஸ் சென்ற போது உன் நண்பர் ஒருவர் புகைப்படங்களை வைத்து உன் நினைவில் உருகிப்போய் இருப்பதை பார்த்தேன், உனக்கு எப்போதும் பிடித்த இந்த பெட்டி சேட் புகைப்படங்கள் அவரிடம் பெற்றதே உன் காதுகளிற்கு கேட்காத இந்த நினைவுகளை நாம் எமக்குள் சொல்லிக் கொள்கின்றோம், உன் அன்பிற்கும் மதிப்புற்குமான மூத்த வைத்தியர்கள் உன் பற்றிய நினைவுகளை பேசும் போதெல்லாம் உடைந்து போகின்றார்கள். உன் உறவுகள் நீ இல்லாத செய்தியால் கண்ணீரில் கரைகின்றனர்….

உனக்கு கேட்காத அந்த செய்திகளை நாம் அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றோம்…


இறுதி நாளில் நீ எங்கே போனாய் என்று இன்றுவரை அறியாதவர்களாய்த் தேடுகின்றோம்


எப்படி மறப்பது நடமாடும் வைத்திய சேவையின் தமிழீழச் சிறப்பு பல் மருத்துவர் சுதர்சன் ஒன்றாக இருந்த நாட்களை‌

இறுதியாக வட்டுவாகலில் மே 17,ம் திகதி வைத்து விசாரணைக்காக‌ இலங்கை இராணுவ புலனாய்வு துறையினர் கூட்டி சென்று இருத்தி வைத்திருந்ததை பார்த்ததாக உன் நண்பன் வண்ணன் கூறினான். இன்று வரை எங்கே என்று தேடுகின்றோம்‌.

சுதர்ஷன் பற்றிய நினைவுகள் நெஞ்சக்கூட்டை பலமாய் அழுத்துகின்றது. நிஜமாக அவனுடன் பேசமுடியவில்லை எம் நிழலாக விட்டுச்சென்ற கனதிகளுடன் பேசுகின்றோம்.

மிதயா கானவி. 


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த
இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code